செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வரி ஏய்ப்புக்கு உதவியது HSBC எச்.எஸ்.பி.சி வங்கி !

உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பி.சி வங்கி அதனது வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக பிபிசிக்கும் ஏனைய சில ஊடகங்களுக்கும் கசிந்த ஆவணங்கள் காண்பிக்கின்றன.;ஹெச்.எஸ்.பி.சி.க்காக ஜெனீவாவில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவர் 2007ல் கசியவிட்ட தரவுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன.
2006-2007 காலகட்டத்தில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த மொத்தம் 203 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆறாயிரம் பேரின் கணக்கு விவரங்களை பிபிசியின் பனோரமா நிகழ்ச்சி ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு சர்வதேச ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
பிரஞ்சு பத்திரிகையான le Monde 'ல மோந்த்'துக்கு இந்த தரவுகள் முதலில் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர் புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு என்ற அமைப்பினாலும் பிபிசி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களாலும் இந்த தரவுகள் ஆராயப்பட்டிருந்தன.
தனிநபர்கள் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் ஹெச்.எஸ்.பி.சி.யின் சுவிஸ் கிளைநிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் வழிகள் பற்றி இந்த வங்கி ஆலோசனை வழங்கியதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெளியில் தெரியாமல் பணம் வைக்கக்கூடிய வசதி தரக்கூடிய கணக்குகளை பயன்படுத்திக்கொண்டு, சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பதை ஹெச்.எஸ்.பி.சி ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் அவ்வகையான வங்கிக் கணக்குகளுக்குரிய விதிமுறைகளை தாம் முற்றாக மாற்றிவிட்டதாகவும், அவற்றின் வழியாக யாரும் வரி ஏய்ப்பு செய்ய இனி வாய்ப்பு இல்லை என்றும் ஹெச்.எஸ்.பி.சி கூறுகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்பது என்பதே சட்டவிரோதம் என்றில்லை. ஆனால் வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து பணத்தை பதுக்குவதற்காக இவ்வகை கணக்குகளை பலர் பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது.
வரி விதிக்கப்படாத வகையில் நிதியை நிர்வகிப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செயல்தான். ஆனால் வரி ஏய்ப்பிற்காக பணத்தை பதுக்குவது சட்டவிரோதமானது.
அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஹெச்.எஸ்.பி.சிக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த வங்கியின் தலைமையகமான பிரிட்டனில் கிரிமினல் விசாரணைகள் எதனையும் அது எதிர்கொள்ளவில்லை.
விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக ஹெச்.எஸ்.பி.சி. கூறுகிறது.bbc.co.uk/tamil/

கருத்துகள் இல்லை: