புதன், 11 பிப்ரவரி, 2015

வேடந்தாங்கலுக்கு அதிர்ச்சி ! பறவைகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது!

மழை பொய்த்துப் போனதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கலுக்கு ஒவ்வோர் ஆண்டும் வேடந்தாங்கலுக்கு குறைந்தது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பறவைகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1,531 பறவைகளே வந்துள்ளன. இது வன ஆர்வலர்கள், அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச் சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் 30 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.

நிகழாண்டு ஊசிவால் வாத்து, புள்ளிமூக்கு வாத்து, வக்கா, குருட்டுக் கொக்கு, நத்தைக் கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நீர்காகம், சாம்பல் நாரை, பாம்பு தாரா, தட்டை வாயன், நாமக் கோழி, பவள உள்ளான், மைனா, பச்சைக் கிளி, மீன் கொத்தி, ஆட்டி குருவி, உன்னிக் கொக்கு, முக்குலைப்பான் உள்ளிட்ட பறவை ரகங்கள் வருகை தந்தன.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் இருந்து, வாரக் கணக்கில் இந்தப் பறவைகள் பறந்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, வேடந்தாங்கலில் பறவைகளைக் காண முடியும். வேடந்தாங்கல், அதைச் சுற்றியுள்ள ஏரிகளில் கிடைக்கும் மீன்கள், விவசாய நிலத்தில் உள்ள சிறு சிறு பூச்சிகள்தான் பறவைகளின் பிரதான இரையாகும்.
ஆனால், நிகழாண்டு வேடந்தாங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரியில் வறட்சி ஏற்பட்டது. ஏரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை குறைந்தது. மேலும், அந்தப் பகுதிகளில் விவசாயமும் சரிவர இல்லாததால் பறவைகளின் வரத்து குறைந்தே காணப்பட்டது.
2013- 2014-ஆம் ஆண்டு சீசனில் 32 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், பழவேற்காடு பறவைகள் சரணலாயத்தில் 19,401 பறவைகள் வருகை புரிந்தன. இதுகுறித்து வன உயிர் காப்பாளர் கீதாஞ்சலி கூறியது:
தமிழகத்திலேயே வேடந்தாங்கலில்தான் எல்லாப் பருவங்களிலும் பறவைகள் அதிகமாக காணப்படும். ஆனால், 2014 செப்டம்பர் மாதம் முதல் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வேடந்தாங்கலில் பறவைகள் வருகை குறைவாகவே இருந்தது. இதற்கு, மழை இல்லாதும், விவசாய சாகுபடி இல்லாததும்தான் காரணம். பல பறவைகள் வந்து போதிய உணவு ஆதாரங்கள் இல்லாததால் திரும்பிச் சென்றுவிட்டன.
ஆனால், வனத் துறையின் சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு வேடந்தாங்கல் ஏரிகளில் பறவைகள் உணவுக்காக தொடர்ந்து விடப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் எங்கும் நீர் தேங்காமல் அனைத்தும் ஏரிகளில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றார் கீதாஞ்சலி.

வேடந்தாங்கல் பறவைகள் எண்ணிக்கை!

ஜனவரி 30-ஆம் தேதி கணக்கெடுப்பின்படி மொத்தம் 1,531 பறவைகளே வேடந்தாங்கலில் இருந்தன.

ஊசிவால் வாத்து 231
புள்ளிமூக்கு வாத்து 84
வக்கா 23
குருட்டுக் கொக்கு 106
நத்தைக் கொத்தி நாரை 37
வெள்ளை அரிவாள் மூக்கன் 58
மிளிர் உடல் அரிவாள் மூக்கன் 28
நீர்க்காகம் 138
சாம்பல் நாரை 64
பாம்பு தாரா 37
தட்டை வாயன் 121
நாமக் கோழி 124
பவள உள்ளான் 92
மைனா 47
பச்சைக் கிளி 18
மீன் கொத்தி 17
ஆட்டி குருவி 56
உன்னிக் கொக்கு 231
முக்குலைப்பான் 29

பழவேற்காடு சரணாலயம்

பழவேற்காடு சரணலாயத்தில் ஜனவரி 30-ஆம் தேதி கணக்கெடுப்பின்படி 19,401 பறவைகள் இருந்தன.
வெண் கொக்கு 16,258
ஆற்று ஆலா 73
பனங் காடை 17
கிளுவை 1,750
நீர்க்காகம் 54
நத்தைக் கொத்தி நாரை 368
வெள்ளை அரிவாள் மூக்கன் 245
மஞ்சள் மூக்கு நாரை 487
கூழைக்கடா 82
குண்டு கரிச்சான் 67  dinamani.com/

கருத்துகள் இல்லை: