நட்பு நாடு என்று கூறிக்கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நாசகரமான தாக்குதல் நடத்தி முதுகில் குத்தும் இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இலங்கை அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, ஒவ்வொரு மீனவருக்கும் 60 லட்சம் ரூபாய் அபராதம் என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் மனித நேயமற்றதும் அநியாயமானதுமான தீர்ப்பாகும். இதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்படியொரு கொடுமையான புதிய சட்டம் வந்த போதே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்த சட்டத்தை திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன்.
ஆனால் அது பற்றியெல்லாம் வழக்கம் போல் கிஞ்சிற்றும் கவலைப்படாத மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அறவே ஒதுக்கி வைத்துவிட்டது. அ.தி.மு.க அரசும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் தூங்கி விட்டது. இதனால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் கண்ணீர் சிந்தும் நிலை உருவாகி, அவர்களின் குடும்பங்கள் எல்லாம் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. டீசல் விலை உயர்வு, இலங்கைக் கடற்படைத் தொல்லை, படகுகள் பறிமுதல், இலங்கை அரசின் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் போன்ற பன்முனைத் தாக்குதலில் சிக்கி தமிழக மீனவர்களின் வாழ்க்கை அநியாயமாகப் பாழ்படுத்தப்படுகிறது.
ஆகவே, மத்திய அரசு இனிமேலும் பொறுமையாக இருக்காமல், இலங்கை அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனித நேயம் சிறிதுமின்றி இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு அறிவுரை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக