வியாழன், 30 மார்ச், 2017

ஆன்லைன் விற்பனைகளை தூக்கி அடித்த நேரடி விற்பனைகள் !



கடைகள் மற்றும் வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் சில்லறை விற்பனை குறித்து ஜெப்ரா டெக்னாலஜி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்துவந்தாலும், நேரடி விற்பனை முறையில்தான் பெரும்பான்மையான விற்பனை நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜெப்ரா டெக்னாலஜி நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிராந்திய விற்பனைப் பிரிவு இயக்குநர் தீப் அகர்வால் கூறுகையில், ‘உலகளவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் பங்களிப்பு 28 சதவிகிதமாக இருந்தது. மின்னணு வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நிலையிலும், கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் மக்களுக்குள்ள ஆர்வம் சிறிதும் குறையவில்லை. ஒட்டுமொத்த சில்லறை விற்பனையில், கடைகள் வாயிலாக 91 சதவிகித அளவுக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
அதேசமயம், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகளுடன் வலைதளம் வாயிலாகவும் பொருட்களை விற்பனை செய்து, வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், வலைதளம் வாயிலாகவே தங்களது கடைகளைப் பார்வையிடவும், பொருட்களைத் தேர்வு செய்யவும் தேவையான தொழில்நுட்ப வசதிகளை அளிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்’ என்று கூறினார்.
உலகளவில், பிரத்யேகப் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அங்காடிகள், வர்த்தக வளாகங்கள், ஆடையகங்கள், பல்பொருள் கடைகள், மின்னணு சாதன விற்பனை மையங்கள், மருந்தகங்கள், வீட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் மையங்கள் உட்பட சில்லறை விற்பனையில் ஈடுபட்டுவரும் 1,700க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: