சனி, 8 பிப்ரவரி, 2020

7 பேரும் விரைவில் விடுதலை! மத்திய அரசிடம் ஆலோசிக்கும் கவர்னர் மாளிகை!

7 tamilsnakkheeran.in - இரா. இளையசெல்வன் : சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் அவர்களின் விடுதலையில் வெளிச்சம் உருவாகியிருக்கிறது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும் நிலையில் விடுதலை விவகாரத்தில் முக்கிய ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

நளினி, பேரறிவாளன், முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பதை கடந்த 2018, செப்டம்பர் 6-ந் தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதனையடுத்து செப்டம்பர் 9-ந் தேதி தமிழக அமைச்சரவையை கூட்டி விவாதித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரைத்தார்.
ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்கவில்லை. அரசியல் கட்சிகள், தமிழ்த்தேசிய அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்தும் விடுதலை செய்யும் விவகாரத்தினை கிடப்பிலேயே இன்று வரை வைத்திருக்கிறார் கவர்னர்.

           
இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தின் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நளினி.  அந்த வழக்கு கடந்த ஜனவரி 8-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை பெற்றிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என கூறியிருந்தது மத்திய அரசு. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள்  முடிவெடுக்க வேண்டும் என ஆளுநரை நிர்பந்திக்க முடியாது எனவும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
             


மத்திய அரசின் நிலைப்பாட்டையும் குறிப்பாக ஜனாதிபதியின் முடிவும் தெரியாமல் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது எவ்வித முடிவையும் எடுப்பதில்லை என தமிழக ராஜ்பவன் உறுதியாக இருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்ததால் ரிலாக்ஸ் ஆனார் ஆளுநர். மத்திய பாஜக அரசின் அந்த நிலைப்பாடு அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அதேசமயம்,  பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.  
            
இந்த சூழலில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு கடிதங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை கவர்னர் பெறத் தேவையில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அப்படி அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும்,  கவர்னர் எந்த முடிவையும் எடுக்காமல் காலதாமதம் செய்தபடியே இருந்தார்.
             
இந்நிலையில், நளினி தொடர்ந்த வழக்கு வெள்ளிக்கிழமை (7.2.2020) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களின் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என பதில் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த பதிலால் ஏழு பேர் விடுதலையில் நீடித்து வந்த அரசியல் மற்றும் சட்டரீதியிலான முட்டுக்கட்டைகள் நீங்கியிருக்கிறது. அதனால், கவர்னரை முடிவு எடுக்க வலியுறுத்த காலநிர்ணயம் செய்யப்பட வில்லை என  இனியும் காரணங்களை கவர்னர் மாளிகை அடுக்கிக்கொண்டு இருக்க முடியாது. அதனால், விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்; செய்யப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள்.
              
நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்திருக்கும் இந்த சூழலில், ஜனாதிபதியுடனும் சட்ட நிபுனர்களுடனும் ஆலோசனை நடத்தியப் பிறகே இதில் முடிவெடுக்க தீர்மானித்துள்ளது கவர்னர் மாளிகை!


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


கருத்துகள் இல்லை: