வியாழன், 8 மார்ச், 2018

ஆதிச்ச நல்லூர் அகழாய்வுக்கு தயார் ,,, உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யத் தயார்!மின்னம்பலம் :ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளைத் தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நான்கு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதுகுறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்று காமராஜ் என்பவர் பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார். ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிடவும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருள்களைக் காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, தமிழக அரசு இப்பணியை மேற்கொள்ளலாம் என மதுரைக் கிளை தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நேற்று (மார்ச் 7) நடந்தபோது, ஆதிச்சநல்லூரில் ஐந்தாம்கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க, பெங்களூரைச் சேர்ந்த மண்டல இயக்குநர் தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
அகழாய்வுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: