வெள்ளி, 16 மார்ச், 2018

உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?

த்திரப் பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதே போல பீகாரில் நடைபெற்ற ஒரு பாராளுமன்றம் மற்றும் இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி  2-ல் கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது
உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அமர்த்தினார்கள் மோடி மற்றும் அமித்ஷா. அதற்காக தனது கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் யோகி ஆதித்யநாத். அதைப் போலவே அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவியேற்ற கேசவ் பிரசாத் மவுரியாவும், பல்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். கோரக்பூரில் தனது மதவெறி மற்றும் ரவுடித்தனத்தின் செல்வாக்கோடு மக்களை மிரட்டி ஐந்து முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார், ஆதித்யநாத். சமாஜ்வாதி, பகுஜன் கூட்டணியை வீழ்த்த இப்போது ஆதித்யநாத் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்.
இந்நிலையில், கடந்த மார்ச்11 – 2018 அன்று உத்திரப்பிரதேச மாநிலத்தின் இரண்டு முக்கியத் தொகுதிகளான கோரக்பூர் மற்றும் பல்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  இதில் பாஜகவை எதிர்த்து, பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கைகோர்த்து களம் இறங்கின.
உத்திரப் பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் யோகி ஆதித்யநாத் நடைமுறைப்படுத்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தேர்தல் நடைபெற்ற அன்றே வெளிப்பட்டது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் மொத்தமாக வெறும் 43% வாக்குகளே பதிவாகின. துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியாவின் தொகுதியான பல்பூரில் அதைவிட படுகேவலமாக 37.39% வாக்குகளே பதிவாகி இருந்தன. என்னதான் பாஜக-வினர் தினுசு தினுசாக பிரச்சினைகளை கிளப்பி தமக்கு ஆதாயம் பறிக்க முயற்சி செய்தாலும், மக்கள் கணிசமான அளவில் ஓட்டுப் போடக் கூட தயாரில்லை. யோகி ஆட்சியின் யோக்கியதை அப்போதே தெரிந்து விட்ட நிலையில், இன்று (14-03-2018) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறத் துவங்கியது.
துவக்கம் முதலே புல்பூர் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பாஜகவின் கவுஸ்லேந்திரசிங் படேலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். கோரக்பூர் தொகுதியில், முதல் ஒருமணிநேரம் பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லா முன்னிலையில் இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பிரவீன் நிஷாத் முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.
தனது நீண்டநாள் தொகுதியான கோரக்பூரில் தோல்வியடைந்து அசிங்கப்படாமல் இருக்க சாத்தியப்பட்ட எல்லாவகைகளிலும் முயற்சி எடுத்து வந்தார் யோகி ஆதித்யநாத். அதற்கு உதவியாக வாக்கு எண்ணுமிடத்தில் குவிந்துள்ள பத்திரிக்கையாளர்களையும், பார்வையாளர்களையும் போலீசை வைத்து வெளியேற்றியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
மதியம் 1:45 மணியளவில்  கோரக்பூரில் 14,648 வாக்குகள் வித்தியாசத்திலும், புல்பூரில் 22,842 வாக்குகள் வித்தியாசத்திலும் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்தது. தற்போது புல்பூர் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சமாஜ்வாதியின் நாகேந்திர பிரதாப் சிங் பட்டேல், பாஜக வேட்பாளர் கவுஷ்லேந்திர சிங் பட்டேலை 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதே போல தற்போதைய நிலவரப்படி கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர், பாஜக வேட்பாளரை விட சுமார் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
இறுதியில் சமாஜ்வாடி கட்சி கோரக்பூரில் 21,961 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்தது. அதே போல புல்பூரிலும் 59,460 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை தோற்கடித்திருக்கிறது.

‘ஊழல்’ செய்யா ‘உத்தமர்’ மோடியை வீழ்த்திய ஊழல் புகழ் லாலு!
அதே சமயத்தில், பீஹாரில் 3 தொகுதிகளில் நடைபெற்றுவரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 2 தொகுதிகளில் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது. சிறையிலிருக்கும் லல்லு-வின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி, அராரியா தொகுதியில் சுமார் 23,187 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. ஜெகனாபாத்திலும் சுமார் 52,609 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. அராரியா தொகுதியில் சுமார் 61,788 வாக்குகள் வித்தியாசத்தில் லல்லுவின் ராஸ்டிரிய ஜனதாதளம் நிதிஷ் – பாஜக கூட்டணியை தோற்கடித்தது. ஜெகனாபாத்தில் 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் நிதிஷ் – பாஜக கூட்டணியை மண்ணைக் கவ்வ வைத்தது. ஆறுதல் வெற்றியாக பாபுவா தொகுதியில் நிதிஷ் – பாஜக கூட்டணி 14,866 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹிந்து யுவ வாகினி என்ற இந்துமத வெறி அமைப்பை வைத்துக் கொண்டு பல்வேறு கலவரங்களை கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏற்படுத்திய நாயகன்தான் உத்திரப் பிரதேசத்தின் ரவுடி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
வாய்ப்பு கிடைத்தால் கலவரம் செய்வதில் தங்களையே மிஞ்சிவிடக்கூடிய தகுதியையும் திறனையும் யோகி ஆதித்யநாத்திடம் பார்த்த அமித்ஷா – மோடி இணை, அத்தகுதிக்காகவே யோகியை முதல்வராக தேர்ந்தெடுத்தது. பதவியேற்ற ஓராண்டில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட எண்கவுண்டர்கள் நடத்தி தன்னை மோடி – அமித்ஷா இணையின் சீடன் என நிரூபித்துக் கொண்டார் இந்த ரவுடி சாமியார் மற்றும் முதல்வர்.
இப்பேர்ப்பட்ட தகுதியும், கலவரம் செய்யும் அனுபவமும் கொண்ட யோகி ஆதித்யநாத், தனது ஆஸ்தான தொகுதியான கோரக்பூரில், தேர்தலில் வெற்றிபெற எவ்வளவு உள்ளடி வேலைகள், போலீசு கெடுபிடிகளையும் செய்திருப்பார்?
மோடியின் விருப்பத்திற்காக குஜராத சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம் கோரக்பூரிலும், புல்பூரிலும் மோடிக்காக என்னவெல்லாம் செய்திருக்கும்? அப்படி இருந்தும் மண்ணைக் கவ்வி இருக்கிறது பாஜக கும்பல்.
மக்கள் மீதான மோடி கும்பலின் பொருளாதாரத் தாக்குதலும், யோகி ஆதித்யநாத்தின் கலவர அரசியல் மற்றும் போலி மோதல் கொலைகளின் மீதான மக்களின் வெறுப்பும் இருந்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிந்திருந்தாலும், சமூகத்தை மத ரீதியாக, சாதி ரீதியாக பிரித்த பாஜகவின் தந்திரமே பிரதானமானது.
எனினும் தற்போது பாஜக தோல்வியுற்றது ஏன்? இதை கவனமாக பரிசீலிக்கவில்லை என்றால் பாஜகவின் வெற்றிகள் இதற்கு முன்னரும் சரி, இனிமேலும் சரி எப்படிக் கிடைத்திருக்கும், கிடைக்கும் என்பதை அறிய முடியாது.
சென்ற சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியுற்றது. சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளை வென்ற பகுஜன் சமாஜ் கட்சி,  பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதனால் இக்கட்சியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாகவே பலர் கருதினர்.
மாயவதியும் அதை உணர்ந்திருக்க வேண்டும். அதன்படி தனது ஜன்ம பகை கட்சியான சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கும் முடிவை அவர் எடுத்தார். அதுவும் வாக்களிப்பிற்கு ஒரு வாரம் முன்னர்தான் அறிவித்தார். பாஜக-வினர் வடகிழக்கு தேர்தல் வெற்றிக் களிப்புடன் அதை மறந்திருந்த போது பகுஜன் சமாஜ் கட்சியினர் நேரடியாக மக்களிடம் வேலை செய்ய ஆரம்பித்தனர்.
ஒருக்கால் மாயாவதி முன்னரே இந்த முடிவை அறிவித்திருந்தால் அதை முறியடிப்பதற்கு பாஜகவும், அமித்ஷாவும் பல வேலைகளை செய்திருப்பார்கள். அல்லது இருகட்சி கூட்டணியை விட நமக்கு ஆதரவு அதிகம் இருக்கும் எனவும் அவர்கள் நினைத்திருக்கலாம்.
எனினும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட பாஜகவின் வாக்கு சதவீதம் வெறும் 29% மட்டும்தான். இத்தகைய சிறுபான்மை வாக்குகளை வாங்கி ஒரு கட்சி பெரு வெற்றி பெறவேண்டுமென்றால் அதை எதிர்க்கும் கட்சிகள் வாக்கு பிரிந்திருப்பதே காரணம் என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம்.
ஆகையால் இன்றைக்கு பகுஜன் கட்சியும், சமாஜ்வாதியும் இணைந்திருக்கிறது என்றாலும் நாளையே அவர்கள் பிரிய மாட்டார்கள், அல்லது பாஜக அவர்களை பிரிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. கொள்கையில் புடம் போடப்பட்டு இந்த வெற்றி தோல்வி இங்கே நடைபெறவில்லை. ஒரு தேர்தல் வெற்றி, வாக்கு சதவீதம் என்பதை வைத்தே நடைபெறுவதால் இன்றைய சூழலில் பாஜக-வின் சதி வேலைகள் மற்றும் அதன் சமூக விரோத கொள்கைகளுக்கான விளைவுகள் முடிவுகளை தீர்மானிப்பதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
பாஜக-வின் தோல்வி ஒரு முடிவின் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார், மம்தா பானர்ஜி. ஆனால் இந்த முடிவு இதற்கு மேல் வராது என்று மாற்றும் சக்தி பாஜகவிற்கு இல்லாமல் இல்லை. அதாவது பாபர் மசூதி பிரச்சினை, அயோத்தி ராமர் கோவில், லவ்ஜிகாத், ஆதிக்க சாதிவெறி, இந்தி மாநிலங்களில் இந்துத்துவ வெறி அரசியல், தலித் நண்பனாக வேடம், பன்னாட்டு நிறுவனங்கள் – மற்றும் தரகுமுதலாளிகளிடம் உள்ள ஆதரவு, கார்ப்பரேட் ஊடக ஆதரவு, முதலாளிகளின் நிதி ஆதரவு ஆகியவற்றை வைத்து சட்டபூர்வமான முறையில் ஒரு பாசிசத்தை அரங்கேற்றும் வலிமை பாஜகவிற்கு இன்னமும் இருக்கிறது.
அதே நேரம் இந்த அயோக்கியததனமான சக்தி இருந்தும் அவர்கள் இந்த ‘கௌரவ’ இடைத்தேர்தலில் ஏன் தோல்வியுற்றார்கள்? பாஜக-வின் பொருளாதாரத் தாக்குதல்கள், ஆணவம், வாழ்க்கைப் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்களில் பெரும்பாலானோருக்கு மோடி அரசின் மீது வெறுப்பு இருந்து வருகிறது. அந்த வெறுப்பை சாதிவெறி, மதவெறி மூலம் மடைமாற்றுவதே பாஜகவின் திறமை. அந்த திறமை தற்காலிகமாக தோற்றிருக்கிறது.
அதை நிரந்தரமாக தோல்வியடைய வைக்க தேர்தல் அரசியல் போதாது. இந்துமதவெறியை புதைகுழிக்கு அனுப்ப அதை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒன்று சேர்த்து பார்ப்பனியத்தோடு நாடு முழுவதும் சண்டையிட்டு வெல்லவேண்டும். அந்த சண்டை தெருவில், ஊரில், மாநிலங்களில், அதிகார பீடங்களில், நீதிமன்றத்தில், சட்டபூர்வமாக, சட்டவிரோதமாக, என்று பல்வேறு வழிகளில் நடைபெற வேண்டும். குறிப்பாக பார்ப்பனிய இந்துமதவெறி என்பது இந்த நாட்டு உழைக்கும் மக்களின் வில்லன், விரோதி என்பது மக்கள் மனதில் பதிய வைக்கப் படவேண்டும்.
இல்லையேல் இன்றைய வெற்றிக்காக மகிழும் முற்போக்காளர்கள் அடுத்த முறை வருந்தும் வாய்ப்பும் வரலாம். தேர்தல் அரசியல், நீதிமன்றங்களை, சட்டங்களை இந்துமதவெறியர்கள் நம்புவதில்லை. ஆனால் தேர்தல் வெற்றி மூல்ம் இந்த நிறுவனங்களை அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மயமாக்குகிறார்கள். தோல்வியுற்றால் சட்டவிரோதமாக கலவரம் செய்து செல்வாக்கு பெறுகிறார்கள்.
இந்த இடைத்தேர்தல் தோல்வி குறித்து கருத்த தெரிவித்த சிவசேனாவின் எம்பி ஒருவர், கடவுள் ராமன் பாஜகவினரை தண்டித்து விட்டான், அவர்கள் ராமரை விமரிசனம் செய்த ஒரு சமாஜ்வாதி தலைவரை கட்சியில் சேர்த்ததால்தான் இந்த தோல்வி என கூறியிருக்கிறார்.
ஆக அடுத்த முறை பாஜகவின் கலவர முகத்தை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். தடுக்க வேண்டுமென்றால் தேர்தல் அரசியல் கூட்டணியை விடுத்து இந்துத்துவத்தை வீழ்த்தும் கூட்டணி ஓட்டு அரசியலுக்கு வெளியே வலிமை கொள்ள வேண்டும்.
*******************
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

கருத்துகள் இல்லை: