புதன், 14 மார்ச், 2018

செம்மரத் தோப்பு அதிபர்' தனசேகரன் கடத்திக் கொலை ! - பின்னணி இதுதான்

 செம்மரம்விகடன் :ந.பா.சேதுராமன்- திருவள்ளூரை அடுத்த தாங்கல் காலனியைச் சேர்ந்த தனசேகரன் என்ற செம்மரக் கடத்தல் அதிபர் கடத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.செம்மரம் கடத்தல் தொடர்பான வழக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோக ஒவ்வொரு நாளும் செம்மரக் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவில் கைதாகி வருகின்றனர். கடந்த 13-ம் தேதி திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரி மெட்டு- கோட்டாலா வனப்பகுதியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், பாபு ஆகியோர், கைது செய்யப்பட்டுள்ளனர். 'செம்மரங்களைத் திருட்டுத் தனமாக வெட்ட முயன்ற 10 பேரில் இவர்கள் மட்டுமே சிக்கினர்' என்று இதுகுறித்து ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செம்மரத் தோப்பு அதிபர் ஒருவர், கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம், திருத்தணிப் பகுதியில் சூட்டைக் கிளப்பியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த தாங்கல் காலனியைச் சேர்ந்தவர், அ.தி.மு.க. பிரமுகரான தனசாமி. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவராகப் இருக்கிறார். இவரது மகன் தனசேகர். தனசேகருக்குச் சொந்தமாக செம்மரத் தோப்பு இருக்கிறது. நன்கு விளைந்த செம்மரங்கள் உள்ள இந்தத் தோப்புக்கு, 5 காவலாளிகள் இரவும் பகலும் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனர். கடந்த 1-ம் தேதி இரவு, தோப்பு வரை போய்விட்டு வருவதாக வீட்டிலிருந்து கிளம்பிப் போன தனசேகர், பின்னர் வீடு திரும்பவில்லை. தனசேகரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதுகுறித்து, தனசேகர் குடும்பத்தார் போலீஸில் புகார் செய்திருந்தனர். ஒருவாரகாலமாக தனசேகரைப் போலீஸார் தேடிவந்தனர். ஆனால், தனசேகர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில்,  'வாணி விலாசபுரம்'  என்ற காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாகப் போலீஸாருக்குக் கடந்த 11-ம் தேதி தகவல் கிடைத்தது. தனசேகரின் குடும்பத்தாருக்கு இதுகுறித்துப் போலீஸார் தகவல் கொடுத்தனர். அவர்கள், அழுகிக் கிடந்த உடல், தனசேகரின் உடல்தான் என்று உறுதிப்படுத்தினர். பின்னர் தனசேகர் உடல், பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தனசேகரின் கொலைக்கு அதே பகுதியான திருத்தணி- தெக்களூர் மாசிலாமணிதான் காரணம் என்று, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: