சனி, 20 அக்டோபர், 2018

அமிர்தசரஸ் ரயில் விபத்து ..அமைச்சர் மனோஜ் சின்ஹா : எங்கள் மீது தவறு இல்லை! ராவணன் மீதுதான் தவறோ?

THE HINDU TAMIL : அமிர்தரசரஸில் 59 பேர் ரயில்மோதி பலியான விபத்தில் ரயில் டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது, ரயில்வே துறையின் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமிர்தரஸில் உள்ள ஜோதா பதக் எனும் இடத்தில் தசரா பண்டிகையின் இறுதிநாளான நேற்று ராவணன் வதம் நடந்தது. அப்போது ராவணன் உருவபொம்மை எரிக்கப்பட்டு, பட்டாசுகள் கொளுத்தப்பட்டபோது,அதைப் பார்க்க மக்கள் அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தனர். அப்போது, அந்த வழியே சென்ற ரயில் மோதி 59 பேர் பலியானார்கள், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கு ரயில் டிரைவர் அலட்சியத்துடன் ஓட்டியதும், அதிகவேகத்தில் வந்ததும் காரணம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய மத்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமிர்தசரஸில் ஜோதா பதக் ரயில்விபத்தில் 59 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரயில்வே துறை காரணமில்லை. ரயில்வேயின் தவறுமில்லை. ரயில்வே துறைக்கு தசாரா விழா நடத்துவது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. ஆதலால், ரயில்வே துறையின் பக்கம் எந்தவிதமான தவறும் இல்லை. அதேசமயம், ரயில் ஓட்டுநர் விதிமுறைப்படியே செயல்பட்டுள்ளதால், அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது.

விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூடியிருக்கும் காட்சி
 எதிர்காலத்தில் ரயில்வே இருப்புப்பாதைக்கு அருகே இதுபோன்ற விழாக்களை நடத்தக்கூடாது என்பதில் இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்திருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அதேசமயம், வழக்கமான விசாரணைகள், ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பணிகள், நிர்வாக ரீதியான விசாரணை விதிமுறைப்படி நடக்கும். விபத்து நடந்த இடத்தில் வளைவான பகுதி இருப்பதால், அங்கு மெதுவாகச் செல்லும்படி ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர் அந்த இடத்தில் மெதுவாகவே வந்துள்ளார். ஆதலால், அவர் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கமுடியும். இவ்வாறு அமைச்சர் சின்ஹா தெரிவித்தார்.
பெரோஸ்பூர் மண்டல ரயில்வே மேலாளர் விவேக் குமார் கூறுகையில், ரயில் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. எந்தவிதத்திலும் விதிமுறை மீறல் நடக்கவில்லை. ரயில் மணிக்கு 91 கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருந்தது, கூட்டத்தைப்பார்த்ததும், டிரைவர் 68 கி.மீக்கு ரயில்வேகத்தை குறைத்தார்.
ரயில் பாதையில் மக்கள் நின்றிருந்தது அங்குள்ள புகைமூட்டமான சூழலில் டிரைவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயம், பட்டாசு சத்தம் காரணமாக ரயில் கொடுத்த ஒலியையும் மக்கள் கவனிக்கவில்லை. டிரைவர் பிரேக்கை அழுத்திய போதிலும் ரயில் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது எனத் தெரிவித்தார்.

அஸ்வானி குமார்
 ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வானி லோஹானி கூறுகையில், ரயில்விபத்து நடந்த அமிர்தசரஸ் மற்றும் மானாவாலா ரயில் நிலையங்கள் இடையே லெவல் கிராஸிங்கும் இல்லை.
ஆதலால், ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வந்துள்ளது. அதேசமயம், ரயில் பாதையில் ரயில் வருவதையும் மக்கள் கவனிக்கவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. இந்த இடைப்பட்ட பகுதியில் எந்தவிதமான ரயில்வே ஊழியரும் இல்லை. லெவல் கிராசிங் இருக்கும் பகுதியில் மட்டுமே ஊழியர் இருப்பார்கள் என்பதால் இங்கு நியமிக்கப்படவில்லை.
ஒருவேளை ரயில் டிரைவர் அவசர பிரேக்கை அழுத்திருந்தால், விபத்து இதைக்காட்டிலும் இன்னும் மோசமாக இருந்திருக்கும். ரயில்டிரைவர் கூட்டத்தினரைப் பார்த்ததும் வேகத்தைக் குறைத்தார், ரயிலும் வேகம் குறைந்துதான் வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
தசாரா நிகழ்ச்சியை ரயில்வே இருப்புப்பாதைக்கு அருகே நடத்தப்போகிறோம் என்று எங்களிடம் முன்கூட்டியே எந்தவிதமான அனுமதியும் பெறவில்லை எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: