புதன், 8 செப்டம்பர், 2021

கோடநாடு வழக்கு... நேபாளம் விரையும் தனிப்படை?

 நக்கீரன் செய்திப்பிரிவு  :   லகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷாஜி, அனீஸ் என்ற இருவரிடம் சுமார் 5 மணிநேரம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பங்களா காவலாளி கிருஷ்ணா தாபாவை நேபாளத்திலிருந்து அழைத்துவரத் தனிப்படை நேபாளம் விரைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா தாபாவை ஏற்கனவே கடந்தமுறை அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதேபோல் மீண்டும் அதே காவல் அதிகாரிகளை அனுப்பி கிருஷ்ணா தாபாவை அழைத்துவரத் தனிப்படை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  மேற்கு மண்டல ஐ.ஜி,தனிப்படை காவலர்களுடன் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: