ஞாயிறு, 10 ஜூலை, 2016

கர்நாடக டி எஸ் எப் கணபதி தற்கொலைக்கு முன் வழங்கிய டிவி பேட்டி

கர்நாடகத்தில் டிஎஸ்பி தற்கொலை வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மங்களுர் டிஎஸ்பி கணபதி (51), விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் அவர் உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த வீடியோ பேட்டியில், ”நேர்மையான அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு ஏடிஜிபி ராம்பிரசாத், ஐஜி பிரணாப் மொகந்தி, உள்துறை அமைச்சராக இருந்த கே.ஜெ.ஜார்ஜ் ஆகியோர்தான் காரணம். இவர்கள் எனக்கு பணியில் தொல்லை கொடுத்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பெங்களுருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் டிஎஸ்பி தற்கொலை வழக்கு, சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
உள்துறை அமைச்சர் ஜார்ஜ்க்கு சக அமைச்சர்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா கூறுகையில், கணபதி நேர்மையான போலீஸ் அதிகாரி. கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. துன்புறுத்தல் காரணமாகவே இது நடந்துள்ளது. காவல்துறையில் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. மக்களும் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆள்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சிக்கமகளூரு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்லப்பா என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மற்றொரு துணை போலீஸ் சூப்பிரண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகத்தில் போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கர்நாடகா மாநில மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ் பி.முகமது ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா அம்மாநில போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு போலீஸ் அதிகாரிகள் தற்கொலை குறித்து மாநில அரசிடம் அறிக்கை கோரப்படும். மாநில அரசின் அறிக்கையை அடுத்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவிடம் உறுதி அளித்துள்ளார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: