வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

பீகார் ராஜஸ்தானிலும் நிச்சயமான தோல்வியை நோக்கி பாஜக! After shock of Aam aadhmi ?

புதுடெல்லி: தொடர் வெற்றியை சுவைத்த பாஜ, டெல்லியில் படுதோல்வி அடைந்ததையடுத்து, அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்தடுத்து தேர்தல்  நடைபெறவுள்ள பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்  கரையேறுமா என்ற சந்தேகம் அதன் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில்,  மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜ 3 இடங்களை மட்டுமே  பிடித்தது. கடந்தமுறை 31 இடங்களில் வென்ற அக்கட்சி இந்தமுறை ஒற்றை இலக்காக சுருங்கி விட்டது.ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்தது. உஷாரான பாஜ முழுவீச்சாக களம் இறங்கியது. பிரதமர் நரேந்திர  மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க  முடியவில்லை. டெல்லியில் பாஜவை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மட்டுமே 282 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி  ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கூட எதிர்ப்பார்ப்புக்கும்  மேலான வெற்றியை பாஜ பெற்றது.

எனவே டெல்லி தேர்தலில் எளிதில் வென்றுவிடலாம் என நினைத்தது. ஆனால் எதிர்பாராத தோல்வியை பாஜ சந்தித்துள்ளது.
இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜ வெற்றிபெற்றிருந்தது. சுமார் 8 மாதத்தில் அக்கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது.   தற்போது ஆம் ஆத்மிக்கு  கிடைத்துள்ள வெற்றி, அக்கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மட்டும் காரணமல்ல; பாஜ அரசு மீது ஏற்பட்ட அதிருப்திதான். நாடாளுமன்ற தேர்தலின்போது  பாஜ பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை மோடி தலைமையிலான அரசு பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்த இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், பாஜவின் தோல்விக்கு அக்கட்சியினரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களே காரணமாக அமைந்து விட்டது. குறிப்பாக, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள்  சர்ச்சைக்குரிய பேச்சுகளை அடிக்கடி பேசிவந்தனர். காந்தியை கொன்ற கோட்சேவை தேசியவாதி என்று பாஜ எம்பி சாக்ஷி மகராஜ் பேசியது, பகவத் கீதையை தேசிய  நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியது உள்ளிட்டவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எம்பிக்கள், அமைச்சர்களின் சர்ச்சைகுரிய  பேச்சுக்களால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய  பேச்சுகளை பேசிவரும் பாஜவினரை பிரதமர் கண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இப்பிரச்னையில் பிரதமர் மோடி மவுனமாகவே  இருந்தார்.

மேலும், உத்தரபிரதேசத்தில் பாஜவினர் மதமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில், குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு  விருந்தினராக வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மதசார்பின்மையை கடைபிடித்தால் இந்தியா மேலும் வளர்ச்சி அடையும் என தெரிவித்திருந்தார். ஒபாமாவின்  கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஒபாமா வருகையின்போது பிரதமர் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடைகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. அந்த ஆடையின்  மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் பாஜ அரசு மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் எதிரொலியாகதான் டெல்லியில் அக்கட்சி  படுதோல்வியை சந்தித்துள்ளது.

டெல்லி தேர்தல் முடிவுகள் மற்ற மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளது. டெல்லி தேர்தலுக்கு பிறகு காஷ்மீரில் பாஜ, பிடிபி கூட்டணி ஆட்சி அமையும் என  எதிர்பார்க்கப்பட்டது. இது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. பாஜவின் தோல்வி எதிர் கட்சிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பீகார், பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்ற நோக்கில் பாஜ காய்நகர்த்தி  வந்தது.

இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவு அக்கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு செல்வாக்கு  இருந்து வருகிறது. நிதிஷுடன் லாலு பிரசாத்தும் கைகோர்த்துள்ளார். இதனால் வருகிற தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என நிதிஷ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தோல்வியை தழுவினாலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி 4 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. தற்போது டெல்லியில் பெற்ற  அமோக வெற்றியால் அக்கட்சி உற்சாகத்தில் உள்ளது. பஞ்சாபிலும் வலுவாக கால்பதிக்க ஆம் ஆத்மி திட்டமிட்டு இப்போதே செயலில் இறங்கிவிட்டது. பீகார், பஞ்சாப்  ஆகிய மாநிலங்களில் பாஜவின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=70424#sthash.5MNHsxr0.dpuf

கருத்துகள் இல்லை: