புதன், 7 மார்ச், 2018

ரஜினி விதியை மீறி கட்டிய ராகவேந்திரா மண்டபம் அவரே ஒப்புதல் வாக்குமூலம்..!


savukkuonline.com : 1984-ம் ஆண்டு ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டிக்கொண்டிருந்தபோது, விதிமுறை மீறல் இல்லாததால் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முதல் தளம் வேலை நடந்தபோது, திடீரென்று ஒப்புதல் கொடுக்காமல் பணியை நிறுத்திவிட்டார்கள். ஒரு நபர் வந்து, அவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை, சில விதிமுறை மீறல் இருக்கிறது என்று கூறி, கட்டுமான பணி தொடர்பான கோப்பை மேலே செல்ல விடாமல் தடுக்கின்றனர். என்னுடைய ஆட்களை என்னவென்று பாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்களை சந்திப்பதற்கு அனுமதியே கொடுக்கவில்லை. அதன் பின்னர் நானே சென்றேன். எனக்கும் சந்திப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. 6 மாதம் 7 மாதம் ஆகியது, மழைக்காலம் வந்துகொண்டிருக்கிறது, அதற்கு பின்னர் எனது நண்பர்கள் இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் முதல்–அமைச்சரை சென்று பார்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். எனக்கு ஒரு தயக்கம். யாரிடமும் கேட்டு பழக்கமே இல்லை. நியாயமாகவும் இருக்கிறது, அதற்கு பின்னர் வேறு வழியில்லாமல் அப்போது நான் மும்பையில் இருந்தேன், நான் போன் செய்து முதல்–அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டேன். மறுநாளே எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துவிட்டார்கள். 

விமானத்தை பிடித்து, காலையில் வந்து ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினேன். அப்போது என்னை எப்படி இருக்கிறீர்கள்?, என்ன சமாச்சாரம், என்ன பிரச்சினை? என்று கேட்டார். அப்போது அவரிடம் கோடம்பாக்கத்தில் ஒரு மண்டபம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். அதுக்கு வந்து ஒரு நபர் இந்த மாதிரி பிரச்சினை செய்துகொண்டிருக்கிறார் என்று கூறினேன். எல்லாமே சரியாக இருக்கும்போது, என்ன பிரச்சினை? நீங்கள் நாளைக்கு வாங்கள் என்று கூறினார். மும்பையில் இருந்தா வருகிறீர்கள்? எத்தனை நாள் படப்பிடிப்பு? அதற்காக இங்கு விமானத்தை பிடித்து வந்தீர்கள்? நீங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு எனக்கு போன் செய்யுங்கள் என்று கூறினார். படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்து நான் போன் செய்தேன். மறுநாள் மாலையிலேயே சந்திக்க நேரம் கொடுத்தார். நான் சென்றேன், 6 மாதமாக கேட்டுக்கொண்டிருந்த நபர் அங்கு கை கட்டிக்கொண்டு இருக்கிறார். யார் தெரியுமா? என்று எம்.ஜி.ஆர். அவரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர் தெரியும்னே என்று கூறினார்.

இந்த காலத்தில் நடிகர்கள் பணம் சம்பாதிப்பதே கஷ்டம். ஒரு தம்பி பணம் சம்பாதித்து, அதை காப்பாற்றுவது இன்னும் கஷ்டம். ஒரு நல்ல காரியம் செய்கிறான், அதுக்கு தொல்லை கொடுக்கலாமா? உடனே என்ன இருக்கிறதோ, அதை பார்த்து சரிசெய்யுங்கள், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசருக்கு போன் போடுங்கள் என்று கூறினார். உடனே எம்.எம்.டி.ஏ. பாஸ் செய்யுங்கள் என்று கூறினார். 3 நாட்களிலேயே எம்.எம்.டி.ஏ.யில் இருந்து தடையில்லா சான்று வந்தது.

ராகவேந்திரா மண்டபத்தை கட்டுவதற்கு காரணமே எம்.ஜி.ஆர். தான். ரஜினி பேசியதை நன்றாக கவனியுங்கள். 1984ம் ஆண்டு ராகவேந்திரா மண்டபம் கட்டுகிறார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று முதல் தளம் வரை கட்டிட வேலையை செய்து கொண்டிருக்கிறார். திடீரென்று அனுமதி மறுக்கப்படுகிறது. எம்ஜிஆரை அணுகுகிறார்.

எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் அழைத்து மிரட்டி, அனுமதி பெற்றுத் தருகிறார். இது சிஸ்டத்தை மதிக்கும் ஒரு நபர் செய்யும் செயலா ? இந்த முறையைத்தான் எம்ஜிஆர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு போதிக்கிறாரா ரஜினிகாந்த் ? இப்படித்தானே ஒவ்வொரு அயோக்கியனும் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சிஸ்டத்தை வளைக்கிறான் ?

 ரஜினி சூப்பர் ஸ்டாராக இல்லாவிட்டால், எம்ஜிஆர் இதை செய்து கொடுத்திருப்பாரா ? சிஸ்டத்தை நம்பும் நபர் என்ன செய்திருக்க வேண்டும் ? அனுமதி கிடைக்கவில்லை என்றவுடன் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

அப்போதும் அனுமதி கிடைக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை அல்லவா அணுகியிருக்க வேண்டும் ? இதுதான் சிஸ்டத்தை மதிக்கும் லட்சணமா ?
 ?

கருத்துகள் இல்லை: