சனி, 17 மார்ச், 2018

சிஷ்யையின் ஒப்புதலோடுதான் பாலியல் உறவு நிகழ்ந்தது .. நித்தியானந்தா வழக்கில் திருப்பம்

நித்யானந்தா பாலியல் வழக்கில் புதிய திருப்பம்!மின்னம்பலம்: நித்யானந்தா பாலியல் வழக்கில், இருவரின் ஒப்புதலுடன் தான் உடலுறவு நடந்தது என்றும் அது வன்புணர்வல்ல என்றும் அவருடைய வழக்கறிஞர் சிவி.நாகேஷ் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
முன்னாள் பெண் சீடர் ஒருவரை நித்யானந்தா பலாத்காரம் செய்ததாக அவருக்கு உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் வழக்குத் தொடர்ந்தார். அதில், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை பலாத்காரம் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
2010 ஆம் ஆண்டில், நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டபோது, அவர் குற்றமற்றவர் என்றும், தான் ஆறு வயது சிறுவன் (அதாவது ஆண்மையற்றவர்) என்றும் குற்றவியல் புலனாய்வு துறையினரிடம் தெரிவித்தார்.

இதுபோன்று தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. எனினும் 2014 ஆம் ஆண்டு தான், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2014 நவம்பரில் சிஐடி போலீசார், “நித்யானந்தா கூறியது உண்மையல்ல என்றும் அவர் சாதாரண மனிதர் தான் என்றும்’ கூறி மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து நித்யானதாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நித்யானந்தா கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் புதிய திருப்பமாக அவருடைய வழக்கறிஞர் நாகேஷ், “பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் விருப்பத்துடன் தான் நித்யானந்தா பாலியல் உறவு கொண்டார், அது வன்புணர்ச்சியல்ல என்று நேற்று (மார்ச் 16) கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார். இதுதவிர அப்பெண் மீது தவறான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், “நித்யானந்தா தொடர்ந்து முரண்பட்ட கருத்தையே தெரிவித்து வருகிறார். முதலில்ஆண்மையற்றவர் என்று கூறினார்.அவர் ஆண்மையுள்ளவர் என்று மருத்துவ பரிசோதனை அறிக்கை கூறியது. தற்போது அவருடைய வழக்கறிஞர் இந்தப் பதிலை தெரிவித்துள்ளார். தீவிர விசாரணைக்கு உட்படுத்தினால் தான் உண்மை வெளிவரும் “என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அஸ்வின் வைஸ் கூறியுள்ளார்.
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருக்கும் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டது என்று கூறி வந்த நிலையில், அந்தக் காட்சி உண்மைதான் என்று டெல்லி தடய அறிவியல் ஆய்வகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: