சனி, 30 ஜனவரி, 2016

Vikatan:மிஸ்டர் கழுகு: நடுக்கத்தில் மாஜி மந்திரிகள்!>கருணாநிதி வாங்கிய சீக்ரெட் கையெழுத்து

ழுகார் உள்ளே நுழைந்ததும், 2014-ம் ஆண்டு டிசம்பர் ஜூ.வி. இதழ் ஃபைலைக் கேட்டு வாங்கிப் புரட்ட ஆரம்பித்தார். ‘கருணாநிதி வீழ்த்திய ஸ்டாலின் தளபதிகள்’ என்ற அட்டைப் படத்தைப் பார்த்ததும் சிரித்தபடியே உள்ளே புகுந்தார்! ‘‘அப்போது நான் கொடுத்த செய்திகளுக்கு இப்போது வேலை வந்துள்ளது. தி.மு.க-வின் இப்போதைய மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேயறைந்ததுபோல ஆகிவருகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய திகிலுக்குக் காரணம்!”


‘‘அப்போது என்ன நடந்தது?”

‘‘2014-ம் ஆண்டு டிசம்பரில் தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்தது. அப்போது மாவட்டச் செயலாளர்கள் பலரும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும்  அந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதி வரவழைத்தார். அப்போது நடந்ததைச் சொல்லி இருந்தேன். 15-ம் தேதி  மாலைதான் இந்த மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் சென்னைக்கு வரச்சொல்லி தாக்கீது போனது. சிலர் மட்டும் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு கேட்டார்கள். ‘தலைவர் அழைத்தால் தலைவருக்குத்தான் தெரியும்’ என்று மையமாக ஸ்டாலின் சொல்லிவிட்டார். ஏதோ எழுதி வாங்கப் போகிறார் என்று அடுத்துச் சொன்னார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் இதையே ஸ்டாலினிடம் கேட்க, ‘எழுதிக் கேட்டால் எழுதிக் கொடுங்க’ என்றும் சொல்லியிருக்கிறார்.

16-ம் தேதி காலை 9 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் கோபாலபுரம் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். 10.30-க்குதான் இவர்கள் மாடிக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது தொண்டையை சரி செய்துகொண்ட அன்பழகன், ‘தலைவரும் நானும் கலந்து பேசி சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கட்சி இன்று இருக்கும் நிலைமையில் சில சீர்திருத்தங்களை, புனரமைப்பு வேலைகளைச் செய்தால் மட்டுமே கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர முடியும். வளர்க்க முடியும். ஒரே ஆள் மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருப்பது​தான் பல்வேறு விமர்சனங்களை விதைத்துவிட்டன. அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகள் இருக்கின்றன. இதன் தீர்ப்புகள் வர இருக்கின்றன. அதனால் தலைவரும் நானும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்கள். பலரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு​விட்டீர்கள். சிலருக்குப் போட்டி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதிலும் நீங்கள் போட்டியிட்டால், ஒரே ஆளிடம் பொறுப்புகள் குவியும். அதனால், இப்போது மாவட்டச் செயலாளராக ஆகிவிட்டவர்கள் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வுக்கு சீட் கேட்கக் கூடாது. அப்படி வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு போட்டியிட அனுமதி கிடைக்கும். இதுதான் கட்சியின் நன்மைக்காக தலைவரும் நானும் கலந்து பேசி எடுத்த முடிவு. இதனை நீங்கள் அனைவரும் ஏற்று ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று அன்பழகன் பேசப்பேச இவர்கள் அனைவர் முகங்களும் இருள ஆரம்பித்தன. யாருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மறுத்துப் பேசும் துணிச்சலும் இல்லை. பேயறைந்தது போலத்தான் இருந்​துள்ளார்கள். ‘இதனை ஏற்றுக் கொண்டால் அதற்கான கடிதத்தில் அனைவரும் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்’ என்று அன்பழகன் சொன்னார். அனைவரும் அப்போது கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தார்கள்!”
‘‘அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது?”

‘‘ அதில் விஷயம் தெளிவாக இருந்தது.  ‘மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு இந்தத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றவர்கள், கட்டுப்பாட்டை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதற்காக அவர்களிடம் ஓர் உறுதிமொழிப் பத்திரம் பெற வேண்டும் என்று தீர்மானித்தபடி இந்த உறுதிமொழி அந்த வேட்பாளர்களிடத்தில் வாங்கப்படுகிறது. இதில் கையொப்பமிட்டு தலைவரிடம் ஒப்படைப்பவர்கள் அடுத்து வரக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தாங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்றோ, தலைவர் நியமிக்கின்ற பதவிகளில் தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ இடம் அளிக்க வேண்டுமென்றோ வேண்டுகோள் வைக்க மாட்டோம் என்று இதன்மூலம் உறுதி கூறுகிறோம்’ என்று அதில் எழுதப்பட்டு இருந்தது!”

‘‘இதன்படி பார்த்தால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் இல்லை என்று சொல்லும்!”

‘‘ஆமாம்! பொன்முடி, எ.வ.வேலு, நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ஈரோடு ராஜா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், தா.மோ.அன்பரசன், பொங்கலூர் பழனிச்சாமி, தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவர்கள். இவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது!”

‘‘கருணாநிதி துணிச்சலாக முடிவு எடுப்பாரா?”

‘‘தி.மு.க-வில் இதுபற்றி விசாரித்தேன். ‘தலைவர் அப்போது ஏதோ ஒரு கோபத்தில் இப்படி கையெழுத்து வாங்கினார். இன்று அவர் முதலமைச்சர் ஆகும் ஆசையில் இருக்கிறார். இந்த நேரத்தில் இதுபோல் சீனியர்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் மேட்டரில் கைவைக்க மாட்டார்’ என்கிறார்கள். ஆனால், தலைமைக்குப் பிடிக்காத சிலரை இதைச் சொல்லி காலி செய்யும் திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் சீனியர்கள் பீதியில் இருக்கிறார்கள்!” என்றபடி அடுத்த மேட்டருக்கு வந்தார் கழுகார்.

‘‘சென்னை மாநகராட்சியை கலைக்கப் போகிறார்கள் என்று ஒரு தகவல் நான்கு நாட்களுக்கு முன் பரவியது. என்ன என்று விசாரித்தால், சென்னை மாநகராட்சியைப் பற்றி வந்த தகவல்கள் தான் இதற்குக் காரணமாம். சென்னையில் ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மீது ஏராளமான புகார்கள். கடந்த 27-ம் தேதி, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சி கவுன்சிலர்களை திடீரென வரச் சொன்னார்கள். அதற்கு மேயர் சைதை துரைசாமியை அழைக்கவும் இல்லை. தானாகக் கூட்டத்துக்கு வந்த அவரை உள்ளே அனுமதிக்கவும் இல்லையாம். ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐவர் அணிதான் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலையாக இருந்தவர்கள். அதற்கடுத்து சென்னையில் இருக்கும் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, டி.கே.எம்.சின்னையா, அப்துல் ரஹீம் உள்ளிட்டவர்களும் எம்.எல்.ஏ-க்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சரியாக இரவு 7.20 மணிக்கு கூட்டம் தொடங்கியது.”
‘‘என்ன சொன்னார்களாம்?”

‘‘கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ்., ‘தி.மு.க-வின் கோட்டையாக இருந்த சென்னையை, வீராணம் திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் மற்றும் தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளால் அ.தி.மு.க-வின் கோட்டையாக அம்மா மாற்றினார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை நமக்கும் நம்முடைய இயக்கத்துக்கும் மிகப் பெரிய அவப்பெயரை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள்தான். அந்த நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டிய நீங்கள், மிக மோசமாகச் செயல்பட்டுள்ளீர்கள். கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி அங்குலம் அங்குலமாக அம்மாவிடம் ஆதாரங்கள் உள்ளன. அதன்படி பார்த்தால், இந்த ஆட்சிக்கு உங்களால்தான் மிகப் பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மிக இக்கட்டான வெள்ள நேரத்தில், நீங்கள் மக்களுடன் இல்லை. அதனால், அமைச்சர்கள் சென்னையின் சில பகுதிகளுக்குள் நுழையவே முடியவில்லை. நம்முடைய இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்தமாக உங்களின் செயல்பாடுகள், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கவுன்சிலரைப் பற்றிய விவரங்கள், என்னென்ன தவறுகள் செய்தீர்கள் என்ற விவரங்கள் புள்ளி விவரமாக ஆதாரங்களோடு அம்மாவிடம் உள்ளன. வரும் பிப்ரவரி 24-ம் தேதி அம்மாவின் பிறந்தநாள், அதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு. அதற்குள் நீங்கள் உங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை மாற்றும் வகையில் செயல்படுங்கள்.  வெள்ள நிவாரண நிதியை முழுமையாகக் கொண்டு சேர்ப்பதும் உங்களின் வேலைதான். அதுபோல் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் சொந்தக் காசைப்போட்டோ அல்லது வசூல் செய்தோ ஏதாவது  உதவி செய்யுங்கள். அதிருப்தியில் உள்ள நம்முடைய கட்சிக்காரர்களைத் தனியாகச் சந்தித்து பேசுங்கள். அவர்களுக்குத் தேவையான வற்றைச் செய்து கொடுக்க வேண்டும். இதை நீங்கள் செய்யவில்லை என்றால், அம்மாவின் பிறந்தநாளுக்குப் பிறகு, உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதைக் கருத்தில்கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். இல்லையென்றால், மாநகராட்சியைக் கலைத்துவிடக்​கூட அம்மா தயங்கமாட்டார்’ என்றாராம்.”

‘‘கடைசி நேரத்தில் கண்டிக்கிறார் களாக்கும்?”

‘‘ 2012-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி சென்னையில் கவுன்சிலர்கள் கூட்டத்தை அதிரடியாகக் கூட்டினார் ஜெயலலிதா.  தியாகராயர் அரங்கில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவே நேரில் கலந்துகொண்டார்.  ‘கவுன்சிலர்கள் மாமூல் வசூல்களை நிறுத்த வேண்டும். அ.தி.மு.க அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தினால் மாநகராட்சியை கலைக்கவும் தயங்கமாட்டேன்’ என்று அரைமணி நேர மீட்டிங்கில் தடாலடியாகப் பேசிவிட்டுக் கிளம்பினார். அதன்பிறகும் இவர்கள் திருந்தவில்லையாம். கட்சி மீது குற்றம்சாட்டிய துறைமுகம் எம்.எல்.ஏ பழ.கருப்பையா அதிகமாக விமர்சித்தது கவுன்சிலர்களைத்தான். ‘சென்னை மாநகராட்சிக்குள் மொத்தம் 22 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. ஒரு தொகுதியைத் தவிர, அனைத்துத் தொகுதிகளும் இப்போது அம்மாவின் கைக்குள் இருக்கின்றன. அந்தத் தொகுதியையும் சேர்த்து வரும் தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை ஜெயிக்க வைக்க வேண்டும். ஆனால், உங்களைப் பற்றி வந்துள்ள ரிப்போர்ட்கள் சரியில்லை. இப்படிச் செயல்பட்டால், உங்களின் அரசியல் எதிர்காலமே சூன்யம் ஆகிவிடும்’ என்று பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார்!”

‘‘கவுன்சிலர்கள் ரியாக்‌ஷன் என்ன?”

‘‘சென்னை கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘மாதச் சம்பளமோ, பெட்ரோல், டீசல் அலவன்ஸோ தருவது இல்லை. சென்னை மேயரும், சென்னைக்குள் இருக்கும் இரண்டு அமைச்சர்களும், சென்னைக்கு புறநகர் பகுதியில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் கவுன்​சிலர்களுக்கு எதையும் செய்து தருவது இல்லை. ஆனால், கட்சி நிகழ்ச்சிகளை கவுன்சிலர்கள்தான் நடத்துகிறோம். லோக்கல் கட்சிக்காரர் வீட்டு நல்லது, கெட்டது நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும். கைநீட்டக் கூடாதாம். வீடு வீடாக நிவாரணம் என்ற பெயரில் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், பணத்துக்கு எங்கே போவது? அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர் களையும் செலவு செய்யச் சொல்லுங்கள்’ என்று சொல்கிறார்கள்!”

‘‘பழ.கருப்பையாவைத் தூக்கிவிட்டார்களே?”

‘‘ ‘துக்ளக்’ ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ  பழ.கருப்பையாவின் பேச்சை ஜூ.வி. இதழில் நீர் முழுமையாக வெளியிட்டு இருந்தீர். அப்போதே அது மேலிடத்துக்குப் போய்விட்டது. அதன்பிறகு ‘ஆனந்த விகடன்’ இதழுக்கு அவர் விரிவான பேட்டி கொடுத்து இருந்தார். அதனுடைய விளம்பரம், கடந்த புதன்கிழமை வெளியான ஜூ.வி-யில் வந்தது. அதனைப் பார்த்ததும் மேலிடத்தில் கோபம் ஆகிவிட்டார்களாம். இதற்குப் பிறகும் அவரை கட்சியில் வைத்திருப்பது சரியல்ல என்றுதான் அவரை நீக்கியுள்ளார் ஜெயலலிதா. மறுநாளே பிரஸ் மீட் கூட்டி, தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார் பழ.கருப்பையா. ‘என்னைத் தேர்ந்தெடுத்த துறைமுகம் பகுதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்​கொள்கிறேன்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை, நான் ராஜினாமா செய்துவிடலாம் என்று பலமுறை யோசனை செய்துதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவை எதிர்த்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பேட்டி அளித்தது இதுதான் முதல் முறை!”

‘‘அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்குள் என்ன நடந்தது?”

‘‘ஓ! அதுவா? சேலத்தில் உள்ள அ.தி.மு.க கட்சிக்காரர்களைத் தாண்டி பொதுமக்களும் கேட்கும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருக்கிறது.

சேலம் நகரில் இருக்கிறது அமைச்சரின் வீடு. இந்த வீட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும்,  சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான புத்திரகவுண்டன் பாளையம் இளங்கோவன் கவனித்து வருகிறார். இவர் சேலம் தெற்குத் தொகுதியில் சீட் கேட்டு இருக்கிறார். தற்போது சேலம் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அதி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளரான செல்வராஜ்.

இதனால் இளங்கோவனுக்கும் செல்வராஜுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் வீட்டில் தனிமையாக இருக்கும் போது, இதுபற்றி அவரிடம்  இளங்கோவன் இந்த விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து செல்வராஜும் அமைச்சர் வீட்டுக்கு வந்துவிட்டார். செல்வராஜுக்கும், இளங்கோவனுக்கும் கடும் வாய்த் தகராறு ஆரம்பிக்க, அமைச்சர் ஓடிப் போய் ஜன்னல் கதவுகளை மூடி, வெளியில் தெரியாத மாதிரி பார்த்துக்கொண்டார். இதில் செல்வராஜின் சட்டை கிழிந்தது. அமைச்சர் தன் வீட்டில்  இருந்த சட்டையை எடுத்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறார். சண்டையில் கிழியாத சட்டை இருக்கா?” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், தே.தீட்ஷித், வீ.சதீஷ்குமார்

கருத்துகள் இல்லை: