சனி, 16 ஜூலை, 2016

சிவகங்கை கலெக்டர் மலர்விழி மீது விசாரணை: நீதிமன்றம் உத்தரவு!


நூறு நாள் வேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அதனால் நாகல் ஊராட்சி தலைவர் ஜெயந்திபாலா மீது நடவடிக்கை வேண்டும் என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பரில் தமிழரசன் என்பவர் வழக்கு தொடுத்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இந்த வழக்கு தொடர்பாக, வேலூர் கலெக்டர் நந்தகோபாலை ஆஜராகக் கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. அதனால், நந்தகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தலைமை நீதிபதி கவுல் உத்தரவிட்டார். மேலும் நந்தகோபாலுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையொட்டி ‘கைது நடவடிக்கை வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, தலைமை நீதிபதி கவுல் கைது நடவடிக்கையைத் திரும்ப பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். சிவகங்கை மாவட்டம் புதுகிளுவச்சி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோயிலுக்காக தங்கள் குடும்பத்தினர் அமைத்து பராமரித்து வரும் ஊருணியை காஞ்சிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு மாவட்ட ஆட்சியர் துணைப்போவதாகவும் அவர் குற்றச்சாட்டியிருந்தார். இதுதொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், ஊருணியைப் பராமரித்து வந்ததாக கூறி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விமலா, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் இவ்வழக்கு தொடர்பாக விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். minnambalam.com

கருத்துகள் இல்லை: