புதன், 7 மார்ச், 2018

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் :ராமர் கோவில் கட்டவிட்டால் இந்தியா சிரியாவாகி விடும் - ... சிவசேனா கடும் கண்டனம்

tamilthehindu :வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர் வேலையை மட்டும் பார்க்கலாம். ராமர் கோயில் விவகாரத்தில் அவர் தலையிடத்தேவையில்லை என்று சிவசேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை விரைவாக தீர்க்காவிட்டால், இந்தியா சிரியாவாக மாறிவிடும் என்று சமீபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளேட்டில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் கடந்த 2ஆண்டுகளாக தலையிட்டு சமரச பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையில் விரைவாக தீர்வு எட்டப்படாவிட்டால், இந்தியா, சிரியாவாக மாறிவிடும் என்று பேசி இருந்தார்.

ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இப்படி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருப்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும். எதிர்காலத்தில் அவர் கூறியது போன்ற சூழலும் உண்டாகலாம், அல்லது ஐ.எஸ் தீவிரவாதிகளையும் இந்த விவகாரத்தில் உள்ளே கொண்டு வந்து அமைதியற்ற சூழலை உண்டாக்கும் திட்டமும் இருக்கலாம்.
என்ன விதமான வாழும் கலையை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மக்களுக்கு கற்பிக்கிறார். மக்களுக்கு மிரட்டல் விடுப்பதுதான் வாழும் கலையா?.
நாடாளுமன்றத்தின் ஆளும் பாஜக பெரும்பான்மையுடன்தான் இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும்என்று நினைத்தால், 24 மணி நேரத்தில் அவசரச் சட்டத்தை கொண்டு வந்து, கட்டிடப்பணியைத் தொடங்க முடியும்.
ஆதலால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற ஆன்மீக குரு, ராமர் கோயில் விவகாரத்துக்கு வரத் தேவையில்லை. நீதிமன்றத்தின் மூலம் ராமர் கோயில் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று மக்களிடம் சொல்லும் குருவும் தேவையில்லை. அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் ரவிசங்கர் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ரவிசங்கர் தொடர்ந்து அவரின் வாழும் கலையின் பணிகளை மட்டும் பார்க்கலாம். இந்த விவகாரத்தை பிரதமர்மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் விட்டுவிடலாம்.
இதற்கு பதிலாக, ரவிசங்கர் நாட்டில் உள்ள விவசாயிகள் பிரச்சினை, வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: