செவ்வாய், 12 ஜூலை, 2016

அந்தக் கொலையாளி பிடிபட்ட ராம்குமார் அல்ல... சம்பவ இடத்தில நின்றவர்கள் சாட்சியம்! மதுரை எவிடன்ஸ் அமைப்பு...

சுவாதி படுகொலை வழக்கின் உண்மைகளைக் கண்டறிய எவிடென்ஸ் அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். ‘படுகொலை வழக்கை அவசர கதியில் முடித்து வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். குறிப்பாக, ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் சிறையில் கெடுபிடி செய்கிறார்கள்’ என்கிறார் எவிடென்ஸ் கதிர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘ படுகொலை வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். அவரைக் கைது செய்தபோது, கழுத்தை அறுத்ததற்குக் காரணமே, அவர் பேசக் கூடாது என்பதற்காகத்தான்’ என வழக்கறிஞர்கள் சிலர் பேசி வந்தனர். அதிலும், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இந்நிலையில், சுவாதி படுகொலை வழக்கின் உண்மையைக் கண்டறிய மதுரை எவிடென்ஸ் அமைப்பு களமிறங்கியுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவினர் செங்கோட்டை, சென்னை உள்பட சில பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் குழுவின் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளனர்.

எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். “ சுவாதி படுகொலை வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி என போலீஸார் அவசரம் அவசரமாக வழக்கை முடிக்க நினைக்கின்றனர். அவர்தான் குற்றவாளி என்றால், கடுமையான தண்டனையை நீதித்துறை வழங்கட்டும். அதற்குள்ளாகவே, போலீஸாருக்கு முதல்வர் பாராட்டுப் பத்திரம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? விரைவாக விசாரணை நடத்தினால் மட்டுமே, போலீஸாரின் கை ஓங்கும் என்பதால் வழக்கை அவசரப்படுத்துகின்றனர்.
அவரைக் கைது செய்ய தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன்தான் வந்திருக்கிறார். செங்கோட்டை போலீஸார் வரவில்லை. அன்று மாலை 5 மணிக்கே ராம்குமார் கிராமத்தை போலீஸ் வளைத்துவிட்டது. வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுத் தொழுவத்தில் ராம்குமார் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது கழுத்தை அறுத்தபோது எந்தப் பிளேடும் அவர் கையில் இல்லை. மயங்கிய நிலையில் இருந்தவரை, போலீஸ்காரர்கள்தான் அவரது அப்பா பரமசிவத்திடம் காட்டியுள்ளனர்.

சுவாதி கொலை நடந்த அன்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் ராம்குமார். ‘ மற்ற நாட்களில் வந்திருந்தால் பிரச்னை இல்லை. அன்று இரவே ஊருக்கு வரவேண்டிய அவசியம் என்ன?’ என அவரது அப்பாவிடம் கேட்டோம். ‘ அவன் அடிக்கடி ஊருக்கு வருவது வழக்கம். ஐந்து பேப்பர்களில் அரியர் இருந்ததால், கோச்சிங் கிளாஸ் போவதற்காக நான் மாதம்தோறும் ஐந்தாயிரம் பணம் அனுப்பி வந்தேன். அன்றைக்கும் வழக்கம்போலத்தான் ஊருக்கு வந்தான்’ என்கிறார். சம்பவம் நடந்த ஒரு வாரமும் ராம்குமாரின் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் இயல்பாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். சுவாதியின் செல்போனை ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றியதாக போலீஸ் சொல்வது தவறு. அப்படி எந்தப் போனும் அவரிடம் இல்லை. அவரைக் கைது செய்த பிறகு மூன்று நாளுக்குப் பிறகு, ராம்குமார் தங்கையிடம் இருந்து ஒரு கைப்பையை போலீஸார் எடுத்துக் கொண்டு போயுள்ளனர். இதற்கு ராம்குமாரின் தங்கை எதிர்ப்பு காட்டியுள்ளார். ‘ வீடியோவில் உள்ள பை இதுதான். இந்த பையில்தான் அரிவாளை வைத்திருந்தான்’ எனக் காட்டுவதற்காகவே, போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

‘ படுகொலை நடந்தது 12 முதல் 15 விநாடிகளுக்குள்’ என்கிறது காவல்துறை. ‘ கொலையாளி அங்கிருந்த பூச்செடியை காலால் உதைத்துவிட்டு, அரிவாளால் வெட்டிவிட்டு 2 நிமிடங்கள் அங்கு நின்றிருந்தான்’ என்கின்றனர் போலீஸ் சாட்சிகள். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், ‘ அந்தக் கொலையாளி பிடிபட்ட ராம்குமார் அல்ல’ என்கிறார்கள். அப்படியானால், ‘ சுவாதி கொல்லப்பட வேண்டும்’ என எண்ணிய நபர்கள் யார்... அவர்களோடு ராம்குமார் நட்பில் இருந்தாரா என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவர் மட்டுமே குற்றவாளி என இறுதி முடிவுக்கு போலீஸ் வந்தது தவறு என்றுதான் சொல்கிறோம். கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் உண்மைக் கண்டறியும் குழுவினரோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் விரிவாக.

சுவாதி படுகொலையின் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கேள்விகளும் சர்ச்சைகளும் அணிவகுத்துக் கொண்டேயிருக்கின்றன.

-ஆ.விஜயானந்த்  விகடன்.com

கருத்துகள் இல்லை: