வெள்ளி, 31 மார்ச், 2017

குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக தயவு இல்லாமலே பாஜக வெற்றி பெறமுடியும் . இனி அதிமுகவின் தயவு தேவை இல்லை!


மின்னம்பலம்: பாஜக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, 75 நாட்களும் சசிகலா குழுவினர் கூறிய செய்திகளை எடுத்துக்கொண்டு, நடுவண் அரசின் எந்தத் தலையீடும் செய்யாமல் ராகுல் காந்தி வருகையால் பாதிக்கப்பட்டவர்களாக, ஓடி, ஓடி வந்து அன்றைய அதிமுக தலைமையையும், அவர்களின் அரசாங்கத்தையும் ஆதரித்து, உதவிசெய்யும் நோக்கிலேயே எல்லா வேலைகளையும் செய்து வந்தது. ஜெயலலிதா மரணத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கேயே ஓ.பன்னீர்செல்வத்தை கட்டிப்பிடிப்பதும், சசிகலாவை தலையில் கைவைத்து ஆறுதல் கூறுவதுமாகத்தான் இருந்தார்கள். இப்போது ஏன், மோடியின் நடுவண் அரசும், பாஜக-வும் இன்றைய அதிமுக அரசை ‘விழுந்து கடிக்கிறார்கள்?’ இடையில் நடந்து என்ன? அல்லது பாஜக-வின் ‘தந்திரம்’ இப்போது மாற்றப்பட்டுள்ளதா?

பாஜக, ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதும் மரணமடைந்தபோதும் அதிமுக-வை உடைத்து, தமிழ்நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறது என்று, காங்கிரஸ் உட்பட திராவிடர் கழகம் உட்பட முஸ்லீம் அமைப்புகளும் கூறிவந்தன. ஆனால் அந்த நேரத்தில் அப்படி எந்த ஒரு முயற்சியையும் மோடி தலைமையிலான அரசோ, அமித் ஷா தலைமையிலான பாஜக-வோ செய்யவில்லை. ஏன்? அந்த நேரத்தில் பாஜக-வுக்கோ, மோடி குழுவினருக்கோ, முக்கியப் பிரச்னையாக இருந்தது வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல். அந்தத் தேர்தலுக்கு, அகில இந்திய அளவில் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் பாஜக-வுக்கு இருந்த சொந்த வாக்குகள் ‘சொற்பமானதே’. ஆகவே, அதிமுக கையில் உள்ள 50 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 133 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்குகள் போட்டால்தான் ‘மோடி விரும்பும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய முடியும்’ என்ற சூழல் அடையாளம் காணப்பட்டது. ஆகவே, தற்போதைக்கு ‘அதிமுக-வை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை’ என பாஜக தலைமையால் உணரப்பட்டது. அதற்குப் பிறகும், அதிமுக இரண்டாக உடைந்தபோதும், ‘எந்த அணியிடம் அனைத்து உறுப்பினர்களும் வருகிறார்களோ’ அதனுடன் இணக்கம் வைத்துக்கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அனைத்து வாக்குகளையும் அள்ளிவிடலாம் என்ற எண்ணம்தான் பாஜக-விடம் மேலோங்கியிருந்தது.
அதற்குப் பிறகு உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல், மணிப்பூர், கோவா என நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக அதிக இடங்களைப் பிடித்தபிறகு, தங்கள் ‘சொந்தக் கால்களிலேயே’ நின்று குடியரசுத் தலைவர் தேர்தலை சந்தித்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்த பிற்பாடு, அதிமுக மீதான அவர்களது அணுகுமுறையில் ஒரு பகிரங்க ‘மாற்றம்’ வந்துவிட்டது. அதுவே, நடுவண் செல்வாக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் மூலம், ‘சின்னம், கொடி, கட்சிப் பெயர், முடக்கு’ என்ற தந்திரத்தைப் பாய்ச்சுகிறார்கள்.
அப்போதுதான் பகிரங்கமாக ‘பாஜக ஆதரவில் அல்லது தூண்டலில் ஓ.பி.எஸ். அணி’ இறங்குகிறது என்ற விமர்சனம் வந்துள்ளது. சுப்பிரமணியன் சுவாமியும் தனது ‘கொளுத்திப்போடும்’ வேலையைச் செய்து அதை ஆதாரபூர்வமானதாக ஆக்குகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை மாதமும் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதமும் வருகின்றன. அதற்கான பாஜக கட்சியின் வேட்பாளர்களை தேர்வுசெய்வது பற்றி, வருகிற ஏப்ரல் மாதம் 15, 16 தேதிகளில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் நடக்கவிருக்கும் பாஜக-வின் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. ஆனால் அந்தக் கூட்டத்திலும்கூட முடிவு செய்யப்படுமா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால், மோடி விரும்பும் ‘கார்பொரேட் நலன் காக்கும் வேட்பாளர்’ பாஜக-வால், அதாவது ஆர்.எஸ்.எஸ். சக்திகளால் ஏற்றுக்கொள்ளப்படுவாரா? என்ற விவாதம் உள்ளது.
உதாரணமாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோர் ‘கடும் இந்துத்வா சக்திகளால்’ முன்மொழியப்பட்டாலும், மோடியின் கார்பொரேட் நலன் காக்கும் சக்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டர்கள் என்ற கருத்தும் உள்ளது. அதற்காகவேதான் மீண்டும் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றோர்மீது, உச்சநீதிமன்றம் மூலம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு ‘தூசி தட்டப்பட்டு’ வந்திருக்கிறது என்றும் கருதவேண்டியிருக்கிறது.

அத்தகைய சூழலில், வெளிப் பார்வைக்கு பாஜக-வுக்கும் உண்மையில், ‘மோடி குழுவினருக்கும்’ நடந்துமுடிந்த நான்கு மாநிலத்து தேர்தல் முடிவுகள் நல்ல உற்சாகத்தைக் கொடுத்துவிட்டன.
உத்தரப்பிரதேசத்தில் 325 எம்.எல்.ஏ.க்களும், உத்தராஞ்சலில் 57 எம்.எல்.ஏ.க்களும், மணிப்பூரில் 32 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்திருப்பது ‘பெரும் நம்பிக்கையை’ மோடி குழுவினருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மக்களவையில் 282 எம்.பி.க்களை கையில் வைத்துள்ளனர். ஆகவே, சமீபத்திய நான்கு மாநில வெற்றிக்குப் பிறகு பாஜக என்பது ‘முழு நம்பிக்கையுடன்’, அதிமுக போன்ற காட்சிகளை எதிர்பார்க்காமலேயே குடியரசுத் தேர்தலை சந்திக்கலாம் என்ற மமதைக்கு வந்துவிட்டார்கள்.
அதன்பிறகே, சசிகலா அணியை உடைக்க ஓ.பி.எஸ். அணியைப் பயன்படுத்தலாமா?, ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலுக்கு, சசிகலா அணி மீது தனிப்பட்ட சொத்து வழக்கு உள்ள பிரபல கங்கை அமரனை நிறுத்தலாமா? என்ற சிந்தனைக்கே வந்துள்ளார்கள்.
இத்தகைய பாஜக-வின் திட்டங்களை உணர்ந்ததாலேயே, முஸ்லீம் அமைப்புகளான இந்திய தவுஹீத் ஜமாத்தும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டியும் டி.டி.வி.தினகரனை ஆதரிக்க களம் இறங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: