வெள்ளி, 16 மார்ச், 2018

அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !

ஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
தொழிலாளர் வர்க்கத் தலைமையே தொழிற்சங்கத்தின் உயிர் ! கி. வெங்கட்ராமன் போன்றவர்களின் தலைமையால் தொழிற்சங்க இருப்புக்கே ஆபத்து!அசோக் லேலண்ட் தேசம் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். நாடு முழுமைக்குமான பயணிகள் மற்றும் கனரக வாகன சந்தையில் 35% கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்தாண்டு 2016 – 17 மட்டும் 21,232 கோடிகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இலாபமாக 1,223 கோடிகள் மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஒசூரில் மூன்று யூனிட்களும், சென்னை எண்ணூரில் ஒரு யூனிட்டும், வடமாநிலங்களில்  மூன்று யூனிட்களும் என உற்பத்தி தளங்கள் உள்ளன.
நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுவதையும் தொழிலாளர் சட்டபூர்வ உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளை உருவாக்குவதையும் கொள்கையாக கொண்டு இடைவிடாது செயல்படுகிறது, AL நிர்வாகம் . 16,000 நிரந்தரத் தொழிலாளர்களை 5,000 மாகவும் குறைத்துவிட்டு உரிமைகள் ஏதுமற்ற காண்ட்ராக்ட் , தற்காலிக, பயிற்சித் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் நேரடி உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாலைகளில் INTUC போன்ற பொம்மை மாடல் சங்கமாக இல்லாத போதும் கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சங்களின் பேரம் பேசும் உரிமைகளை பறித்து, நிர்வாகத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கத் தலைமைகளை மாற்றி விட்டது, நிர்வாகம்.

இச்சூழ்நிலையில், புதியதலைமை – மாற்று சிந்தனை என்று ஒசூரில் யூனிட் 2 தொழிலாளர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கிய ஊதிய உயர்வு கோரிய ஒப்பந்தம் 12 மாதங்கள் இழுத்தடித்து கடந்த ஜூலை 2017 -ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பேசி முடித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கி.வெங்கட்ராமன் (தமிழ்த் தேசதியப் பேரியக்கம் எனும் கட்சியின் தலைவர் பெ. மணியரசன்) அவர்கள் இதை ஒரு ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ‘ என்கிறார். இவ்வொப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகளை காவு கொடுத்திருக்கிறதா? அல்லது மீட்டெடுத்திருக்கிறதா? எங்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது? என்பதை அலசிப் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.
புதிய ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் மீதான பணிச்சுமையும் உரிமைப் பறிப்புகளும்!
  1. நேரடி உற்பத்தி உயர்வு 12% . (தொழிலாளர்களின் கருத்தை மீறி அதாவது 8 மணி நேரத்தில் 440 நிமிட வேலை என்பதை 492 நிமிட வேலை செய்ய வேண்டும்.)
  2. நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட (சர்ப்ளஸ்) நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 348 பேர். இதனால் உயரும் உற்பத்தி அளவு 23.6% .
  3. 6 – வது நாள் வேலை கட்டாயம் இல்லை. அதாவது,சனிக்கிழமை வேலை கிடையாது (லே.ஆப்). இதன் உற்பத்தி அளவு 21% .
இவையெல்லாம் ஊதிய உயர்வுக்காக சங்கத் தலைமையை மண்டியிட வைத்து கைப்பற்றிக் கொண்டதாகும். இந்த ஒப்பந்த பலன் பெறும் நிரந்தரத் தொழிலாளர்கள்  1,650 பேர் மட்டுமே.  மேலும் யூனிட் 2 ஆலையில் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர் சுமார் 5,000 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்த பலன் ஏதும் கிடையாது. ஆனால், வேலைப் பளுவைமட்டும் சுமப்பார்கள்.
ஒப்பந்தம் மூலம்1,650 பேருக்கு இனி சனிக்கிழமை அன்று வேலை தரவேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கம் இந்த ஒப்பந்தத்தின்மூலம் ஒப்புக்கொண்டுள்ளது . பல ஆயிரம் கோடி லாபம் கொழுக்கும் இவ்வாலையில் 18/(1) ஒப்பந்தம் மூலமாக சட்டவிரோத லே ஆஃப் அமுலாகிறது. ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளிக்கு 6 -வது நாள் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் தன் உற்பத்தி தேவைகளை 5 வேலைநாட்களில் ஈடு செய்து கொள்ளும். 6-வது நாள் லே ஆஃப். அதாவது சனிக்கிழமை வேலை கிடையாது. தற்போது 5 வேலைநாட்களில் உற்பத்தி இலக்கை எட்டவேண்டும் என்ற அழுத்தத்தை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் 6 வது நாள் வேலை இல்லை(லே -ஆஃப்) எனும் கூர்மையான கத்தியை நிர்வாகத்திற்கு வழங்கிவிட்டது. இதை வைத்து தொழிற்சங்க தலைமையை மிரட்டி என்ன சாதிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும், இந்த அரசு அதிகாரத்தின் கீழ் உள்ள தொழிலாளர் உரிமைகளை பறிக்க 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்ற பிரதமர் மோடி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதற்குள் கொல்லைபுற வழியாக லே. ஆஃப்-ஐ திணித்துவிட்டது, லேலாண்டு நிர்வாகம் .
மற்றொரு புறம் GST வரியால் உயர்ந்த விலைவாசி, பஸ் கட்டண உயர்வு இவற்றால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உரிமைகள் ஏதுமற்ற தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 -வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை என்றால் ஒப்பந்த பலன் பெறாத இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். வாங்கும் அற்பக்கூலியில் மாதம் ரூ1,600 இழந்து விடுவார்கள். இது பேரிழப்பாகும். இதனால் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 13 கோடி இலாபம் கூடும். (பராமரிப்பு செலவுடன் ரூ 500 x 52 x 5000 பேர் = 13 கோடி ரூபாய்).
படித்தும் பொருத்தமான வேலையின்றியும், பணி நிரந்தரமில்லாத இளம் தொழிலாளர்கள் ஒசூரில் மட்டும் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவ்வொப்பந்தம் இவர்களை மிக மோசமான சமூக பாதிப்பு என்ற புதைகுழிக்குள் மேலும் இழுத்துச் செல்ல வழி வகுக்கிறது. இவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக மோசமான சமூக பாதிப்பை உருவாக்கிறது.
நமது சமூக அமைப்பில் நான்காம் வர்ணத்தாரின் உழைப்பிற்கு பார்ப்பனியம் உரிய மதிப்பை தந்ததில்லை!
காண்ட்ராக்ட் தொழிலாளர் உழைப்பிற்கு முதலாளித்துவம் உரிய மதிப்பை தருவதில்லை!

பணி நிரந்தரம் இல்லை என்ற முதலாளித்துவ கொள்கையால் ரிசர்வ் பட்டாளமாக இளம் தொழிலாளர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ரத்தத்தை சுவைத்து கொழுத்துக் கொண்டிருக்கிறது, நிர்வாகம். இவர்களைப் பற்றி நிர்வாகத்திற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. ஆனால், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் சப்தமில்லாமல் துணை போவதுதான் துரோகமாகும்.
மொத்தத்தில் 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தின்மூலம் யூனிட் 2 தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் நேரடி வேலைப்பளு 12% + சர்ப்ளஸ் 23.6% = 35.6% ஆகும். இதன் மதிப்பு 2990.4 கோடிகள் ஆகும். மேலும்,  மறைமுகமாக  லே-ஆப் மூலம் திணிக்கப்படும் உற்பத்தி 21%. இதன் மதிப்பு 1764 கோடிகள்.   என மொத்தமாக 4754.4 கோடிகள் விற்றுக்கொள்முதலில் உயரும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயர்ந்த சம்பளத்தின் மதிப்பு ஆண்டுக்கு 27.7 கோடிகள் மட்டுமே ஆகும். திணிக்கப்பட்ட லே. ஆப் அமலுக்கு வரும் போது 7.9 கோடிகள் பிடித்தம் செய்து விடும், நிர்வாகம். இதையெல்லாம் மறைத்து 1% கூலி கூட பெறாமல் ‘வரலாற்று சாதனை’ என்று கொட்டமடித்தால் இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான வன்மமின்றி வேறு எப்படி புரிந்து கொள்வது?. கூலி உயர்வு ஏற்ற, தாழ்வாக அமையலாம். ஆனால் தோல்வியை வெற்றி என இட்டுக்காட்டுவதன் நோக்கம் முக்கியமானதாகும்.
எதற்கெடுத்தாலும் Fund (பணம்) இல்லை என்று நிர்வாக அதிகாரிகள் ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் 2017 ஒப்பந்தம் பேசிமுடித்தப்பிறகு அதற்காக அதிகாரிகள், MD, ED  உள்ளிட்டவர்கள் எடுத்துக்கொண்ட பங்குகள், பணப்பலன்கள் பற்றி ஆய்வுக்கு எடுக்கையில் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தொழிலாளர்கள் முதுகில் குத்தப்பட்டது பற்றி ஓர் புரிதலுக்கு வரமுடியும்.
கி.வெ- யுடனான இந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற ஓராண்டில் பு.ஜ.தொ.மு அணி சார்பாக நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி இயக்கம் ஒசூர் முழுவதும் எடுக்கப்பட்டது. இதற்கு பதிலோ, விளக்கமோ தராமல் “அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது” என வன்மத்தை விதைத்தார்கள் திரு கி.வெ-யின்  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முன்னணியாளர்கள்.
மாற்று அணியினரின் வெளிப்படையான கேள்விகளுக்கு விளக்கம் தராமல் அராஜகமான பாசிசக் கண்ணோட்டத்தை வளர்த்து வருகிறது, கி.வெ தலைமை. இந்த ஒப்பந்தம் மூலம் நிர்வாகத்தின் கைகள் ஓங்கி நிற்பதையும்  ஒப்பந்த கோரிக்கைகள் படுதோல்வியடைந்ததையும் மறைத்தும்  வெறித்தனமாக வெற்றுக்கூச்சலிட்டுவருகின்றது, கி.வெ தலைமை .
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சுருக்கமாக, 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தை பற்றி கூறின் பழைய கள்ளு, புதிய மொந்தை! இந்த ஒப்பந்தத்தைப் பற்றிய விளைவுகள் அறியாதவர் அல்ல, கி.வெ. ஆனாலும் நிர்வாகத்திடம் தொழிலாளர் உரிமைக்காக வாதிடுவது தனது இனவாத அரசியல் எதிர்காலத்திற்கு எந்த பலனும் அளிக்காது என்பதை உணர்ந்து விட்டதால் தொழிலாளர் உரிமைகளை அடகு வைத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே இன்றுவரை கவனமாக உள்ளார்.
கடந்த கால் நூற்றாண்டில் குசேலர், மைக்கேல் போட்ட ஒப்பந்தங்கள் துரோக ஒப்பந்தம் என்றும் முச்சந்தியில் வைத்து விவாதிக்க அழைத்த தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் வெளிப்படை தன்மையற்ற, தனிநபராக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதல்களை மூடி, மறைத்துவிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று விளம்பரம் செய்வது தன்னை நம்பி வாக்களித்த தொழிலாளர் முதுகில் குத்தும் துரோகமாகும்.
இன்றுவரையில் அசோக்லேலாண்ட் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாகத்தின் முதலாளித்துவ இலாபவெறி, சமூக விரோத முகம் நேரடியாக அம்பலப்பட்டது கிடையாது. மாறாக, குசேலர், மைக்கேல் தனிமனித துதி, தலைவர் அரசியல், அவரால் மட்டும் முடியும்… என்ற கருத்துக்கள் முன்தள்ளப்பட்டு தொழிலாளர்களின் முன் முயற்சிகள் நசுக்கப்பட்டன. அதுவே தொழிற்சங்க செயல்பாடாக சித்தரிக்கப்பட்டது.
அவுட்சோர்ஸ் (மெசின்சாப் ஒழிப்பு), காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை,  மைக்ரோ செகண்ட் உற்பத்திமுறை (ALTS) இவற்றால் நிரந்தரத் தொழிலாளர்மீது சர்ப்பிளஸ், டிரான்ஸ்பர் என்ற அடக்குமுறை ஏவியது, நிர்வாகம். இதுபோன்ற நிரந்தரத் தொழிலாளர்மீதான தொடர் தாக்குதலில் இரு தொழிற்சங்க தலைமைகள் மட்டுமே தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்பட்டனர். சமூக அரசியல் கண்ணோட்டமின்றி  தொழிலாளர்களும் நல்ல தொழிற்சங்க தலைவர் வந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என கருதினர்.
இச்சூழலில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ, மாற்று சிந்தனையாளர் என அறிமுகமானார்.
“நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறைகளை “ பண்ணையார் மனோபாவம்” என்றும் “ இரண்டு தலைமைகளும் மோசம் செய்து விட்டன, கடந்தகால ஒப்பந்தங்களை பார்த்தேன். துரோகம் செய்துவிட்டார்கள்”. என்றும் “ஒப்பந்தத்தைப்பற்றி முச்சந்தியில் நின்று விவாதிக்க தயார். அவர்கள் தாயாரா? என்றும் தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களை பார்வையாளனாக வைத்து இருக்கிறார்கள். நான் பங்கேற்பாளனாக செய்வேன். 40 நிமிட வேலைக்குத்தான் ஊதியம் வழங்கப்படுகிறது, இது அநீதி. அறம்சார்ந்து இல்லை. இரண்டு தலைவர்களின் நேர்மையை சந்தேகிக்கிறேன்.
சரியானதை சாத்தியமாக்குவேன். சாத்தியமானதை சரியென சொல்ல மாட்டேன். win – win தான் என் பாலிசி. தொழிற்சங்கம் அரசியலைவிட மோசமாக கெட்டுவிட்டது.. ஆண்டுக்கு ஒரு முறை தொழிற்சங்க தேர்தல் நடத்துவேன் ” என்று ஆலைவாயில் கூட்டங்களில் அடுக்கு மொழியிலும் அழகு தமிழிலும் ஆவேசமாய் பேசினார், கி. வெங்கட்ராமன்.
தொழிற்சங்கத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம்கிடைக்கும் என்றார். மும்முனை போட்டியிலிருந்து மைக்கேல் விலக்கப்பட்டார். கடைசிவரை முதலாளித்துவ சுரண்டல் என்ற வார்த்தையைகூட உச்சரிக்கவேயில்லை. கி.வெ வெற்றியும் பெற்றார். பதவி ஏற்பு விழா என்பதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை, இது பொறுப்பு ஏற்பு விழா என்றார். பட்டாசு வெடிக்கக்கூடாது என்றார். பேச்சில்,தோற்றத்தில் எளிமை காட்டினார். இப்படியாக பல சவடால்கள், நாடகங்கள், கூத்துக்கள் நடத்தி சங்கப் பதவியை பிடித்தப்பின்னர்தான் ‘அமைதிப்படை அம்மாவாசையை’ தொழிலாளர்கள் பார்க்க முடிந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கடந்த 2. 9. 2016 அகில இந்திய வேலைநிறுத்த நாளில் நயவஞ்சகமாக முதல் பேச்சுவார்த்தைக்கு  நிர்வாகம் அழைத்தது, அதனை மறுக்காமல் ஏற்றார். தொழிலாளர்களின் வேலைநிறுத்த நாளில் நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை. மற்ற யூனிட்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கையில் கி.வெ ஒசூர் யூனிட் -2 ல் கிளையை இயக்க அனுமதித்தார்.
நட்சத்திர ஓட்டலில் நிர்வாகத்துடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொழிலாளர்களை மட்டுமல்ல சங்க நிர்வாகிகளையே பார்வையாளராக்கி விட்டார். அறிமுகக் கூட்டம் என்று சமாதானம் சொன்னார். ” வேட்டி கட்டிய சாமானியன் கார்ப்பரேட் நிர்வாகத்திடம் சோரம் போகமாட்டான் ” என்று ஆதவாளர்கள் பரப்புரை செய்தனர்.
“தொழிற்சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அவர் சரியில்லை, இவர் சரியில்லை” என்று பிற தலைவர்களை பற்றி பேசியவர், அவர்கள் இருவரும் சென்ற பாதையில் இன்னும் வேகமாக ஓடினார். “மன்மோகன் செயல்படாத பிரதமர் ” என்று என்று மோடி சொன்னபோது அதன் பொருளை இப்போது நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் (கார்ப்பரேட் பாதசேவையை) அதே போல கி.வெங்கட்ராமன் நடந்து கொண்டு வருகிறார்.
கடந்த சங்க தேர்தல் சமயங்களில் இரண்டு தலைமைகளின் மீதான அதிர்ச்சியில் இருந்த தொழிலாளர்களிடம் தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக்கொண்ட கி.வெ அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்த கால கட்டத்தில் ஆலைவாயிலில், தேர்தல் மேடைகளில் கி.வெ-யின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால் காவிரியே கரைபுரண்டு ஓடும். தொழிலாளர்கள் அசந்த நேரம் பார்த்து சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஒன்றரை ஆண்டுகளில் கி.வெ யின் நடைமுறைகள் கண்டு நம்பிக்கைகள் தகர்ந்துப் போய் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.
ஒப்பந்த கோரிக்கையை துல்லியமாக வரையறுத்து (?) நிர்வாகத்திடம் அளித்து அதற்கான பேச்சுவார்த்தை இவரது தலைமையிலான சங்கம் தொடங்கியது என்கிறது, இவரது பத்திரிக்கையான தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோடட்டம்.
2016 -ல் புதிய ஒப்பந்த கோரிக்கையில்  சமவேலைக்கு சம ஊதியம் என வரவேண்டியதை  சம சர்வீஸ்க்கு சம சம்பளம் என்று கோரிக்கையை மாற்றி E2 ,S2 என்றார். ஒப்பந்தம் நிறைவு பெற்ற நாளிலிருந்து, புதிய ஒப்பந்தம் அமல் (Next day, Next settlement) என்று மற்றொரு கோரிக்கை என்றார். இது அறம் சார்ந்து கோரிக்கை மட்டுமல்ல நியாயம் இருக்கிறது என்றார். நிர்வாகத்தின் இதயத்தோடு பேசுகிறேன் என்றவர் இந்த கோரிக்கை நிறைவேறாமைக்கு கி.வெ சொல்லும் காரணங்கள் தான் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.
இந்த ஒப்பந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமைக்கு ” இரண்டு முறை யுனிட் 1 சங்கத் தலைவர் குசேலருக்கு கடிதம் கொடுத்தும் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” யூனிட் 2 ஆலையில் குசேலர் அணியினர் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” லோ கொட்டேசனுக்கு தலையாட்டிவிட்டார் குசேலர்” என சொல்லி குசேலரை மட்டும் குற்றவாளி ஆக்கினாரே தவிர நேரடி உற்பத்தி உயர்வு, நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவுகளிலிருந்து 348 தொழிலாளர்கள் வெளியேற நிர்பந்தித்தது கான்ட்ராக்ட் தொழிலாளர்களை குவிப்பது, 6 வது நாள் வேலையில்லை என்ற பெயரில் ஆண்டுக்கு 52 நாட்கள் வேலை நாட்களை பறிப்பு, வருகை பதிவுக்கு கைரேகையை கட்டாயப்படுத்துவது என இதற்குப் பின்னுள்ள நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறை, சூழ்ச்சியை பற்றி வாய் திறக்கவில்லை, திரு. கி.வெ. ஆனால் மற்றொருபுறம் நிர்வாகத்தின் கொடிய சுரண்டல் முகத்தை மறைக்க திட்டமிட்டு குசேலர் எதிர்ப்புக் கண்ணோட்டத்தை தீவிரப்படுத்திவருகிறார். சங்கத் தேர்தலில் வெற்றி பெற மைக்கேலுடன் கூட்டணி பேசிய கி.வெ ஒப்பந்த வெற்றிக்காக ஒர் கடிதம் கூட தரவில்லை. “லே. ஆப் இல்லாத நார்மல் ஒப்பந்தம்” என்ற ஆலோசனைக் கூட ஏற்கவில்லை. ஆக முழுக்க, முழுக்க நிர்வாகத்தின் வழிகாட்டுதலே சங்க செயல்பாடுகள் என சுருங்கிப் போனது.
பேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு கோரிக்கைக்கு எதிராக நிர்வாகம் எதிர் கோரிக்கை வைத்தது. நிர்வாகத்தின் அந்த 4 பக்க எதிர் கோரிக்கைகளை இன்றுவரை தொழிலாளர் கண்களுக்கு காட்டாமல் மறைத்து விட்டார். ஏன் மறைத்தார்? எதற்காக மறைத்தார் ? மறைக்க சொன்னது யார்? பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெறாமல் இருக்க கி.வெ அவர்கள் ஒப்புக்கொண்டார் என்பதை விட நிர்வாகத்திடம் மண்டியிட்டார் என்று சொல்வதே பொருத்தமானது.
கமிட்டி மீட்டிங்கில் உற்பத்தி உயர்வு ஒப்புதல் கிடைக்காத நிலையிலேயே உற்பத்தி உயர்வை வாரி வழங்கினார். மேலும் 348 நிரந்தரத் தொழிலாளர்களை நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து விலக்கிவிட்டு அந்த இடங்களில் காண்டராக்ட் தொழிலாளர்களை திணிக்க ஒப்புக் கொண்டார்.
அடுத்து, 6 வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை (லே ஆப்) என்பதை ஏற்றார். இனிவரும் காலம் ஆண்டுக்கு சட்டவிரோதமாக 52 நாட்கள் லே ஆப் கொடுத்து ஆலையை இழுத்து மூடலாம் என்பது தான் இவரது ஒப்பந்தத்தின் ‘வரலாற்று சிறப்பு மிக்க’ துரோகமாகும். எண்ணூருக்கு இணையான சம்பளம் எனும் கேரட்டை காட்டி குடலை உருவிய கொடுஞ்செயலுக்கு துணைபோனது யார்? என்பதை தொழிலாளர்கள் அடையாளம் கண்டு விட்டனர். முதலாளித்துவ சுரண்டலை மறைத்து துணை போகும் இது போன்ற தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்க எள் முனை அளவு கூட தகுதியற்றவர்கள் ஆவர். அதே சமயம் தனக்கொரு இருப்பை உருவாக்க எப்படி வேண்டுமானாலும் புரட்டி பேசுவார், கி.வெ என்பது தெளிவாகி விட்டது.
சென்னை எண்ணூர் யூனிட்டில் ‘NEEM வேண்டாம், லயம் வேண்டாம் ‘ என்றும் ‘ தேவைப்பட்டால் வழக்கு போடுவோம் ‘ என  இவரின் தொழிலாளர் ஜனநாயகப் பேரியக்கம் பிரசுரம்  வினியோகம் செய்கிறது. அதன் தலைவரான கி.வெ அவர்கள் ஒசூரில் எந்த விதமாக எதிர்ப்பும் எழாத வண்ணம் VTS சாப்  முழுவதும் காண்ட்ராக்ட் – க்கும் , காண்ட்ராக்ட் தொழிலாளர்களை மட்டும் வைத்து சட்டவிரோதமாக டிபன்ஸ் வைக்கிள் ( ராணுவ வாகனம்) உற்பத்தியாவதைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார், திரு. கி.வெ.
மொத்தத்தில்  இதற்கு பின்புலத்தில் ‘நடைமுறை சாத்தியப்பாடு’என்ற பெயரில் தேர்தல் கூட்டணியில் தொடங்கி ஒவ்வொரு உரிமை பறிப்புக்கு பின்னணியில் ‘ வேறு வழி கிடையாது ‘ என நிர்வாகத்தை நம்பி வாழ்வது என்ற சமூக கண்ணோட்டம் அடித்தளம் உருவாக்கப்படுகிறது. இதற்காக பல முனைகளில் சங்கப் பொறுப்பில் உள்ளவர்களிடம் பல மணிநேரம் தனித்தனியாக பேசுகிறது நிர்வாகம். இதனை முறியடிக்க தொழிலாளர்களின் சொந்த பலத்தை கட்டியமைத்து வழிகாட்டும்  வெளிப்படை தன்மை கொண்ட தொழிற்சங்கத்தலைமையும்  நடைமுறையும் தேவைப்படுகிறது.
தற்போது இந்த ‘ கைநாட்டு ‘ ஒப்பந்தத்திற்கு பிறகு பெயிண்ட்சாப் உள்ளிட்ட உற்பத்தி தளத்தை விரிவு படுத்துகிறது, நிர்வாகம். ஒரு சிப்ட் மட்டுமே இயக்க முடியும் அளவுள்ள நிரந்திரத் தொழிலாளர்களை கொண்டு மூன்று சிப்ட்களை ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை திணித்து ஆலையை இயக்குகிறது, நிர்வாகம். இதுபோல் மிகை உற்பத்தியும் மிகை இலாபத்தையும் ஈட்டிய NLC நிர்வாகம் ஒரு கட்டத்தில் அதன் அதிகாரிகள் மட்டும் பலனடைந்தனர். ஆனால், மிகை உற்பத்தியை காட்டி காண்ட்ராக்ட்  தொழிலாளர்களுக்கு 26 வேலை நாட்களை 22 நாட்களாக குறைத்தது மட்டுமின்றி இனி 19 நாட்கள் மட்டுமே வேலை என்று தொழிலாளர்கள் மீது போர் தொடுத்து பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி மிரட்டி வருகிறது, நிர்வாகம். இதுதான் மிகை உற்பத்தியின் பரிணாமம். லேலாண்டு நிர்வாகத்திற்கு அதே வழியில் சேவை செய்கிறார், கி.வெ.
மேலும் ஒசூரில் நிரந்தரத் தொழிலாளர் அதிகமாக உள்ள இவ்வாலையில், 18(1) ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் சட்டவிரோத லே-ஆப், உரிமைகளற்ற காண்ட்ராக்ட், தற்காலிக தொழிலாளர் அடிமைமுறை – அடக்குமுறைகள் ஆகியவற்றை பிற ஆலை நிர்வாகங்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகின்றன. இது நிர்வாகத்தின் அடக்குமுறையின் ஒருவகைமாதிரியாகும்.
கி.வெ எந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று இதைக் குறிப்பிடுகிறார்? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எண்ணூர் தொழிலாளர்களைவிட ஒசூர் தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் சம்பளம் குறைவாக உள்ளதை சமன் செய்வதாக       E2, S2 எனச் சொல்லி தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று, இவரால் பேசி முடிக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம்  ஊதிய இடைவெளியை அதிகரித்து விட்டார்.  வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்ற இந்தியத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைக்கு தமிழ்மண்ணில் கல்லறைக்கட்டிவிட்டார், திரு. கி.வெ. இது சரியானதா? சாத்தியமானதா? என்பதை கி.வெ அவர்கள் பதில் சொல்லவேண்டும். ஒருவேளை பல ஆண்டுகளாக கி.வே பேசிவரும் தமிழ்தேசியத்தில் வேலை உரிமை என்பதன்பொருள் இதுதானோ?
சட்ட விரோதமான லே. ஆப் ஒப்பந்தத்தில் மண்டியிட்டு விட்டு சட்டபூர்வ 26 வேலை நாளுக்கு  DA கணக்கீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விண்ணப்பம், சட்ட விளக்கம் தருவது அம்பலப்பட்ட தன் முகத்தை மறைப்பதற்கும் இருப்பை தக்க வைக்கும் தந்திரம் என்பது வெளிப்படையாக தொழிலாளர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீசை மீது மண் ஒட்டவேயில்லை என்ற கதையாக அந்த தலைவர் இந்த முயற்சி எடுக்கவில்லை மடை மாற்றுகிறார்கள்.
தொழிற்சங்கத்திற்கு புதிது, கரை படியாத கரம், நெருப்பு போன்ற நேர்மை ஒளிவட்டங்களை நம்பி வாக்களித்த தொழிலாளர்கள், ” யார் வந்தாலும் இப்படித்தான், நிர்வாகத்தின் AC ரூம்ல தொழிலாளர் நலனுக்காக வாய்திறக்க மாட்டார்கள் ” என சோர்வின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளார்கள்.  அறம்சார்ந்த பொருளியல் பார்வை  எனும் வார்த்தைகளை கேடயமாக கொண்டு தன் இருப்புக்கு வழித்தேடிக்கொண்டதை தவிர, தொழிலாளர் வர்க்கத்துக்கு வேறு என்ன நன்மை? என்பது யோசிக்க வேண்டிய விசயமாகும். உண்மையான எதிரியான நிர்வாகத்தையும் அதன் செயலையும் மறைத்து ஒன்னரை ஆண்டுகளுக்குமேல் தொழிற்சங்க சக்கரத்தை இயக்கியது தான், கி.வெ யின் சாதனையாகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, “கருப்புப் பணத்தை மீட்டு அனைவருடைய வங்கிக் கணக்கிலும்15 லட்சம் பணம் போடப்படும் ” என்று கத்திக் கொண்டு RSS -BJP யினர் நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்களுக்கு கீழுள்ள அராஜகமான சமூக அடித்தளத்தைக் கொண்டு, 120 கோடி மக்களை வதைத்துக் கொண்டும், கார்ப்பரேட் பாத சேவை செய்தும் வருகின்றனர். அதைப்போல தொழிற்சங்க அரங்கில் கி.வெ யின் தலைமை உட்பட தொழிலாளர்களுக்கு பிழைப்புவாத வெறியூட்டிவிட்டு முதலாளித்துவ கொடிய சுரண்டலுக்கு எதிரான உணர்வுக்கும் அரசியல் மீதான சமூக பார்வைக்கும் வேட்டு வைக்கின்றன. ஓட்டுக்கட்சித் தொழிற்சங்கங்களைப்போல சக தொழிலாளியை எதிரியாக்கி, குற்றவாளியாக்கி கேடுகெட்ட வகையில் வழிநடத்துகிறார், கி.வெ.
ஆட்குறைப்பு – காண்ராக்ட் திணிப்பு, சட்டவிரோத லே-ஆப் போன்றவற்றை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஆறுமாதத்திற்கு பிறகு சென்னையில் 3.2.2018 தமிழ்நாட்டுவேலைகள் தமிழர்களுக்கே ! வெளிமாநிலத்தவர்களுக்கு அல்ல! என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தி தமிழர் வேலை உறுதி சட்டவரைவு  என்று முன்மொழிகிறார் கி.வெ.
உலக அளவில் முதலாளித்துவ பொருளாதாரம் தோல்வியடைந்து தொழிலாளர் உரிமைகளை பறித்து வேலைப்பறிப்பு, அடக்குமுறை என ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அற்பக்கூலிக்கு காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப்போக்கை  மறைத்தும் குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்ப்பதை தவிர்த்தும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள பணிநிரந்திரமின்மை நெருக்கடிக்கு வடமாநில தொழிலாளர்கள் தான் காரணம் என்று திசை திருப்புகிறார். மற்றொரு பக்கம் காண்ட்ராக்ட்முறை தீவிரப்படுத்தும் லேலாண்டு நிர்வாகத்தின் கோரமுகத்தை மறைத்து குசேலர் மட்டும்தான் பிரச்சினை என்று மடைமாற்றுகிறார்.
தமிழக விவசாயத்தை அழிப்பதில் கார்ப்பரேட் கம்பெனிகள் கரம்கோர்த்து நிற்பதை மறைத்து நாற்புறமும் இன முரண்பாடு என திசை திருப்புகிறார். அதிகார வர்க்கமானது நதி நீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இன, சாதி, மத முரண்பாட்டை வளர்க்க திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழினத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அதிகாரம் என்பது ஆரிய பார்ப்பன தலைமையும் கார்ப்பரேட் கும்பல் என்பதை மறைத்து சிறைக்குள் சிக்கியிருக்கும் பிற தேசிய இனங்களையும் எதிரியாக காட்டுவது குறுங் குழுவாதமில்லையா? மத்திய அதிகாரத்தின் சூழ்ச்சிகள், அடக்கு முறைகள், தாக்குதல்கள் அனைத்தையும் இன முரண்பாடு என்ற ஓர் போர்வையில் மறைக்கிறது, இவரை பொதுச் செயலாளராக கொண்ட தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
சுருங்கக்கூறின் முதலாளித்துவ வர்க்க முரண்பாட்டை மறைக்க குறுகிய சிந்தனையின் வெளிப்பாடான இனவெறி எனும் விச விதைகளை விதைப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் என்பதை மறைத்து வேளாண் பொருளியல் நிபுணர், கட்டுரையாளர், ஆலோசகர் என முக்காடுப்போட்டு கொண்டு இருக்கிறார்,  கி.வெ.
நாடுமுழுவதும் பொதுத்துறைகள் தனியார்மயமாவது பற்றி எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. அதில் வேலைவாய்ப்புகள் எல்லாம் தனியார்மயம் ஆவதற்கு எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. ஆனால் வட மாநிலத்தார் பணி சேர்வது மட்டும் தான் மூலப் பிரச்சனையாம். மேலும், தமிழக அரசு அற்பக்கூலிக்கு சுமார் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளை காண்ட்ராக்ட் முறைக்கு தள்ளிவிட முயற்சித்து வருகிறது.
ஆனால், மீதி இருக்கிற 20% வேலைவாய்ப்புகளில் பெரும்பகுதி வடமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்கிறார்களாம். இதனை எதிர்த்து போராடுகிறாராம்.முரண்பாட்டை வளர்க்கும் தமிழக அரசின் நோக்கத்தை லாவகமாக மறைப்பது தான் அறமா? இதற்கு பெயர் என்ன? வீடு தீப்பிடித்து எரிந்தாலும் என் பங்கிற்கு உரிய சாம்பலை தர வேண்டும் என்பதுதான். இந்த அரசு அதிகாரம் தன்னுடைய ஏகாதிபத்திய, கார்ப்பரேட் கொள்ளையை மறைக்க சாதி, மத, மொழி. இன முரண்பாட்டை கொம்பு சிவி வளர்த்து வருகிறது.
இந்த அரசு அதிகாரமானது கார்ப்பரேட் சுரண்டலையும் பகற் கொள்ளையையும் மறைக்க ஊழல் தான் பிரச்சனை என முன் தள்ளி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதற்கு சற்றும் குறையாமல் கி.வெ போன்று இனவாதம் பேசுபவர்களும் கார்ப்பரேட், தனியார்மய சுரண்டலை கண்டுகொள்ளாமல் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தனிமனிதர்களையும் கட்சிகளையும் அதன் நடைமுறைகளையும் ஊழலையும் காரணமாக காட்டுகிறார்கள். முதலாளித்துவ சுரண்டலை மறைப்பது தான் இனவாத தற்காப்பு அரசியலின் உயிர் மூச்சாக உள்ளது. அழகிய தமிழ் வார்த்தைகளில் பிரச்சனைகளை பட்டியலிட்டு இனவாதம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே ஒழிய மக்களின் பிரச்சனை தீர்ப்பதில்லை என்பது வரலாற்று அனுபவமும் கூட.
பார்ப்பன பாசிச மோடி அரசாங்கம் , கார்ப்பரேட் சேவை செய்வதற்கும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதற்கும் நாட்டை மறுகாலனியாக்குவதற்கும் துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தொழிலாளர் ஒற்றுமையை சிதைத்து, மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடித்து தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பகைமூட்டி, ஆளும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு கோடாரிக் காம்பாக வேலை செய்கிறார், கி.வெ.
மொத்தத்தில் தோற்று, அம்பலப்பட்டு நிற்கும் நாடாளுமன்ற கட்டமைப்பு, நாட்டை சூறையாடும் தனியார்மயம், இதை மறைக்கும் பார்ப்பனிய – சாதி கட்டமைப்பை எதிர்த்து போராடாமல் அறவழி அரசியல் என்பது மாற்று சிந்தனை அல்ல, ஏமாற்றும் வழி என்பது மீண்டும் நிருபணமாகி விட்டது.
முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வெளிப்படையான தொழிற்சங்க நடவடிக்கைகள்மூலம் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அரசியல் போராட்டங்களை கட்டியமைப்பதன் வழியாகத்தான் தொழிலாளர் வர்க்கம் தன்னுரிமைகளையும் விடுதலையை சாதிக்கமுடியும்.
படைப்பு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அசோக் லேலாண்ட் யுனிட் – II,
ஒசூர். தொடர்புக்கு: 97880 11784.

கருத்துகள் இல்லை: