வியாழன், 14 ஜூலை, 2016

மிருகத்தனமாக அடித்த போலீசை பதவிநீக்குக ! அடிவாங்கிய தலித் குடும்பம் அதிரடி கோரிக்கை ~

எங்களை தாக்கிய காவலர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்” பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்த ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செங்கம்- போளூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதோடு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் நம்மாழ்வார் அந்த வழியாக வந்தார். அவர் தகராறு குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். இது குடும்ப தகராறு இதில் போலீசார் தலையிட வேண்டாம் என்று ராஜா கூறியுள்ளார்.

இதனால் ராஜாவுக்கும், காவலர் நம்மாழ்வாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. உடனே நம்மாழ்வார், உடன் பணிபுரியும் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன், காவலர்கள் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து ராஜா, உஷா, சூர்யாவை லத்தியால் சரமாரியாக தாக்கியதோடு, கால் உதைத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் தாக்கப்பட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முருகன், காவலர்கள் விஜயகுமார், நம்மாழ்வார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
காவலர்கள் தாக்குதலில் காயம் அடைந்த ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் முழுவதும் லத்தியின் தடம் பதிந்து காயமாக உள்ளது. அவரது மனைவி உஷாவிற்கு தாடை, முகத்திலும், மகன் சூர்யாவிற்கு நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் லத்தியின் தடம் காணப்படுகிறது.
காவலர்கள் தாக்கியது குறித்து ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், போலீசார் எங்களை நடுரோட்டில் தாக்கியது மட்டுமல்லாமல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அங்கு வைத்தும் அடித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களை விசாரித்து அனுப்பினார். போலீசார் அடித்த வலி தாங்காமல் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றோம். அங்கு வந்த போலீசார் மறுபடியும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடாது என்றும், தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறினர். அதைத்தொடர்ந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதை அடுத்து எங்களை சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பொதுமக்களின் முற்றுகை, சாலை மறியல் காரணமாக 3 போலீசாரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளனர். எங்களை கண்மூடித்தனமாக தாக்கிய 3 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்” என்று கூறினார்.
vikatan.com

கருத்துகள் இல்லை: