பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு
செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் - இதுவே கழகத்தின் நிலைப்பாடு
என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி
அறிவித்தார்.
இஸ்லாமிய மத
அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை
செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக்
படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை
இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக
சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில்
நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக்
குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன்
காந்தி (மே 17), வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும்,
இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர்
பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழகத்
தோழர்கள் கவிஞர்கள் இரவி பாரதி, இராமசாமி வீரவணக்கக் கவிதைகளை வாசித்தனர்.
ராஜீ,
சங்கீதா என்ற இளம் தோழர்கள், மேடையில் தங்களை திராவிடர் விடுதலைக்
கழகத்தில் பலத்த கரவொலிகளுக்கிடையே உறுப் பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் சார்ந்த தோழர்களும், இருபால் கருஞ்சட்டைத்
தோழர்களுமாக அரங்கம் நிரம்பி வழிந்தது. படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின்
படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பாரூக்கின்
குடும்பத்துக்கு தோழர்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.56,500 நிதி
வழங்கினர்.
இறை மறுப்பாளராகவும், மத
மறுப் பாளராகவும் வாழ்ந்து இலட்சியத்துக்கு உயிரை விலையாகக் கொடுத்த
பாரூக்கிற்கு உரிய மரியாதை செலுத்தும் நோக்கில் பெரியாரின் கடவுள் - மத
மறுப்புக் கொள்கைகளை விளக்கி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்
உரையாற்றினார். பெரியார் அனைத்து மதங்களையும் எதிர்த்தவர். இந்து மதம் -
ஜாதியையும் ‘சூத்திரர்’ என்ற இழிவையும் சுமத்துவதால் சமுதாய விடுதலை
நோக்கில், இந்து மத பார்ப்பனிய எதிர்ப்புக்கு முன்னுரிமை தந்தார். அதனால்
ஏனைய மதங்களை அவர் ஆதரித்த வரில்லை என்று கூறிய விடுதலை இராசேந்திரன்,
பெரியாரின் கீழ்க்கண்ட கருத்தையும் சுட்டிக்காட்டினார்.
“எனக்கு
மோட்சத்திலோ பாவ மன்னிப்பிலோ கடவுள் ஆட்சியிலோ சிறிதும் நம்பிக்கைக்
கிடையாது. ஆத்மா என்பதோ ஜீவன் என்பதோ ஒன்று இருப்பதாக நான் நம்புபவனே
அல்லன். அது விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் இருக் கின்றன.
உலகிலுள்ள சகல மதங்களுக்கும் ஒரு சர்வ சக்தி யுள்ள கடவுளும் மோட்சமும்
நரகமும் ஜீவனும் உண்டு. அவற்றில் ஒன்று பெரியது, மற்றது சிறியது என்று சொல்
வதற்கில்லை. ஒரு மதமும் வேண்டாம் என்பதுதான் சரியான பேச்சும் திட்டமும்
ஆகும். எனக்கு மதத்திலும் தெய்வ பக்தியிலும் தியானத் திலும்
நம்பிக்கையில்லை.
சாதி, மதம், தெய்வம்,
தியானம் என்கின்ற நான்கு தத்துவங்களும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல்
மனித சமுதாயத்திற்குச் சாந்தி யும் திருப்தியும் சுகமும் கிடையா.
அந்த நிலை அடைந்து ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை.
மதம்
மக்களுக்கு அபின் (மது) என்றார் ஒரு பெரியார். ஆனால் நான் மதம் மக்களுக்கு
விஷம் என்கிறேன். மதக்காரனுக்கு சுயமரியாதையும் சுய அறிவும் இல்லை.
மனிதனின் முற் போக்கையும் ஒற்றுமையையும் தடுப்பது மதம் - மனிதனுக்கு மற்ற
சீவன்களைவிட அதிக புத்தி இருந்தும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அடிமை
யாய் இருக்கக் காரணம் மதம்.
ஆகையால்
நான் எந்த மதத் திற்கும் விரோதிதான். மதங்கள் இந்த நாட்டிலிருந்து விரட்டப்
பட வேண்டும். அவைகள் ஒழிய, ஒழிக்கப்பட வேண்டும் என் கின்ற கருத்துடையவன்
நான்.
நான் சமுதாய சமத்துவத் திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டானாவேன்.”
இதுவே பெரியாரின் கருத்து என சுட்டிக்காட்டினார்.
கழகத்
தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “பாரூக் கொலை செய்யப்பட்ட செய்தி
அறிந்து, நாங்கள் கோவைக்கு விரைந்தோம். மருத்துவமனை யில் அவரது உடல்
இருந்தபோது சுமார் 400 பேர் கூடி விட்டார்கள். அதில் இஸ்லாமியர்கள்
எண்ணிக்கை சுமார் 40 பேர் தான். மற்றவர்கள்இஸ்லாமியர் அல்லாத தோழர்கள்
தான். கொலை செய்யப்பட்டது ஒரு இஸ்லாமியராக இருந்தும்கூட வழக்கம்போல்
இதுபோன்ற நிகழ்வுகளில் பெரும் திரளாகக் கூடும் இஸ்லாமியர்கள் வரவில்லை.
இறை
மறுப்பாளர் என்பதற்காக அங்கே வருவதைக்கூட தமது சமூகம் விரும்பாது என்ற
எண்ண ஓட்டத்தைத் தவிர வேறு காரணம் ஏதும் இருக்கும் என்று நான் கருதவில்லை.
உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் இந்தப் புறக்கணிப்பு எங்களுக்கு
கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மற்றொரு செய்தியையும் நான் பதிவு
செய்தாக வேண்டும். பாரூக் உடலை முதலில் “நீங்களே உங்கள் கழக சார்பில் மதச்
சடங்குகளின்றி அடக்கம் செய்து கொள்ளுங்கள்” என்று அவரது தந்தை என்னிடம்
கூறினார்.
பிறகு பிற்பகல் 3 மணியளவில்
“நாங்களே எங்கள் மத முறைப்படி அடக்கம் செய்து விடுகிறோம்” என்று கூறி
விட்டார். அவருக்கு எங்கிருந்தோ அழுத்தங்கள் வந்திருக் கின்றன என்பதை
நாங்கள் புரிந்து கொண்டு, உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள் என்று
கூறிவிட்டோம். மதமறுப்பு கொள்கை பேசியதற்காகவே உயிர்ப்பலியான தோழரின் உடல்
அடக்கம் மதச் சடங்குகளோடுதான் நடந்தது. மற்றொரு கருத்தையும் நான் பதிவு
செய்திட விரும்புகிறேன். பாரூக் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது
மனைவி மற்றும் தாயாருக்கு ஆறுதல் கூறுவதாக - இஸ்லாமிய பெண்கள் குழுவாக
வந்தனர். அவர்கள் பாரூக் துணைவியாரிடம், “பாரூக் நபிகளையே எதிர்த்து
வந்திருக்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் நபிகள் கருத்துகளை எதிர்த்து நூல்
வெளியிட இருந்ததாக சொல் கிறார்களே, ஒரு இஸ்லாமியராக இருந்து கொண்டு -
இப்படி எல்லாம், இறைவனை யும், தூதுவரையும் எதிர்க்கலாமா?” என்று
கேட்டிருக்கிறார்கள்.
ஆக பாரூக் கொலை
செய்யப்பட்டதில் நியாயம் இருக்கிறது என்ற கருத்துரு வாக்கம் அங்கு அவருக்கு
எதிராக அந்தப் பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை
நாங்கள் உணர்ந்தோம். பாரூக்கின் துணைவி யாரும் அவரது தாயாரும் ஒரே ஒரு
கேள்வியைத்தான் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். “பாரூக் இறை மறுப்பு
பேசியது - குற்றம் என்றால், அதற்கான அல்லா தண்டனையை தரட்டும், இவர்கள் அவரை
ஏன் கொலை செய்ய வேண்டும்?” என்ற கேள்வியைத்தான் கேட்டிருக் கிறார்கள்.
எங்களுடைய பெரியார் இயக்க மேடைகளில் எப்போதுமே இஸ்லாமிய கருத்து
சுதந்திரத்தை அங்கீகரித்தே வந்திருக்கிறோம்.
எங்கள்
மேடையில் பேசும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள்கூட “ஏக இறைவன்
சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு அருள் வானாக” என்று எங்களுக்கும்
சேர்த்து ஏக இறைவனை வணங்கித்தான் பேச்சைத் தொடங்குவார்கள். பெரியார்
இயக்கக் கூட்டங்கள் நடக்கும் இடத்தின் அருகே மசூதியிலிருந்து தொழுகைக்கான
அறிவிப்பு வரும்போது அந்த நிமிடங்களில் எங்கள் உரையை நிறுத்திக் கொண்டு
விடுவோம். இஸ்லாமிய மதத்துக்கான கருத்துரிமையை நாங்கள் அங்கீகரித்தே
வருகிறோம். ஆனால் அதே கருத்துரிமை - தோழர் பாரூக்கிற்கு மறுக்கப்பட்டு
அதற்காக அவரது உயிரை விலையாகக் கொடுத்திருக்கிறார். இப்போதும் கூறு கிறோம்.
இஸ்லாமிய தோழர்கள் எங்கள் உறவுகள் தான்.
ஆனால்,
இத்தகைய இஸ்லாமிய அடிப்படை வாதங்கள் தலை தூக்கும்போது அதற்கான
எதிர்ப்புகள் இஸ்லாமிய சமூகத்தினரிட மிருந்து வரவேண்டும் என்றே
எதிர்பார்க்கிறோம். நட்புக்கரம் இந்தச் சூழலில் அவர்களிட மிருந்து
நீட்டப்பட வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க் கிறோம். பெயரளவுக்கு கண்டன
அறிக்கைகளோடு நிறுத்திக் கொண்டு விட்டார்கள். அதிலும் சில அமைப்புகள்
கண்டனம் தெரிவிக்கக்கூட தயாராக இல்லை. இனி எங்களுடையதான தோழமையை முடிவு
செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்” என்று கொளத்தூர் மணி கழகத்தின்
நிலைப் பாட்டை தெளிவாக விளக்கினார்.
தொடர்ந்து
பெரியார் ‘இன இழிவு ஒழிய வேண்டும்’ என்ற ஒரே காரணத்துக் காகத்தான்
இஸ்லாமிய மதத்தில் சேரலாம் என்று கூறினாரே தவிர, இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை
ஆதரித்து அல்ல. நபிகள் நாயகம் விழா இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிகளிலேயே
பெரியார் இஸ்லாமிய மதத்தின் மீதான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
அப்படி பெரியார் பேசிய பல்வேறு கருத்துகளை அவரது உரையிலிருந்து
அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினார். சென்னை மாவட்ட கழகத் தலைவர்
வேழவேந்தன் நன்றி கூற 9 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது கீற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக