புதன், 14 மார்ச், 2018

இரண்டு லட்சம் நிச்சயம்: கமலின் திருச்சி கணக்கு!

மின்னம்பலம் : வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
இந்த மாநாட்டுக்குப் பெருந்திரளான மக்களைக் கூட்டி வரவேண்டுமென்பதற்காக திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதில் முக்கியமாக திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 11.03.2018 மாலை திருச்சியில் உயர்மட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அருணாசலம் தலைமையில் நடந்தது. திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் சுரேஷ் முன்னிலையில், வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் மேத்யூ, எஸ்.ஆர்.கிஷோர்குமார் மற்றும் அகில இந்திய பொறுப்பாளர் கோவை தங்கவேல் வழிகாட்டுதலில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் நடந்தபோது ஈரோட்டில் இருந்த கமல்ஹாசன், உயர் மட்டக் குழு உறுப்பினர் அருணாசலத்துக்குத் தன் உரையை செல்போனில் பதிவு செய்து அனுப்பி வைத்தார். அதைக் கூட்டத்தில் ஒலிபரப்பினார் அருணாசலம்.
என்ன பேசினார் கமல்?
“மதுரையில் நாம் கட்சி தொடங்கியதற்குப் பிறகு நடந்த ஒரு பிரஸ் மீட்டில், ‘மதுரையில் கூட்டம் பெரிதாக இல்லை என சொல்கிறார்களே...’ என்று கேட்டனர். அப்போது நான், ‘இது எண்ணிக்கையைக் காட்டும் கூட்டமல்ல’ எண்ணங்களைக் காட்டும் கூட்டம். எண்ணிக்கையைக் காட்டும் கூட்டமென்றால் திருச்சியில் வந்து பாருங்கள்’என்று சொல்லியிருக்கிறேன். அதனால் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும். நான் சொன்னதை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் கமல். இது தொடர்பாக நிர்வாகிகளுக்கு முக்கியமான ஆலோசனைகளையும் அளித்துள்ளார் கமல்ஹாசன்.

அதுபற்றி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டோம்...
“மற்ற எந்தப் பகுதிகளையும்விட திருச்சி சுற்றுப்புறம்தான் கமல்ஹாசனுக்குக் கள ரீதியான சாதகமான அம்சங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. கடந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும், நெடுவாசல் போராட்டத்திலும் ஈடுபட்ட நற்பணி இயக்கத் தலைவர் சுதாகர் கைது செய்யப்பட்டார். இது கமலைக் கோபமாக்கியது. உடனடியாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தார். இந்தக் கைதின் மூலம் கமலின் அரசியல் நடவடிக்கை துரிதப்பட்டது.
அதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் கமல் இயக்கத்தினர் சத்துணவில் தரமற்ற அழுகிப்போன முட்டைகள் கொடுக்கப்படுவதைக் கண்டுபிடித்தனர். (அதை முதலில் வெளியிட்டது மின்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது) இவ்வாறு கமல் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவரது இயக்கம் கள அரசியலுக்கு வந்துவிட்ட பகுதிதான் திருச்சி மண்டலம்.
எனவே, திருச்சியைச் சுற்றியுள்ள புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து அதிக கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் கமல். இந்த மாவட்டங்களிலிருந்து மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் திரட்டப்பட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள் நிர்வாகிகள். மீதி ஒரு லட்சம் பேரை தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து திரட்டலாம் என்பது திட்டம். ஆக, இரண்டு லட்சம் நிச்சயம் என்பது கமலின் கணக்கு.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியமான விஷயமே மிடில் கிளாஸ் மக்களை அதிகமாகக் கூட்டத்துக்கு அழைத்து வாருங்கள் என்பதுதான். ‘பெரும்பாலான பேர் டிவியில் லைவ் பார்த்துக்கலாம் என்று வீட்டிலேயே இருந்துவிடுவார்கள். ஆனால், கட்சியினர் வீடு வீடாகப் போய், ‘கமல் மேல இருக்கிற கோபத்துல கேபிள் எல்லாம் கட் பண்ணிடுவாங்க. அதனால் டிவியில பார்த்துக்கலாம்னு வீட்லயே இருக்காம கூட்டத்துக்கு வாங்க’ என அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றனர்.
சென்னை ஒய்.எம்.சி.ஏவில் கமல் நடத்திய மகளிர் தின விழாவுக்கு மாலை 6 மணி நிகழ்வுக்கு மதியம் 3.30 மணிக்குத்தான் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டது. அதுபோல திருச்சியில் போலீஸார் இழுத்தடிக்கக் கூடாது என்பதற்காகவும், அந்த விவகாரங்களைக் கையாள்வதற்காகவும் வழக்கறிஞர்கள் டீம் அமைக்கப்பட்டிருக்கிறது.
‘நம்மவரின் பலத்தை திருச்சியில் நிரூபித்துக் காட்டுவோம்’என்று சபதம் போட்டுச் சொல்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர். அதேநேரம் அதற்காக அவர்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் கடுமையாகத்தான் இருக்கின்றன.
ஆரா

கருத்துகள் இல்லை: