புதன், 13 ஜூலை, 2016

கட்சிப்பணம் 500 கோடியை கொள்ளை அடித்த விஜயகாந்தை கறைபடியாத கரம் என்று துதி பாடிய கம்யுனிஸ்டுகள்

cpi-cpm-kickedதே.மு.தி.க.வின் 14 மாவட்டச் செயலாளர்கள், விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக்கடிதம், தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. “2005 முதல் 2016 வரை கட்சி நிதி, நன்கொடை, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் – என 500 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்த பணம் என்னவானது? கட்சிக்கு வரும் நன்கொடைகளை டிரஸ்ட் பெயரில் வாங்கினீர்கள். அந்த டிரஸ்டில் இருப்பது விஜயகாந்த், பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகிய மூன்று பேர் மட்டும்தான்” என்று அம்பலப்படுத்தும் இந்தக் கடிதம் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளது.
மிழகத்தில் மூன்றாவதுஅணி என்ற பெயரில் அழைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி மற்றும் விஜயகாந்த் கட்சி, வாசன் கட்சி ஆகியன இணைந்த கூட்டணியானது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவமானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கம்யூனிஸ்டுகள் இத்தேர்தலில் வெறும் 0.8 சதவீத வாக்குகளைப் பெற்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பார்த்து அனுதாபப்படுவதைப் போல போலி கம்யூனிஸ்டுகளின் இந்தக் கேவலமான தேர்தல் தோல்வியையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போயுள்ளதையும் கண்டு முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் பரிதாபப்பட்டு அங்கலாய்ப்பதோடு, ஆலோசனைகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.- மக்கள்நலக் கூட்டணியின் செயல்திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல போதுமான அவகாசம் இல்லாததால்தான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்குத் தோல்வி ஏற்பட்டது என்று நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று சாடுவதைத் தவிர, தமிழக மக்கள் தமக்கும் தமது கூட்டணிக்கும் ஏன் வாக்களிக்க வேண்டுமென்பதற்கான மாற்றுத் திட்டத்தை இப்போலி கம்யூனிஸ்டுகளால் முன்வைக்க முடியவில்லை. எங்களது கூட்டணித் தலைவர்கள் மீது எவ்வித ஊழல் குற்றச் சாட்டுகளும் இல்லை என்று கூறுவதுதான் மாற்று அணிக்கான தகுதியா? இது ஒரு தகுதி என்றால் ஆட்சிக்கு வராதவர்கள் எல்லோருமே ஊழலற்றவர்கள்தான்.
தேர்தல் ஆணையம் என்பது ஜெ. கும்பலின் எடுபிடி என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இதர எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தபோது, ஜெ.யின் நிரந்தர விசுவாசியான தா.பாண்டியனின் வலது கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயகத்தைக் காப்பது என்ற பெயரால் அங்கே போட்டியிட்டது. இப்போது நாங்கள்தான் உண்மையான மாற்று என்றால், அதை மக்கள் நம்புவார்களா? இத்தனை காலமும் தி.மு.க.- அ.தி.மு.க. என்று மாறிமாறி கூட்டணி வைத்துவிட்டு, இரண்டு பேருமே ஊழல் கட்சிகள் என்று இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல போலி கம்யூனிஸ்டுகள் சொன்னால், அதைப் பார்த்து மக்கள் சிரிக்க மாட்டார்களா? எல்லாவற்றுக்கும் மேலாக, வலது கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தளி ராமச்சந்திரனை வேட்பாளராக நிறுத்திவிட்டு ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்றால், அதை மக்கள் நம்புவார்களா?
தமிழகத் தேர்தலில் கண்டெய்னர் விவகாரம் சந்தி சிரித்தபோது சி.பி.எம். கட்சி வாயே திறக்கவில்லை. கோடிக்கணக்கான ரொக்கப் பணத்துடன் ஒரு கண்டெய்னர் வெளியில் போகும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பற்றிய விவரங்களைக்கூட சி.பி.எம். கட்சியின் வங்கி ஊழியர் சங்கம் மக்களிடம் முன்வைக்கவில்லை. அதற்கு முன்னதாக சிறுதாவூர் கண்டெய்னர் விவகாரம் அம்பலமானபோது, “சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறுபவர்கள், அதைப் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டியதுதானே! அப்படி அவர்கள் 5 கோடி பிடித்தார்கள் என்றால், அதில் ஒரு கோடியை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நன்கொடையாகக் கொடுத்துவிட்டு ரசீது பெற்றுச் செல்லட்டும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அளவுக்கு வலது கம்யூனிஸ்டுத் தலைவர் தா.பாண்டியனின் ஜெ. விசுவாசம் கரைபுரண்டது. அதனால்தான் தனது பதவியேற்பு விழாவில் அவருக்கு முன்வரிசையில் அம்மா இடம் ஒதுக்கினார். இப்படிப்பட்ட பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட போலி கம்யூனிஸ்டுகள் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள்?
cpi-cpm-mile-stonesதமிழகம் மட்டுமல்ல, 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ‘இடதுசாரி’களின் கோட்டையாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்கத்தில் 2011-இல் 62 இடங்களைப் பெற்ற போலி கம்யூனிஸ்டு கூட்டணி, இம்முறை 32 இடங்களை மட்டுமே பெற்று மீளமுடியாத தோல்வியைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் 24 சதவீதமாகத் தேய்ந்து விட்டது. இன்று மே.வங்கத்தில் 44 இடங்களைப் பெற்று பிரதான எதிர்கட்சியாக காங்கிரசு மாறிவிட்டது. போலி கம்யூனிஸ்டுகளோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மே.வங்கத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக திரிணாமுல் காங்கிரசு குண்டர்கள் 200-க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள் சி.பி.எம். தலைவர்கள். எனில், இத்தனை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதைக் கண்டு மக்கள் அனுதாபப்பட்டு வாக்களித்திருக்க வேண்டுமே! ஆனால், முந்தைய தேர்தலைவிட இடதுசாரி கூட்டணிக்கு மேலும் வாக்குகள் சரிந்துகொண்டே போகிறதே! எந்தப் பெரிய கட்சியும் தேர்தல் கூட்டணி கட்ட முன்வராமல், தமிழகத்தில் ஒரு உதிரிக்கட்சி நிலைக்குத் தரம் தாழ்ந்து போய்விட்டதே! கேரளா, மே.வங்கம், திரிபுரா தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் தேர்தலில் தனித்து நின்று சொந்த செல்வாக்கில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத நிலைக்கு அக்கட்சி வீழ்ச்சியடையக் காரணம் என்ன?
இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த சொந்தக் காலில் நின்று மக்களைத் திரட்டி ஒரு புரட்சியைச் சாதிக்கும் நோக்கத்தில் இப்போலி கம்யூனிஸ்டுகள் ஒருக்காலும் கட்சியைக் கட்டவேயில்லை. கம்யூனிசத்தின் அடிப்படைகளை முற்றாகக் கைகழுவிவிட்டு, நிலவுகின்ற அரசியலமைப்பு முறையைக் கட்டிக்காத்து, இன்னுமொரு ஓட்டுக் கட்சியாக செயல்படும் வகையில்தான் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் திட்டமும் நடைமுறையும் இருந்து வருகிறது. எங்களது பாதை ரஷ்யப் பாதையுமல்ல, சீனப் பாதையுமல்ல; இது இந்தியப் பாதை என்றும், நமது மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்து படிப்படியாகத்தான் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு கம்யூனிசத்தின் அடிப்படைகளை முற்றாகக் கைகழுவியதோடு, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வழிகாட்டுதல்களையும் இப்போலி கம்யூனிஸ்டுகள் அறவே புறக்கணித்தனர்.
cpi-cpm-makkal-nala-koottaniகாந்தி – காங்கிரசுக்குள் முற்போக்குகளைத் தேடி ஆதரவளித்த இவர்கள், போலி சுதந்திரத்துக்குப் பிறகு நேருவை சோசலிஸ்டாகத் துதிபாடி ஆதரித்தனர். அதன் பிறகு அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அணியிலிருந்த இந்திரா காந்தியின் வெளிநாட்டுக் கொள்கை முற்போக்கானது, உள்நாட்டுக் கொள்கைதான் பிற்போக்கானது என்று விமர்சனத்துடன் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கட்சிகளுடன் சேர்ந்து ஒரு ஐக்கிய முன்னணி, அதனுடன் எல்லா இடதுசாரி சக்திகளையும் இணைத்து இடதுசாரி ஜனநாயக முன்னணி; பிறகு அதையே புரட்சிகர மக்கள் ஜனநாயக முன்னணியாக மாற்றி புரட்சியைச் சாதிப்பது என்ற திட்டத்துடன் எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் முற்போக்கைத் தேடிக் கூட்டணி கட்டி சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டனர்.
நக்சல்பாரி இயக்கம் தீவிரவாதப் பாதையில் செல்கிறது; இது இந்திய மண்ணின் யதார்த்த நிலைமைக்குப் பொருந்தாத பாதை; நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்குப் பிரமை உள்ளது; எனவே தற்போதைக்கு நடைமுறைக்குச் சாத்தியமான நாடாளுமன்றப் பாதையில் சென்று, படிப்படியாக அதை அம்பலப்படுத்தி புரட்சியைச் சாதிக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால் இந்தப் ‘புரட்சிப் பாதை’யில் இக்கட்சிகள் பயணப்பட்டு சாதித்தது என்ன? நாடாளுமன்றப் பாதையில் சென்று எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு அவர்களே சாட்சியமாகிப் போனார்கள். சட்டமன்ற – நாடாளுமன்றப் பாதை எனும் சட்டகத்தில் சிக்கிக் கொண்டுவிட்ட பிறகு, நாயினும் தரம் தாழ்ந்து போவதைத் தவிர வேறு வழியுமில்லாமல் போய் அக்கட்சிகளும் செல்லாக்காசாகிவிட்டன.
இதே நாடாளுமன்றப் பாதையில் செல்லும் பிற ஓட்டுக் கட்சிகள்கூட தமது சமூக ஆதரவை ஏதாவதொரு வகையில் தக்கவைத்துக் கொள்ளும்போது, இக்கட்சிகளால் தமது சமூக ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடிவதில்லை. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் ஆளும் வர்க்கங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைக்கு எதிரான மாற்றுக் கொள்கையோ, திட்டங்களோ இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளிடம் இல்லை. இதே கொள்கைகளை ‘மனிதமுகம்’ கொண்டதாக, மக்களைக் கடுமையாகப் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டுமென்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும் மாற்றுக் கொள்கை. இந்த ‘மனிதமுகம்’ என்பது, மே.வங்கத்தின் சிங்கூர் – நந்திகிராமத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்குவதுதான் என்று சந்திசிரித்துப் போய்விட்டது.
போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்கள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும், பொருளாதாரவாத அடிப்படையில் கட்டப்பட்ட அச்சங்கங்களின் பலம் தேர்தலில் ஓட்டுக்களாக மாறுவதில்லை. அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு அரசியல் போராட்டங்களை நடத்த முன்வராத இப்பொருளாதாரவாத செக்குமாட்டுத்தனமும் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியும் அவர்களது கடந்தகால செல்வாக்கையும் அரித்துத் தின்றுவிட்டது. அவர்களது வர்க்கப் போராட்ட அமைப்புகளும் செயலற்று முடங்கிப்போய்விட்டன.
சட்டமன்ற – நாடாளுமன்றத்தில் ஒரு சில சீட்டுக்களைப் பெற்று அரசு சன்மானங்களையும் சலுகைகளையும் பொறுக்கித் தின்பது, தமது பதவிகளைக் காட்டி அரசு அலுவலகம், போலீசு நிலையம், தொழிற்சங்கங்களில் புரோக்கர் வேலை செய்து தொழில் அமைதியைக் காத்து ஆதாயமடைவது என்பதுதான் அவர்களின் அன்றாட நடைமுறையாகிப் போய்விட்டது. இதுவும் போதாதென்று இதர ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போலவே இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டு பிழைப்புவாதிகளையும் புரோக்கர்களையும் கொண்ட கோடீசுவரக் கட்சிகளாக மாறிவிட்டன.
தமது சுய அழிவுப்பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை வைத்துதான் தாங்களும் ஒரு கட்சி என்று இவர்களால் விளம்பரப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதுவும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.
கொசுறு:
அண்மையில் தே.மு.தி.க.வின் 14 மாவட்டச் செயலாளர்கள், விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக்கடிதம், தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. “2005 முதல் 2016 வரை கட்சி நிதி, நன்கொடை, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் – என 500 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்த பணம் என்னவானது? கட்சிக்கு வரும் நன்கொடைகளை டிரஸ்ட் பெயரில் வாங்கினீர்கள். அந்த டிரஸ்டில் இருப்பது விஜயகாந்த், பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகிய மூன்று பேர் மட்டும்தான்” என்று அம்பலப்படுத்தும் இந்தக் கடிதம் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளது.
இப்பேர்ப்பட்ட விஜயகாந்தைத்தான் கறைபடியாத கரம் என்று விளம்பரப்படுத்தி, இவரை முதலமைச்சராக்கி ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாகப் போலி கம்யூனிஸ்டுகள் கதையளந்தார்கள். இதை நம்பி தமிழக மக்கள் வாக்களித்து, தப்பித் தவறி விஜயகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சராகியிருந்தால், விஜயகாந்தும் பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் தமிழ்நாட்டையே தமது குடும்ப டிரஸ்டுக்குப் பட்டா போட்டுக் கொண்டிருப்பார்கள். முத்தரசனும் ராமகிருஷ்ணனும் அதற்கு சாட்சி கையெழுத்து போட்டிருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
– மனோகரன்  வினவு.காம்

கருத்துகள் இல்லை: