சனி, 20 அக்டோபர், 2018

தண்டவாளத்தில் அத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை .. ரயில் டிரைவர் சாட்சியம்

punjap1தினமணி :தண்டவாளத்தில் அத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை: ரயில் ஓட்டுநர் ரயில்வே தண்டவாளத்தில் அத்தனை பேர் நின்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை என அமிருதசரஸ் விபத்து குறித்து ரயிலை இயக்கிய ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் நேற்று தசரா விழாக் கொண்டாட்டத்தின் போது ரயில் மோதியதில் 61 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், ரயிலை இயக்கிய ஓட்டுநரைப் பிடித்த காவல்துறையினர், லூதியாணா ரயில் நிலையத்தில் வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ரயிலை இயக்க எனக்கு பச்சை சமிக்ஞை கிடைத்தது. வழக்கம் போலவே ரயிலை இயக்கினேன். ஆனால், தண்டவாளத்தில் அத்தனை பேர் நின்றிருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அப்பகுதி ரயில்வே மண்டல மேலாளர் கூறுகையில், இந்த விபத்துக்கு ரயில்வே எந்த வகையிலும் பொறுப்பேற்காது. தண்டவாளத்துக்கு அருகே நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது தவறு. இந்த நிகழ்ச்சிக்கு ரயில்வேயிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
அதே சமயம், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட லைன் மேன், தண்டவாளத்தில் ஏராளமானோர் நின்றிருப்பது பற்றி தகவல் தெரிவிக்காதது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: