வியாழன், 9 செப்டம்பர், 2021

நியூசிலாந்து தாக்குதல்தாரி இலங்கையில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டாரா? – விஷேட விசாரணை முன்னெடுப்பு

 வீரகேசரி : நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையரான மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் தொடர்பிலான சி.ஐ.டி. மற்றும் எஸ்.ஐ.எஸ். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதிலின் முகப்புத்தக பதிவொன்றினை மையப்படுத்தி, அவருக்கு இலங்கையில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு எதிராக தாக்குதல்  ஒன்றினை நடாத்தும் எண்ணம் இருந்தது என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதில் இலங்கையில் தாக்குதல் ஒன்றினை நடாத்த திட்டமிட்டாரா என விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
சமூக வலைத் தளங்களிலும், சில ஊடகங்களிலும், நியூசிலாந்து ஊடகங்களை மேற்கோள் காட்டி, ஆதில், இலங்கைக்கு வந்து இங்குள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நல்ல பாடம் ஒன்றினை புகட்ட வேண்டும் என  முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்ததாகவும், அதனூடாக அவர் இலங்கையில் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவயிடம் வினவிய போது, குறித்த விடயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி. ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்னவின் ஆலோசனையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கையின் காத்தாண்குடி, பண்டரகம – அட்டுலுகம,  மொரட்டுவ, கொழும்பு பகுதிகளில் வசித்துள்ள ஆதில் தொடர்பில், தற்போது காத்தாண்குடியில் வசிக்கும் அவரது தாயாரான இஸ்மாயில் பரீதாவிடம் எஸ்.ஐ.எஸ். எனும் தேசிய உளவு சேவையும், சி.ஐ.டி. அதிகாரிகளும் தனித்தனியாக வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். அதனைவிட ஆதிலின் இலங்கை நண்பர்கள், நெருக்கமனவர்களிடமும் வாக்கு மூலங்கள் சில பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

‘நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்ததாக கூறப்படும் நபரின் , இலங்கையிலுள்ள நெருக்கமானவர்கள் அனைவரிடமும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலதிக விடயங்களை வெளிப்படுத்திக்கொள்ள இந்த விசாரணைகள் தொடர்கின்றன.’ என இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் மாணவர் வீசாவில் நியூசிலாந்து சென்றுள்ள  ஆதில், அதன் பின்னர் அங்கு 2013 ஆம் ஆண்டு அகதி அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

நியுசிலாந்தின், மேற்கு ஒக்லான்ட் நகரில் நியூலின் பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு சொந்தமான ‘ கவுன்ட் டவுன் ‘ எனும் பல்பொருள் அங்காடியில் கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் 2.45 மணியளவில்  மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் கத்திக்குத்து பயங்கரவாத தாக்குதலை நடாத்தியிருந்தார்.

குறித்த தாக்குதல்தாரி கடந்த 2016 மார்ச் 23 ஆம் திகதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்  என அடையாளம் காணப்பட்டதாக நியூசிலாந்து பொலிஸ் தகவல்கள் வெளிப்படுத்தின.

அப்போது பாரிஸ் மற்றும் பிரசல்ஸ் நகரங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை சமூக வலைத்தள பதிவூடாக ஆதில் நியாயப்படுத்தியதன் ஊடாக இவ்வாறு அடையாளம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் சமூக வலைத்தள பதிவுகள் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்துள்ளமையால் அவர் தொடர்பில் நியூசிலாந்து அவதானத்துடன் இருந்துள்ளது.

இந்நிலையிலேயே கடந்த 2017 மே மாதம் ஒக்லாந்து சர்வதேசவிமான நிலையத்தில் வைத்து, ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காக செல்ல முற்பட்டார் என்ற சந்தேகத்தில் ஆதில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் நோக்கி செல்ல அவர் அங்கு சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வன்முறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் கையேடுகள், பாரிய கத்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டு பயங்கரவாத தாக்குதலுக்கு தயாரானதாக கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதில் நியூசிலாந்து மேல் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குறைந்த பட்ச தண்டனைக்கே ஆதில் முகம் கொடுத்துள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள ஆதில்  கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் மீளவும் பாரிய கத்தியொன்றினை கொள்வனவு செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக விசாரணைகள் தொடர்ந்த நிலையில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அவரின் அகதி அந்தஸ்தும் நீக்கப்பட்டு அவரை நாடு கடந்த அந் நாட்டு குடிவரவு குடியகல்வு  பனியகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் அதற்கு எதிராக ஆதில் மேன்முறையீடு செய்தமையால் அந் நடவடிக்கை  நிலுவையில் இருந்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கடந்த 2021 ஜூலை மாதம் மீள சிறையிலிருந்து ஆதில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

24 மணி நேரமும் கண்காணிக்கப்படவேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் குறித்த  கத்திக் குத்து தாக்குதலை நடாத்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை: