ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

400 ரயில் நிலையங்கள் 150 ரயில் வழித்தடங்கள், 21 விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு

 Giridharan N - Samayam  :  பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த் விஜய் தலைமையில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்.
நாடு முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்கள், 150 ரயில் வழித்தடங்கள், 21 விமான நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எரிவாயு குழாய் திட்டங்கள், பிஎஸ்என்எல் நிறுவனம், 26 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் பல்வேறு கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து தனியார் மயமாக்கலை கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'இந்த தனியார்மயமாக்கலால் கட்டுக்கடங்காத அளவு விலைவாசி உயரும். வேலைவாய்ப்புகள் இழக்கும் நாட்டு மக்கள் அடிமைகளாக வாழ வேண்டிய சூழல் வரும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: