வியாழன், 18 அக்டோபர், 2018

இதுவரை எந்த பெண்ணையும் உள்ளே விடாத ஐயப்ப குண்டர்கள் .. அரசு என்ன செய்கிறது?

20 மணி நேரமாகியும் எந்தப் பெண்ணும் செல்லவில்லை!மின்னம்பலம்: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் போராட்டக்காரர்களுடன் சமசர பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பெண்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், கடந்த இரண்டு நாட்களும் சபரிமலையில் பதற்றம் நிலவி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் நிலக்கல் பகுதி பல்வேறு குழுக்களின் போராட்டக் களமாக மாறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பை மீறியும் போராட்டக்காரர்கள் பெண்களைக் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால்,போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

தாக்குதல்

சபரிமலை பக்தர்கள் என்ற போர்வையில் போராட்டத்தில் ஈடுபட்ட வலதுசாரி இந்துக் குழுக்கள் மற்றும் பிஜேபியை சேர்ந்தவர்கள், அரசு வாகனங்கள், பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. கடைகள், பெட்ரோல் நிலையங்கள், விடுதிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நிலக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பிஜேபி இளைஞரணியைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சபரிமலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று(அக்டோபர் 18) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம்,நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை தந்திரி

சபரிமலை கோயிலுக்குள் இளம்வயது பெண்கள் வந்தால், சபரிமலை கோயில் மூடப்படும் என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு.
சபரிமலையில் மாதாந்திர பூஜைகள் மற்றும் பிற சடங்குகளைச் செய்வது எங்களது கடமை. நாங்கள் பாரம்பரியத்தை உடைக்கமாட்டோம். பெண்களுக்கு மதிப்பளிக்கக் கூடிய இடம்தான் சபரிமலை என தெரிவித்தார்.
ஆனால், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை மாற்றக் கூடாது .உச்ச நீதிமன்றம் பாரம்பரியத்தை கருத்தில் கொள்ளாமல் சட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வன்முறையினால் எதையும் சாதிக்க முடியாது. சபரிமலை பகுதியில் பக்தர்கள் அல்லாதவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் சபரிமலை வருவதைத் தயவு செய்து தவிர்க்க வேண்டும். சபரிமலையைக் கலவர பூமியாக்க வேண்டாம் என தந்திரி கண்டரரு ராஜீவரு கூறினார்.
சென்னை
சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்குக் கேரள அரசை கண்டித்து சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது. மயிலாப்பூர் சாய்பாபா கோயில் தொடங்கி கபாலீஸ்வரர் கோயில் வரை பேரணி நடைபெற்றது.
கமாண்டோ படை
சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பம்பை,நிலக்கல் போன்ற இடங்களில் ஏற்கனவே 100 பெண் காவலர்கள் உள்பட 700 ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்படவுள்ளனர். முழு அடைப்பு போராட்டத்தால் அரசு பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கமாண்டோ படை போலீசார் பம்பை வருகை தந்துள்ளனர் என காவல் துறை டிஜிபி லோக்நாத் பெஹரா தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர்
சபரிமலைக்குப் பெண்கள் செல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் நடத்தும் போராட்டத்தை குற்றம் சாட்டியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த தீர்ப்பையடுத்து, முதல் முறையாகக் கோயில் நடை திறக்கப்பட்டு 20 மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், இன்னும் எந்தப் பெண்ணும் பதினெட்டாம் படியைக் கூட அடையமுடிய வில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இத்தகைய போராட்டத்தை ஊக்குவித்தால் "பின்தங்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே சபரிமலைக்கு செல்ல முடியாமல் புறக்கணிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.
ஆர்எஸ்எஸ் தலைவர்
சபரிமலை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தி இருப்பதாகவும், மக்கள் அனைவரும் இணைந்து பல்லாண்டுகளாக பின்பற்றி வந்த பாரம்பரியம் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அமைதியின்மையையும், கொந்தளிப்பையும்,பிரிவினையையும் ஏற்படுத்தி இருப்பதாக மோகன் பாகவத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: