புதன், 27 ஜனவரி, 2016

சொன்னதும் செய்ததும்...Flashback....savukkuonline.com

AIADMK leader Jayaram Jayalalitha greets the audience during her swearing-in-ceremony as the Chief Minister of Tamil Nadu state in Chennai, India, Saturday, May 23, 2015. An appeals court acquitted the powerful politician in southern India of corruption charges earlier this month, clearing the way for her to return to public office. She was forced last year to step down as the highest elected official in Tamil Nadu after a Bangalore court in September convicted her of possessing wealth disproportionate to her income and sentenced her to four years in prison. (R. Senthil Kumar/ Press Trust of India via AP)தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான்.
எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்று கூறினார் ஜெயலலிதா.
உண்மையில் சொன்னதை செய்தாரா ?    அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன.  செய்துள்ளது என்ன ?
விவசாயத்துறையை பொருத்தவரை, அதிமுக தேர்தல் அறிக்கையில், அரிசி உற்பத்தி, 8.6 மில்லியன் டன்களில் இருந்து, 13.45 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  
2013-14 புள்ளி விபரக் கணக்குகளின்படி, அரிசி உற்பத்தி 7.1 டன்னாக குறைந்துள்ளது.
விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்கு உயர்த்த புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார் ஜெயலலிதா. 
ஆனால் அப்படி எந்தத் திட்டமும் உருவாக்கப்படவில்லை.
விலைவாசியைக் குறைக்க சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்றார். இணையத்தில் ஊக வணிகம் தடை செய்யப்படும். 
இரண்டுமே செய்யப்படவில்லை.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2500 வழங்கப்படும் ன்று 2011ல் அறிவித்தார் ஜெயலலிதா.  
ஜனவரி 2016ல் கரும்பு விலை 2650 ஆக உயர்த்தப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.     
அம்மா குடிநீர் என்று அறிவித்து, ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்றதுதான் நடந்தது.   இத்திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.   ஆனால் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மிகுந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டித்தரப்படும் என்று அறிவித்த 10 ஆயிரம் வீடுகள் கூட கட்டித்தரப்பட வில்லை.   இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை.
அனைத்து கிராமங்களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் தடையில்லா 3 ஃபேஸ் மின்சாரம் வழங்கப்படும்.  2013ம் ஆண்டுக்குள் 5000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.   திமுக ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்ட எண்ணூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களும், டெண்டரில் செய்த குளறுபடிகளால் நீதிமன்ற வழக்குகளில் இத்திட்டங்கள் முடங்கியுள்ளன.   ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யாமல், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
2012ம் ஆண்டுக்குள், 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குப்பையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.    160 கிராமப் பஞ்சாயத்துகளில் 150 கிலோ வாட் பயோ கேஸ் மின்சாரம் தயாரிக்கப்படும்.
குப்பைகளைக் கூட ஒழுங்காக வாராத அரசு என்று பெயர் வாங்கியதைத் தவிர, எதையுமே செய்யவில்லை அதிமுக அரசு.
இத்திட்டங்களின் மூலம், 1,20,000 கோடி கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய சிறப்புத் திட்டங்களின் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைகுனிவில் இருந்து தமிழகத்தை மீட்டு, நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
மார்ச் 2016 அன்று உள்ளபடி, தமிழகத்தின் மொத்த கடன் 2,16,000 கோடி என்று தமிழகத்தின் நிதித் துறை செயலாளரே அறிவித்துள்ளார்.     இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார்.     இப்படி தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியதைத் தவிர வேறு எந்த சாதனையும் அதிமுக அரசு செய்யவில்லை.
விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற்பூங்காக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும்.   குறைந்த விலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் அனைத்து விவசாயப் பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கிற வகையில் நவீன மக்கள் சந்தைகள் அமைக்கப்படும்.
1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த உழவர் சந்தைகளை மூடியதுதான் ஜெயலலிதாவின் சாதனை.     இது போன்ற எந்த சந்தைகளையும் அமைக்கவில்லை.
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதனால் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.   
நிறைவேற்றப்படவில்லை.
பால் உற்பத்தி 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
2013-2014 புள்ளி விபரத்தின்படி 7.04 மில்லியன் டன்னாக பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.    பால் விலையை கணிசமான உயர்த்தியது அதிமுக அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். 
நிறைவேற்றப்பட்டுள்து.
மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும். பள்ளிக் கல்வியின் நடைமுறைக் குறைபாடுகள் நீக்கப்படும்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுதான் ஜெயலலிதா ஆட்சியின் லட்சணம்.
பல்கலைக்கழகங்கள் தனித்தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டங்கள் தீட்டப்பட்டு,  பல்கலைக்கழங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தின் 8 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லை.   அண்ணா பல்கலைக்கழகம் உட்பட, தமிழகத்தின் அனைத்துப பல்கலைக்கழக நியமனங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.    துணை வேந்தர் பதவிக்கு 14 கோடி லஞ்சம் பெறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்க தனித்திறமை மற்றும் அறிவுசார் கழகம் உருவாக்கப்படும்.  அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.    லேப்டாப் வழங்குகையில், இலவச மென்பொருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, விண்டோஸ் மின்பொருளோடு கூடிய லேப்டாப்பை வாங்கினார் ஜெயலலிதா.    அறிவுசார் கழகம் உருவாக்கப்படவில்லை.
இலவச ஃபேன் மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக நதிகளை நீர்வழிச்சாலை மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல் வெள்ளப்பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி, பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்.  தமிழக நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை, உலகவங்கி கடன் உதவியோடு அமைக்கப்படும்.
நீர்நிலைகளை இணைத்து, வெள்ளப்பெருக்கு நீரை சேமிக்கும் லட்சணத்தை சமீபத்திய வெள்ளத்தில் பார்த்தோம்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரண்முறை, உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் நிறைவு செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் தங்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு, கிடைக்காத காரணத்தால், படிப்படியாக பல்வேறு போராட்டங்களில் இறங்கி, பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
இரண்டு மடங்காக்கி கிழிப்பது இருக்கட்டும்.  ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளும், கடையை காலி செய்து விட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலைமைதான் தமிழகத்தில் நிலவுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு சிங்கப்பூரில் உள்ளது போல மோனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 
கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயிலே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக காத்துக் கிடந்தது தமிழகத்தில் நடந்தது.  மோனோ ரயில் சாத்தியப்படாது என்று நிபுணர்கள் தெளிவாக தெரிவித்து விட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவுதாட்சண்யமின்றி நிலை நாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.   உள்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா தமிழக சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பராமரிக்கத் தெரியாமல் கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.    கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள் என்று குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்டோமொகைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை, போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.  சிறுதொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும்.
சிறப்புத் தொழிற் கொள்கை உருவாக்கப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் வெளிநாட்டு முதலீட்டை கவர திட்டம் தீட்டி தொழில் துறை முன்னேற்றத்திற்கு நீர்மிகு நடவடிக்கை எடுக்கப்படும்.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு புதிய தொழில் கூட தொடங்கப்படவில்லை.    இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்பட்ட தமிழகம், தொழில் துறையில் அதளபாதாளத்திற்கு வீழ்ந்தது.  அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை, முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி, முதலீடுகளை வரவேற்று வந்த நிலையில், தமிழகத்தில் முதல்வரையே சந்திக்க முடியாத ஒரு அவலச் சூழல் நிலவியது.    முதல்வரை சந்திக்க முடியாதது மட்டுமல்ல, அப்படியே சந்தித்தாலும், தொழில் தொடங்க வருபவர்களிடம் 25 சதவகிதிம் கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்.     ஆட்சி முடியப்போகிற கடைசி கட்டத்தில், முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் 2,42,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நாடகமாடியதைத் தவிர்த்து, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் தொழில்துறையில் சந்தித்த பின்னடைவை வேறு எப்போதும் சந்தித்தது கிடையாது.
போக்குவரத்துத் துறை நவீனப்படுத்தப்படும்.  கூடுதலான நவீன பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும்.
ஓட்டை உடைசலாக ஓடும் தமிழக பேருந்துகளின் படங்கள் சமூக வலைத்தளங்கள் முழுக்க உலவிக் கொண்டிருக்கின்றன.    தமிழக போக்குவரத்துத் துறை மிக மிக மோசமான சீரழிவை சந்தித்துள்ளது.
இவையெல்லாம் புரட்சித் தலைவி அறிவித்தது.   ஆனால், சொல்லாமலேயே பலவற்றை செய்து மிகச்சிறந்த சாதனையாளராகியிருக்கிறார் ஜெயலலிதா.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் செயல்படுத்துவது போல, “நான்” “எனது” என்று மார்தட்டிக் கொள்வது.   வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், இலவச பொருட்கள் அனைத்திலும் தன் படத்தை வெட்கமே இல்லாமல் ஒட்டிக் கொள்வது.
திமுக தலைவர் கருணாநிதி படம் இருந்தது என்பதற்காக, லட்சக்கணக்கான பாடப்புத்தகங்களை கிழித்தது.
அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டிருந்த அண்ணா நூலகத்தை எப்படியாவது முடக்க கடுமையாக முனைந்தது.  நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் பின்னடைவை சந்தித்த பிறகு, நூலகத்தை திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது.
கூடங்குளம் மக்களுக்கு ஆதரவு தருவது போல நடித்து, இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்தது.
பேருந்துக் கட்டணம், பால் விலை மற்றும மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.   இத்தனை கட்டண உயர்வுகளுக்குப் பிறகும், தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்தது.
சட்டசபையை துதிபாடும் அரங்கமாக மாற்றியது.   எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தது.
அடிப்படை வசதிகளான சாலை வசதிகளைக் கூட செய்து தராமல், மக்களை பரிதவிக்க விட்டது.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கொடநாட்டில் ஓய்வெடுத்தது.
மக்கள் நலப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்னாலும் பணி நீக்கம் செய்தது.
தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது   காவல்துறை பாதுகாப்போடு டாஸ்மாக்கை நடத்தி சாதனை புரிந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஒரே முதல்வர் என்ற பெருமை
சிறையிலிருந்து விடுதலை அடைய வேண்டி அமைச்சர்களும், இதர அடிமைகளும் மண் சோறு தின்றது, காவடி எடுத்தது, அலகு குத்தியது.
விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் அற்பத்தனமாக அரசியல் ஆதாயம் தேடியது.
அப்துல் கலாம் மரணத்திற்கு கூட செல்லாமல் ஓய்வெடுத்தது.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு சென்னை நகரை மிதக்க விட்டது.
வெள்ள நிவாரணத்துக்கு வந்த பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது.
எதிர்த்துப் பேசியவர்கள், எழுதியவர்கள் மீதெல்லாம் அவதூறு வழக்கு போட்டது.
டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது.
இந்தியாவிலேயே இல்லாத வகையில், செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்கு போட்டது.
வருடந்தோறும் நடக்கும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாநாடுகளை நடத்தாமல் நிறுத்தியது.
இப்படி சொல்லாமல் செய்த சாதனைகள் ஏராளம்.   மொத்தத்தில், தமிழகம், ஜெயலலிதாவின் ஆட்சியில், தீராத வேதனைகளையே சந்தித்துள்ளது.
ஆனால் ஜெயலலிதாவோ, ஒவ்வொரு துறையின் சாதனைகளையும் சொல்ல ஒரு நாள் போதாது என்கிறார்.        ஜெயலலிதாவின் இந்தப் பொய்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  தண்டனை அளிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கருத்துகள் இல்லை: