
நடித்த திரைப்படம். மத்திய வயதான Kateகும் பள்ளி மாணவன் ஒருவனுக்கும் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அந்த மாணவனுக்கு kateன் உடல் மேல் ஆசை. Kateகோ அவன் பையில் வைத்திருக்கும் புத்தகத்தின் மேல் ஆசை. இவள் முதலில் தன் உடலை அவனுடன் பகிர்ந்து கொள்ள, அவன் தான் வைத்திருக்கும் புத்தகத்தை அவளுக்கு படித்து காட்ட வேண்டும். ஒரு புத்தகம் படிப்பதற்காக தன் உடலை தர வேண்டுமா , வேண்டுமானால் தானே ஒரு புத்தகத்தை வாங்கலாம். பணம் இல்லை என்றால் நூலகம் செல்லலாமே? புத்தகம் வாங்குவது அவள் பிரச்சனை அல்ல. அதை படிப்பதில் தான் பிரச்சனை. அவளுக்கு புத்தகம் படிக்க தெரியாது.
கொஞ்ச நாட்களாக இப்படி தொடரும் அவர்களின் உறவு திடீரென்று ஒரு நாள் நின்று போகும். Kate காணாமல் போவாள். தினமும் அவள் வீட்டிற்கு சென்று ஏமாந்து போவான் அந்த மாணவன். சிறிது நாட்கள் கழித்து வழங்கறிஞருக்கு படிக்கும் அந்த மாணவன் கோர்ட்டில் நடக்கும் ஒரு முக்கியமான வழக்கை நேரில் காண்பதற்காக அழைத்து செல்லப்படுவான். அதில் தவறே செய்யாத ஒற்றை குற்றவாளியாக kate நிறுத்தப்பட்டிருப்பாள். அவளை கண்ட அந்த மாணவன் அதிர்ச்சி அடைவான். அவனை கண்டு kate அதிர்ச்சி அடைவாள்.
அந்த குற்றத்தில் இருந்து அவள் தப்பிக்க ஒரே ஒரு உண்மையை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவனுக்கு தெரியும் அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று. தனக்கு எழுத படிக்க தெரியாது என்பதை ஒப்புக்கொண்டால் அவளுக்கு விடுதலை.
தன் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதை விட அவளுக்கு எழுத படிக்க தெரியாது என்பதை ஒப்புக்கொள்வதை மிக அவமானகரமான எண்ணி குற்றத்தை ஏற்று கொண்டு ஆயுள் தண்டனைக்கு ஆளாவாள். அதன் பிறகு அந்த மாணவன் வழியாக சிறையில் இருந்தபடி அவள் எப்படி எழுத படிக்க கற்றுக்கொள்கிறான் என்பது அவளுக்கு கல்வியின் மேல் எவ்வளவு தீராத தாகம் இருந்தது என்பதையும் விவரித்து, மிகுந்த மன அழுத்தத்துடன் திரைப்படம் முடியும்.
திரைப்படம் 2 : The gifted hands : Ben Carson என்கிற ஒரு neurosurgeonனின் உண்மை கதை. ஒட்டிப்பிறந்த இரண்டு குழந்தைகளை முதன்முறையாக வெற்றிகரமாக பிரித்த மருத்துவர். அவரை பற்றிய கதை என்றாலும் கதையின் நாயகி அவரது தாய் Sonya. Sonyaவிற்கு எழுத படிக்க தெரியாது. அதை அவமானமாக கருதி தனக்கு எழுத படிக்க தெரியாது என்பதை தன் பிள்ளைகளிடம் இருந்து மறைக்க பல வழிகளிலும் முயற்சி செய்வார். கணவர் இல்லாமல் தன் இரண்டு குழந்தைகளை வளர்ப்பார். டிவி பார்ப்பதை குறைத்து நூலகத்தில் அதிக நேரம் செலவு செய்ய ஊக்கப்படுத்துவார்.
வீடு வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் sonya புதிதாக ஒரு வயதான தம்பதியர் வீட்டிற்கு வேளைக்கு சேர்வார். அவரின் வேலையில் மிகவும் திருப்தி அடைந்த அந்த வீட்டுக்காரர் 'உனக்கு என்ன உதவி வேண்டுமோ என்னிடம் தயங்காமல் கேள்' என்பார். அவர்கள் அமர்ந்திருக்கும் இடம் அவரின் reading room . அறை முழுவதும் புத்தகங்களால் நிறைந்திருக்கும். Sonya அந்த வீட்டுக்காரரிடம் 'இங்கிருக்கும் அத்தனை புத்தகங்களையும் நீங்கள் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்பார். சற்றும் எதிர்பாராத அந்த கேள்வியால் கொஞ்சம் திடுக்கிட்டு பின்பு சிரித்து கொண்டே இல்லை என்று பதில் அளிப்பார் அந்த வீட்டுக்காரர். 'எனக்கு இந்த புத்தகங்களை படிக்க சொல்லி தாருங்கள்' என்று Sonya கேட்பார்.
எனக்கெல்லாம் கல்வி என்பது மிக எளிதாய் கிடைத்தது. பள்ளி, கல்லூரி காலங்களில் படிப்பதை தவிர வேறு வேலைகள் எதுவும் இருந்ததில்லை. ஒரு போதும் என் கல்வி தடைப்பட்டதேயில்லை. அப்பாவிற்கு கல்வியின் மேல் பிரியம் அதிகம். நான் மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். எனக்கு கல்வி மேல் அதிக நாட்டம் இருந்ததில்லை. மனதை அலைபாய விட்டிருக்கிறேன். அதனால் அப்பாவின் மருத்துவ கனவை நிராகரித்து விட்டேன். ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் இன்றும் கூட ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.அந்த ஆசையில் முழு கவனம் செலுத்தாததால் அது வெறும் கனவாகவே போய்விட்டது.
ஒரு வேளை ஆசிரியர் ஆகி இருந்தால் , அதுவும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகி இருந்தால் Kate, Sonya வை போல் பல குழந்தைகளை பார்த்திருக்க முடியும். பிறருக்கு கொடுக்க கொடுக்க ஒன்று வளருமானால் அது அறிவாய் மட்டுமே இருக்க முடியும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தான் நான் ஆசிரியர் ஆகாமல் விட்டுவிட்டேனே என்று அதிகம் ஏங்குகிறேன்.
மேட்டுக்குடிக்கு மட்டுமே சொந்தமான கல்வி, மடைதிறந்த வெள்ளமாய் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்தது ஒன்று அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை.அதை இந்த அரசு நம் கண்முன்னே சட்டங்கள் என்னும் பெயரில் பறித்து கொண்டிருக்கிறது. நாமும் இன்னமும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறோம். இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கிய, நீதி கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட, கர்ம வீரர் காமராஜரால் விரிவாக்கப்பட்ட மதிய உணவு திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளது இந்த அரசு. கல்வியின் பயன் அறியாத வயதில் குழந்தைகளுக்கு பொது தேர்வை திணித்து கொண்டிருக்கிறது. அந்த பொது தேர்வை எழுத குழந்தைகள் வேறு பள்ளிகளுக்கு செல்வதல்லாமல் கூடவே என்னென்ன எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் பட்டியலிட்டுள்ளது அரசு. 5ஆம் வகுப்பு செல்லும் குழந்தை தான் கொண்டு செல்லும் lunch boxகூட அம்மா சொல்லித்தான் எடுத்து செல்லும்.இதற்கு மேலும் குழந்தைகளிடம் ஒரு அரசு வன்மத்தை கக்க முடியுமா என்று தெரியவில்லை.
நாளை நம் பேரக்குழந்தைகள் நம்மிடம் 'என்ன பாட்டி/தாத்தா நீங்க படிச்சிருக்கீங்க நாங்க ஏன் படிக்கல?' என்று கேட்பார்கள். அப்போது சொல்வோம் 'அழிந்து போகும் பொருட்செல்வத்தை சேர்ப்பதில் busyயா இருந்துட்டேன்' என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக