வியாழன், 12 பிப்ரவரி, 2015

CNN IBN -னை தொடர்ந்து NDTV யையும் 'வசப்படுத்தியது' ரிலையன்ஸ்? Where is Anti Monopoly Law?

ஈ நாடு. சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி குழுமங்களைத் தொடர்ந்து என்.டி.டி.வி. தொலைக்காட்சியையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வசப்படுத்தியிருப்பது நியூஸ் லாண்ட்ரி என்ற இணையத்தளம் மூலம் தெரியவந்துள்ளது. 
ஜவுளித்துறையில் தொடங்கி செல்போன், சில்லறை காய்கறி கடைகள், பெட்ரோல் நிறுவனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் என சகல துறைகளிலும் சகட்டுமேனிக்கு கால்பதித்துக் கிடந்த ரிலையன்ஸ் குழுமம், ஊடகத்துறையையும் தன்வசப்படுத்தும் கோதாவில் குதிக்கத் தொடங்கியது. 
முதல் கட்டமாக 2012ஆம் ஆண்டு சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சியை நடத்தும் நெட்வொர்க் 18 நிறுவனம் மூலமாக தெலுங்கின் முன்னணி நாளிதழான ஈ நாடு நிறுவனத்தின் 12 மொழிகளின் தொலைக்காட்சி சேனல்களை ரூ2100 கோடிக்கு வாங்கியது ரிலையன்ஸ்.
 
 இது பத்திரிகை மற்றும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நெட்வொர்க் 18 நிறுவனத்தின் 78% பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.4,000 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சி உள்ளிட்ட சி.என்.என் ஐ.பி.என், ஈ டிவி, பர்ஸ்ட் போஸ்ட்.காம், மனிக்கண்ட்ரோல்.காம், கலர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்ஸ் வசமாகியது. ரிலையன்ஸின் இந்த ஊடக வர்த்தகங்கள் அனைத்தும் இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற துணை நிறுவனத்தின் பெயராலே நடந்தது. 
 
தற்போது இதே பாணியில் என்.டி.டி.வி. குழுமத்தையும் ரிலையன்ஸ் வசப்படுத்தியிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் அதிகம் பேசப்பட்டவர் நீரா ராடியா. இவரது தொலைபேசி உரையாடல் ஒன்றில் மனோஜ் மோடி என்பவரது பெயரும் அடிபடும். அவர் முகேஷ் அம்பானியின் 'தளகர்த்தர்'களில் ஒருவர். அதில் நீரா ராடியா, மனோஜ் மோடி மற்றும் என்.டி.டி.வி.யின் பிரணாய் ராய் சந்திப்புகள் குறித்தும் இடம் பெற்றிருக்கும். என்.டி.டி.வியின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கும். இந்த உரையாடல் சந்திப்பு எல்லாம் 2009ஆம் ஆண்டு நடந்தது. அதே ஆண்டில்தான் ரிலையன்ஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) நிறுவனத்தின் துணை கம்பெனியான ரிலையன்ஸ் வென்சர்ஸ் நிறுவனமானது ஷினானோ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரூ.403.85 கோடியை கடனாகக் கொடுக்கிறது. ஷினானோ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி யாருடையது? அது ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் லிமிடெட்டின் மற்றொரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்டரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்தான்... அதே ஆண்டு ஷினானோ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் கம்பெனியானது அதே ரூ.403.85 கோடி தொகையை விஸ்வ பிரதாபன் கமர்சியல் பிரைவேட் லிமிடெட்டுக்கு கடனாக கொடுக்கிறது. விஸ்வ பிரதாபன் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி யாருடையது? இதில் இருவர் இயக்குநர்களாக இருந்தனர். ஒருவர் அஸ்வின் காஸ்கிவாலா, மற்றொருவர் கல்பனா சீனிவாசன். இவர்களில் அஸ்வின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதிப் பிரிவின் துணைத் தலைவர்; கல்பனா அதே நிறுவனத்தின் கம்பெனி செக்ரட்டரி. இவர்களின் பெயரிலான விஸ்வபிரதாபன் நிறுவனத்தின் முகவரி எது தெரியுமா? ரூ.403.85 கோடி கடன் கொடுத்த ஷினானோ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் இயங்குகிற முகவரியில்தானாம். சரி விஸ்வதபிரதாபன் கம்பெனியானது ரூ.403.85 கோடியை என்ன செய்தது தெரியுமா? என்.டி.டி.வி. குழுமத்தை நடத்துகிற ராதிகா ராய் பிரணாய் ராய் ஹோல்டிங் பிரைவேட் நிறுவனத்தின் 29.18%பங்குகளை ரூ.403.85 கோடிக்கு வசப்படுத்தியிருக்கிறது. அதாவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக ரூ.403.85 கோடியை என்.டி.டி.வி.யின் 29.18% பங்குகளை வாங்காமல் தனது துணை நிறுவனங்கள் மூலமே சுற்றி சுற்றி 'கடனாக' கொடுத்து வசப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே சி.என்.என்.ஐ.பி.என்-ன் குழுமமான நெட்வொர்க் 18 மூலமாக ஈ நாடு குழுமத்தை பர்சேஸ் செய்த முகேஷ் அம்பானி பின்னர் நெட்வொர்க் 18 நிறுவனத்தையே விழுங்கினார்.
இப்போதும் அதே பாணியில் என்.டி.டி.வி. குழுமத்தையும் கபளீகரம் செய்துள்ளது அம்பானிகளின் சாம்ராஜ்யம்!
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: