செவ்வாய், 13 மார்ச், 2018

கமல் கட்சியில் தமிழிசையை சேர்த்துள்ளனராம் .. தமிழிசைக்கு ஈமெயில் அனுப்பிய..

கமல் கட்சியில்  தமிழிசைமின்னம்பலம் :நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர்ந்ததாக தனக்கு மெயில் வந்துள்ளதாக பாஜக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன், கட்சியின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். மக்கள் நீதி மையத்திற்கு இணையதளம் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இதுகுறித்து திருப்பூரில் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.
சொன்னால் அதிர்ச்சியடைவீர்கள். கமல் கட்சியிலிருந்து எனக்கு மெயில் வந்துள்ளது. அதில், 'நீங்களும் நானும் நாமானோம். இன்றுமுதல் நம் கட்சியில் நீங்கள் உறுப்பினரானீர்கள் என்று கூறி எனக்கான உறுப்பினர் எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது (ஐ பாட்டை காட்டினார்) என்ற கூறிய தமிழிசை, ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு மெயில் அனுப்பியுள்ளனர். ஒரு பாஜக மாநிலத் தலைவரையே கமல் கட்சியில் இணைத்துள்ளனர் என்றால் எந்த உறுப்பினரை நாம் நம்ப முடியும். கையில் கிடக்கும் இ-மெயிலுக்கெல்லாம் மெயில் அனுப்பி கட்சியில் இணைத்து விடுகின்றனர் போல" என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மையத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "மக்கள் நீதி மய்யத்தில் சேர யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இணையத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல் அனுப்பப்படும். செல்போன் எண்ணுடன் கட்சியில் பதிவு செய்தால் மட்டுமே இ-மெயில் வரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: