ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என
முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.கே.நகரில் மார்ச்
28-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து
முதல்வராக இருந்தபோது விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்? சேகர் ரெட்டியுடன்
உள்ள தொடர்பு என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கணைகளை
தொடுத்திருந்தார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலினைப் பார்த்து கோடை வெயிலின்
உச்சத்தில் பேசுகிறார் என அநாகரிகமாக பேசியுள்ளார். அரசியலில் நாகரிகமாக
கருத்துப் பரிமாற்றம் செய்ய திமுக முயற்சித்தாலும் ஓபிஎஸ் போன்றவர்களால்
இப்படித்தான் பேசுவார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
விவாதங்களில் அரசியல் நாகரிகத்துக்கும், அவர் வளர்ந்த அரசியலுக்கும்
துளியும் தொடர்பில்லை என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார். ஸ்டாலினின்
குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாததன் மூலம் அதிமுகவின் டிடிவி தினகரன்
அணியும், ஓபிஎஸ் அணியும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தார்கள் என்பது
உண்மையாகியுள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருக்கலாம். அவரை தன் கட்டுப்பாட்டில்
வைத்துள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பீதி
ஏற்பட்டிருக்கலாம். ஆர்.கே.நகரில் தோற்றால் அரசியல் எதிர்காலம்
அஸ்தமனமாகிவிடும் என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இதனால்தான்
ஸ்டாலினைப் பற்றி அநாகரிமாக பேசியுள்ளார்.
தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இரு முறை நிதியமைச்சராக
இருந்த ஓபிஎஸ்ஸே காரணம். தமிழகத்தின் கடன் சுமையை ரூ. 3 லட்சத்து 14
ஆயிரம் கோடியாக உயர்த்தியதுதான் அவரது சாதனை.
மோசமான நிதி மேலாண்மை, நிர்வாகச் சீர்கேடுகள், சேகர் ரெட்டி விவகாரம்
ஆகியவற்றுக்கு விசாரணை ஆணையத்தை ஓபிஎஸ் சந்தித்தே தீர வேண்டும். விரைவில்
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையப் போகிறது. அப்போது ஜெயலலிதா
மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ஓபிஎஸ்ஸையும் விசாரிக்க வேண்டிய நிலை
வரும்.
திமுக ஆட்சியில் அமைக்கப்படவுள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக டிடிவி தினகரன்
அணியும், ஓபிஎஸ் அணியும் ஆஜராக தயாராக இருக்க வேண்டும்'' என்று பொன்முடி
கூறியுள்ளார்.
தொடர்புடையவை தமிழ் இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக