திங்கள், 3 பிப்ரவரி, 2020

டிஎன்பிஎஸ்சி: அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!

டிஎன்பிஎஸ்சி: அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!மின்னம்பலம் : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி ) நடத்திவரும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வில் முதல் நூறு இடங்களைப் பிடித்தவர்களில் 39 பேர் இராமேஸ்வரம், கீழக்கரை மையத்தில் தேர்வு எழுதியிருந்தது சந்தேகத்திற்கு வித்திட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்குக் காரணமானவர்களைப் பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை, 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. ஏற்கனவே குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைதுசெய்துள்ள நிலையில், இதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஜெயகுமார் மற்றும் போலீஸ் எஸ்ஐ சித்தாண்டி ஆகியோரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இவரைக் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு பரிசு வழங்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி அறிவித்துள்ளது.
இந்த முறைகேட்டில் பெண்கள் உட்படப் பலரும் துணிச்சலாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், நேற்று (பிப்ரவரி 2) நடந்த விசாரணையில் திருவிக நகரை சேர்ந்த விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சுதா, விழுப்புரம் வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுதா ரூ.8 லட்சம் பணம் கொடுத்து 252 மதிப்பெண்கள் பெற்று குரூப்-2ஏ தேர்வில் 11-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சுதாதேவி ஏழு இலட்சம் ரூபாய் கொடுத்து 279 மதிப்பெண்கள் பெற்று 15-வது இடத்தையும், விக்னேஷ் ரூ.9 லட்சம் பணம் கொடுத்து 46-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த முறைகேடுடன் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை செயலக ஊழியரான திருஞானசம்பந்தம், காஞ்சிபுர மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வடிவு மற்றும் ஆனந்த் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணை தலைமை செயலகம் வரை நீளுமா என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் டி.என்.பி.எஸ்.சி. : “என் மீது கை வைத்தால் சிஎம் ஆபீஸ் வரை சிக்கும்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டால் அடுத்தடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் எத்தனை முக்கியப் புள்ளிகள் சிக்க இருக்கிறார்கள் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: