ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா விவகாரத்தை காரணமாகக் காட்டி திமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்துள்ள நிலையில், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே, உடனடியாக நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை நடத்த முதல்வருக்கு உத்தரவிடுமாறு நானும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சியினரும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதுதொடர்பாக துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
குட்கா விவகாரம் நடந்த 10 தினங்களுக்குள் உரிமை மீறல் குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுத்திருந்தால் வரவேற்போம். ஆனால், 40 நாட்கள் கழித்து உரிமை மீறல் குழுவைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இதைக் காரணமாக வைத்து 10 பேரை நீக்கி வைத்துவிட்டால் மெஜாரிட்டியை சரிகட்டி கொல்லைப்புறமாக குறுக்கு வழியை கையாண்டு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என கருதுகின்றனர். இது நடக்கப்போவதில்லை.

தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டுவந்து, அது தாராளமாக விற்பனையாகிறதே என ஆதாரத்தைக் காட்டினோம். எனவே, திமுகவினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இந்த உரிமை மீறல் பிரச்சினையை கொண்டுவந்தால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று ஸ்டாலின் கூறினார். tamilthehindu

கருத்துகள் இல்லை: