புதன், 8 செப்டம்பர், 2021

புதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும்! அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிரடி அறிவிப்பு

கலைஞர் செய்திகள்  : புதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும்!  தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  அதிரடி அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடியினருக்கு ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேரவையில் அறிவித்துள்ளார்.
"அதிமுக அரசு கிடப்பில் போட்ட சமத்துவபுரம் மீண்டும் செயல்படும்” : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும். 39 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாயக் கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடியினருக்கு ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும்.

வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். 13 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

31 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்படும். 92 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் மற்றும் 48 விடுதிகளுக்கு ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும். மாநில அரசின் சிரப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படி மத்திய அரசு வழங்குவதற்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.

கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் - கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் - நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மூன்று புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும். ஆதிதிராவிடர் விடுதி மானவர்களுக்கு விழா நாட்களில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவுக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலுள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ. 92 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படும். 512 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான்கள் வழங்கப்படும். 51 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களுக்கு இன்வர்ட்டர் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். 2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.3 கோடி செலவில் நீர்பாசனத்துக்கான பிவிசி குழாய்கள் வாங்குவதற்காக தலா ரூ.15,000 மானியமாக வழங்கப்படும்.
"அதிமுக அரசு கிடப்பில் போட்ட சமத்துவபுரம் மீண்டும் செயல்படும்” : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.2 கோடி செலவில் புதிய மின் மோட்டார் வாங்க தலா ரூ.10,000 மானியமாக வழங்கப்படும். 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் காடுகள், நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும். 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழில் மேலாண்மை பயிற்சிகள் ரூ.2 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு அடைகாப்பகச் சேவை வழங்கும் புதிய திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூ.50,000 வீதம் 100 நபர்களுக்கு மானியம் வழங்கப்படும். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஏனைய நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும். தாட்கோ செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் மொத்த அளவில் கருவிகள் வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை: