சனி, 1 ஏப்ரல், 2017

கொடைநாடு எஸ்டேட் ஜெயாவால் எப்படி விழுங்க முடிந்தது ? ஜெயாவின் அடியாள் புரோக்கர் ராமசாமி உடையார்(போரூர் ராமசந்த்ரா மருத்துவ மனை) துணை...

கொடநாடு எஸ்டேட்டை சசிகலாவுக்கு வாங்கித் தர, ராமசாமி உடையார் குடும்பம் ஏன் உதவியது என்பதற்கு அரசியல் செல்வாக்கு மட்டும்தான் காரணமா? இல்லை அதைத் தாண்டி என்ன இருந்தது? வழக்கின் 89-வது சாட்சியான கொடநாடு எஸ்டேட் சொந்தக்காரர் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்ன சாட்சியம் அளித்தார்? அதையும் பார்ப்போம்.‘‘என் பெற்றோர் இங்கிலாந்து பிரஜைகள். எனக்கு நான்கு சகோதரிகள். எங்களுக்கு மொத்தம் 298 ஏக்கர் காபி எஸ்டேட் உள்ளது. காபி கொட்டைகளை ஏற்றுமதி செய்கிறோம். 1975-ல் கொடநாடு டீ எஸ்டேட்டை சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அப்போது, அதனுடைய விஸ்தீரணம் 958 ஏக்கர். 1976-ம் ஆண்டு அதில் 60 ஏக்கரை விற்றுவிட்டோம். மீதமுள்ள 898 ஏக்கர் எங்கள் வசமிருந்தது. இந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கியபோது வங்கிக்கு 30 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தக் கடன்  3.50 கோடி ரூபாயாக உயர்ந்தது. கொடநாடு எஸ்டேட்டை விற்க முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் ராஜரத்தினம், சசிகலா, உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடநாடு டீ எஸ்டேட்டை பார்த்தனர். 


1992 ஏப்ரல் மாதம் பாஸ்கரன், சசிகலா ஆகியோர் எஸ்டேட்டை சுற்றிப் பார்த்தனர். அவர்களுடன் ‘டேன்டி’ நிறுவனத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் வந்தனர். நான்கு மணி நேரம் வரை எஸ்டேட்டில் இருந்ததார்கள். டீ எஸ்டேட்டை எப்படிப் பராமரிப் பது என்பதை ‘டேன்டி’ அதிகாரிகள் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ஓரிரு நாட்கள் கழித்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் கொடநாடு எஸ்டேட் வியூ பாயின்டை பார்த்தார். 15 நாட்கள் கழித்து ராஜரத்தினம்  எங்களை அணுகி, கொடநாடு டீ எஸ்டேட்டை வாங்க விரும்புவதாகத் தெரிவித்தார். அதன்பின் ஐந்து கலந்துரையாடல்கள் பெங்களூரில் நடந்தன. அதில் இரண்டில் நான் பங்கேற்றேன். மற்ற கூட்டங்களில் என் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். ராஜரத்தினம் கூறிய நிபந்தனைகள் எங்களுக்கு ஒத்துவராததால் எங்களுக்கும் ராஜரத்தினத்துக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு எஸ்டேட்டை வாங்குவதற்குப் பலர் வந்து பார்த்தனர்.
ராஜரத்தினத்துக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆறு மாதங்கள் கழித்து, நம்பர் பிளேட் இல்லாத வேன்களில் குண்டர்கள் கம்புகளுடன் வந்தனர். அவர்கள், ‘எஸ்டேட்டை சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு விற்க வேண்டும்’ என்றார்கள். 25.10.93 அன்று கூடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அடுத்த நாள் நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. என்னிடம், ‘புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். அதன்படி புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டேன். அடிசன்ஸ், எஸ்.ஆர்.குரூப், சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், எங்களை அணுகினார்கள். நாங்கள் 9.50 கோடி ரூபாய்க்கு விலை சொன்னோம். அரசியல் செல்வாக்கு அந்த நிறுவனங்களை வாங்கவிடாமல் தடுத்துவிட்டதாக நினைக்கிறேன். உடையாருக்கு வேண்டப்பட்ட அர்ஜுன் லால் என்பவர் என்னைச் சந்தித்தார். அதன் பிறகு சென்னையில் உடையாரையும் அர்ஜுன் லாலையும் சந்தித்தேன். எங்களுடைய பேச்சுவார்த்தை அப்போதைய அட்வகேட் ஜெனரலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி யின் வீட்டில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி, உடையாரின் உறவினர். நான் 9.50 கோடி ரூபாய் விலை கூறினேன். 7.50 கோடி ரூபாய் கொடுப்பதாக வும், எஸ்டேட்டின் கடன்களை அடைப்பதாகவும் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு, எஸ்டேட் நிர்வாகத்தில் பங்குதாரர்களாக உடையாரின் இரண்டு மகள்கள் சேர்ந்தனர். ‘வங்கியில் வாங்கிய கடனை அடைக்கிறோம்’ என்றார்கள். ஆனால் சொல்லியதுபோல் கடனை அடைப்பதற்குப் பணத்தைத் தரவில்லை. அதனால், ‘7.50 கோடி ரூபாயை மொத்தமாக எங்களுக்குக் கொடுத்து விடுங்கள். நாங்கள் பங்குதாரர் பொறுப்பிலிருந்து விலகிவிடுகிறோம்’ என்றோம். அதன்படி அவர்கள் 7.50 கோடி ரூபாயை வங்கி வரைவுக் காசோலைகளாகக் கொடுக்க... எங்கள் குடும்பத்தினர் கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொண்டோம்’’ என சாட்சியம் அளித்திருந்தார் பீட்டர் கிரேக் ஜோன்ஸ். 

சொத்துக் குவிப்பு வழக்கின் கொடநாடு எஸ்டேட் போர்ஷனுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் பேசினோம். ‘‘பீட்டர் கிரேக் ஜோன்ஸுக்கு தமிழ் தெரியாது. மொழிபெயர்ப்பு விஷயத்துக்காகதான் அன்றைய அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொடநாடு எஸ்டேட்டை வாங்கி கைமாற்றி விடும் வேலையை உடையார் குடும்பத்தினர் செய்தனர். அதனால் அரசிடம் அவர்கள் நிறைய சாதித்துக் கொண்டனர். இந்தப் பணியைச் செய்வதற்கு முன்பு, அட்வகேட் ஜெனரல் போஸ்டிங் காலியாக இருந்தது. ‘கொடநாடு எஸ்டேட்டை முடித்துத் தருகிறோம். அதற்கு பலனாக என் சம்பந்தியை அட்வகேட் ஜெனரலாக நியமியுங்கள்’ என சசிகலா தரப்பிடம் உடையார் தரப்பு நிபந்தனை போட்டது. இப்படி சசிகலா குடும்பத்துக்கு உதவிய ராமசாமி உடையாரின் மருமகளே ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியம் அளித்தது விந்தை. ஆனாலும்கூட உடையார் குடும்பமும் சசிகலா குடும்பமும் இப்போதும் கைக்கோத்து கொண்டுதான் இருக்கிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டால் அது வெளிச்சத்துக்கு வராது.
எடப்பாடி ஆட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் வழக்கறிஞராக கிருஷ்ணமூர்த்திதான் முதலில் ஆஜரானார்’’ எனப் பின்னணியைச் சொன்னார்கள். 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட் டோருக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், பீட்டர் கிரேக் ஜோன்ஸ் சொன்ன சாட்சியத்தை ஏற்றுக்கொண்டதோடு அவர் முக்கியமான சாட்சி என தீர்ப்பில் சொல்லியிருந்தது. கொடநாடு எஸ்டேட்டின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாய் இருக்கலாம். அடித்துப் பிடித்து வாங்கப்பட்ட இந்தச் சொத்து இனி அரசாங்கச் சொத்து!

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி  விகடன்

கருத்துகள் இல்லை: