திங்கள், 25 ஜனவரி, 2016

எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்...ஏழைகளுக்கு சாவு....கொள்ளையர்களுக்கு வாழ்வு...இதுதான் நடக்கிறது

villupuram suicide 2 (1)
வினவு.com :நாட்டைப் பீடித்திருக்கும் பார்ப்பன பாசிசம் ரோகித் வெமுலாக்களை சூறையாடித் தீர்த்திருக்கும் பொழுது, தனியார்மயத்தின் நுகத்தடிக்கு விழுப்புரம் கள்ளக்குறிச்சி கல்லூரி மாணவிகள் மூன்று பேர் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக எஸ்.வி.எஸ் யோகா மருத்துவக் கல்லூரியின் அநியாய கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடி வந்த அக்கல்லூரியின் மானவிகளான சரண்யா (வயது 18), பிரியங்கா (வயது 18), மோனிசா (வயது 19) ஆகிய மூன்று பேர் 22-01-2016 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கின்றனர்.

ஊடகங்களுக்கு போலிஸ் தெரிவித்துள்ளபடி அவர்களது தற்கொலைக் குறிப்பில் கல்லூரி நிர்வாகம் ஆறு இலட்சத்திற்கும் மேல் கட்டணம் கட்ட சொல்வதாகவும், வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுக்கவில்லையென்றும் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ வகுப்பறையோ போதிய ஆசிரியர்களோ இல்லையெனவும் இங்கு கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையெனவும் கல்லூரி நிர்வாகத்தின் சீர்கேடுகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டு இருக்கின்றனர்.
இது குறித்து கல்லூரி சேர்மன் வாசுகி சுப்ரமணியன் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் சேர்மன் வாசுகி சுப்ரமணியனால் தாங்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் ‘கல்லூரி நிர்வாகத்தின் கொள்ளையை எதிர்த்துதான் தாங்கள் தற்கொலை செய்திருக்கிறோம். எங்களது சாவின் மூலமாகவது பிற மாணவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் மாணவிகள் எங்களது சாவிற்குப் பிறகு கல்லூரி சேர்மேன் வாசுகி சுப்ரமணியன் எங்களை நடத்தை கெட்டவர் எனத் தூற்றுவார். அவர் சொல்வதை தயவுசெய்து நம்பாமல் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
காவல் துறை பிணங்களைக் கைப்பற்றி தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்மேன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
ஆனால் அடிப்படையில் இக்கல்லூரியே ஒரு டூபாக்கூர் கல்லூரி என்பது அரசுக்கு தெரிந்தும் காவல்துறையின் ஒத்துழைப்போடும் தான் இவ்வளவு காலமும் நடைபெற்று வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இத்தனியார் கல்லூரி துணைமருத்துவப் படிப்புகளை வழங்கிவருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் இக்கல்லூரி மாநில அரசு பல்கலைக்கழகங்களின் (State Public University) கீழ் வருவதாகவும் தனியார் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக இக்கல்லூரி செயல்பாடு மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரத்தோடு தான் நடைபெற்று வந்திருக்கிறது.
இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து போராடும் ரோகித் வெமுலா, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் போன்ற மாணவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடு என ஐந்துக்கும் மேற்பட்ட நினைவுறுத்தல் கடிதங்களை எழுதுகிற ஸ்மிருதி இரானியின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தனியார் கல்லூரியின் தரத்தில் எந்தளவுக்கு பாராமுகமாக இருக்கிறது என்பதில் இருந்து இந்த அரசும் அரசின் நிர்வாக உறுப்புகளும் மக்களுக்கு முற்றிலும் எதிர் நிலை சக்தியாக இருக்கின்றன என்பது தெரியவரும்.
villupuram suicide 2 (2)குறிப்பாக இத்தனியார் கல்லூரிக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தலையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொண்டால் இம்மாணவிகளின் கோர முடிவிற்கு யார் காரணம் என்பது எளிதில் விளங்கும்.
2010இல் இக்கல்லூரி நிர்வாகம் தங்களது கல்லூரியிலிருந்து விலக விரும்பும் முதல்வருட மாணவர்கள் ஐந்தரை வருடங்களுக்கான முழுக்கட்டணத்தையும் செலுத்தினால் தான் மாற்றுச்சான்றிதழை தரமுடியும் என மிரட்டியது. கொந்தளித்த மாணவர்களும் பெற்றோர்களும் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர்.
2012இல் இக்கல்லூரி நிர்வாகம் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால் ஹோமியோபதி படிப்புகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அனுமதி மறுப்புக்கு எதிராக இக்கல்லூரி நிர்வாகத்தால் 2012இல் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இதுதவிர 2012இல் கல்லூரியை விட்டு விலக விரும்பும் மாணவரை கல்லூரி சேர்மன் வாசுகி சுப்ரமணியன் மிரட்டுவதாகவும் சான்றிதழை தரமறுப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இவ்வளவு அலைக்கழிப்புகளுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளாக்கப்பட்டும் கூட நீதிமன்றங்களால் கல்லூரியின் அராஜகத்தை ஒன்றும் செய்துவிட முடியவில்லை!
நீதிமன்றங்கள் உதவாது என்று தெரிந்த பிறகு கடந்த செப்டம்பரில் (07-09-2015) இக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் அநியாயக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக விழுப்புரம் கலெக்டர் அலுவலக முன்பாக தொடர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். உண்ணாவிரதமாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்போராட்டம் அரசின் பாராமுகம் காரணமாக 14-09-2015 அன்று தீக்குளிக்கும் போராட்டம் என்ற அளவிற்கு கொந்தளிப்பாக போயிருக்கிறது. ஆனால் அப்பொழுதும் நடவடிக்கை இல்லை.
மாவட்ட கலெக்டர் நிர்வாகம் தங்களது பிரச்சனையில் தலையிட மறுத்ததையொட்டி கடந்த அக்டோபரில் இக்கல்லூரியின் ஆறு மாணவர்கள் எலிமருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். இவ்வளவு தொடர்போராட்டங்களுக்கு மத்தியில் தான் இம்மூன்று மாணவிகளின் தற்கொலைச் செய்தி இன்று நமக்கு எட்டியிருக்கிறது.
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.
ஆனால் அரசின் எந்த உறுப்புகளும் செயலில் இறங்கவில்லை. தாங்கள் சொல்லிக்கொண்ட எந்தவிதமான ஜனநாயக கடமையிலும் நிற்கமுடியாமல் அருகதையற்று தோற்றுப்போயிருக்கிறது இந்த அரசுக் கட்டமைப்பு என்பதை மாணவர்கள் நடைமுறையில் தெரிந்துகொண்டது தான் மிச்சம்.
ஆனால் அதே சமயம் இதே அரசு தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்று சுயநிதிக்கல்லூரிகளின் அத்துணை அட்டூழியங்களையும் மூடி மறைத்து மாணவர்களுக்கும் மக்களுக்கும் எதிர்நிலை சக்தியாக இருந்திருக்கிறது. இந்த அரசுக் கட்டமைப்பு நெருக்கடி தான் (Systemic Crisis, where the state is failed, bankrupted, collapsed and becomes an opposite force to masses) மாணவர்களை முட்டுச்சந்தில் நிறுத்தில் கிணற்றில் குதிக்க வைத்து கொலை செய்திருக்கிறது.
இக்கொலைகள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கும் பொழுதுதான் ஒருபக்கம் அம்மா அடிமைகள் பெஞ்சை தட்டி அம்மாவின் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டிருப்பதும் தோற்றுப்போன அரசில், தேர்தல் ஜனநாயகம் என்று ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் வளைய வருவதும் மத்தியில் ஆளும் பாசிச மோடி கும்பல் இந்துத்துவத்தைப் புகுத்துவதும் போராடும் மாணவர்களை கோழைகள் என்று கும்மியடித்துவிட்டு தன்னம்பிக்கை ஊட்டி அரசின் சதித்தனத்தை பத்திரிக்கை கனவான்கள் மூடி மறைப்பதும் என ஒரு சேர நடந்து கொண்டிருக்கிறது.
போராடிய மாணவிகளோ இந்த அரசமைப்பிற்குள் தீர்வில்லை என்பதனால் தான் மாய்த்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
நாட்டில் தனியார்மயக் கொள்கையும் பார்ப்பன பாசிசமும் இடையறாத தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்கள் தொடர்ச்சியாக சூறையாட்டப்பட்டு வருகின்றனர். இதை வீழ்த்துவதற்கு நம்முன் இருக்கும் ஒரே வழி; சரண்யா பிரியங்கா மோனிசாவை கிணற்றில் தள்ளவைத்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசுக்கட்டமைப்பு நெருக்கடியை உணர்வதும் அதற்கு மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவுவதும் தான்!
– இளங்கோ
இந்தக் கல்லூரி குறித்து வினவு தளத்தில் அக்டோபர் 2015-ல் வெளிவந்த நேரடி ரிப்போர்ட்:
விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !

கருத்துகள் இல்லை: