வெள்ளி, 11 ஏப்ரல், 2014

பெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் எதிராகத் தமிழ் சினிமா பிரயோ கித்துவரும் வன்கொடுமை


பெண்களைப் பற்றித் தமிழ் சினிமா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது? ஒரு பக்கம் பெண்களை வெறும் உடலாகப் பாவித்து
முடிந்தவரையில் அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது. இன்னொரு புறம் தாய்ப் பாசம், தங்கைப் பாசம் என்று பாச அபிஷேகம் செய்து ஆராதிப்பது. இவற்றுக்கு இடையே அடக்கம், பண்பு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிப் பாடம் எடுப்பது. இப்படியாகப் பெண்களைப் ‘பன்முகம்’ கொண்ட கோணங்களில் அணுகும் தமிழ் சினிமா இவற்றுக்கிடையில் இருக்கும் உள் முரண்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
இவை ஒரு புறம் இருக்க, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களைக் கேவலப்படுத்துவதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் பல திரைப்பட இயக்குநர்களும் வசனகர்த்தாக்களும். அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தில் ஒரு காட்சி. நாயகனை ஒரு போட்டியில் இடம்பெற வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு குழுவினர் அவனுக்குப் பணம் தருவதுடன் பல வசதிகளையும் செய்துதருகிறார்கள். இதுதான் சாக்கு என்று அவன் மேலும் பல வசதிகளைக் கோருகிறான். அப்போது அந்தக் குழுவில் இருக்கும் ஒருவன் தன் அருகே இருக்கும் பெண்னைக் காட்டி இப்படிச் சொல்கிறான்: “விட்டா இவளையும் கேப்ப போலருக்கே?”
அந்தக் குழுவினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள். தங்களைப் போலவே படித்த, தங்கள் குழுவில் ஒரு அங்கமாக உள்ள சக மனிதப் பிறவியைச் சட்டென்று ஒரு பண்டத்துக்கு நிகராகப் பேச அவனால் முடிகிறது. அதைக் கேட்டுக்கொண்டு அந்தப் பெண் சும்மாதான் இருக்கிறாள். அதற்கு நாயகன் சொல்லும் பதில் என்ன தெரியுமா?
“நல்லா இருந்தா கேட்டிருப்போம்ல?”
ஒருவன் தன்னுடைய சக ஊழியரும் தோழியுமான ஒரு பெண்ணைப் பண்டமாக்குகிறான். இவனோ அந்தப் பண்டம் நன்றாக இல்லை என்கிறான். அவளோ இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அசட்டுத்தனமாக நிற்கிறாள். பார்வையாளர்கள் கைதட்டிச் சிரிக்கிறார்கள்.
அதே படத்தில் இன்னொரு காட்சி. ஒரு பெண் தன் கணவனுடன் தொலைபேசியில் பேசுகிறாள். குளிக்கும்போது யாரோ தன்னை எட்டிப் பார்ப்பதாகப் புகார் செய்கிறாள். “விடுடி, அவன் ரசனை கெட்டவன்”“ என்கிறான் அந்தக் கணவன். இதற்கும் திரையரங்கில் வெடிச் சிரிப்பு.
என்ன எழுத்து இது? இதை எழுதுவது, நடிப்பது, ரசிப்பது ஆகியவற்றுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன? இந்த அளவுக்கா தமிழ் சினிமாவும் சினிமா ரசனையும் சொரணை கெட்டுப் போகும்?
கல்யாணத்துக்குப் பிறகு நிம்மதியே போச்சு, சுதந்திரமே போச்சு என்று ஆண்கள் புலம்புவதும் திரை நகைச்சுவையின் தவிர்க்க முடியாத அம்சங்களாக இன்று ஆகியிருக்கின்றன. கல்யாணத்துக்குப் பிறகு பெண்களின் நிம்மதி பற்றியோ சுதந்திரம் பற்றியோ ஒருவர்கூடப் பேசுவதில்லை. தமிழ் சினிமா என்பது திமிர் பிடித்த ஆண்களால் அப்படிப்பட்ட ஆண்களுக்காகவே எடுக்கப்படும் சமாச்சாரம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதில் வசீகரம் கூட்டவும் கேவலப்பட்டு நிற்கவும் மட்டும் பெண்கள் இவர்களுக்கு வேண்டியிருக்கிறது.
பெண்களை எப்படி வேண்டுமானாலும் கேவலப்படுத்தும் உரிமையை சினிமாக்காரர்களுக்கு யார் கொடுத்தது? பண்பாட்டைக் காப்பதற்காகச் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் தணிக்கைத் துறை இவற்றை எப்படி அனுமதிக்கிறது? பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் யதார்த்த்த்தில் இருக் கிறார்கள் என்பதை வைத்து இதை நியாயப்படுத்த முடியாது. ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரையாவது இழிவுபடுத்திப் பேசுபவர்களும் யதார்தத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இழிவுகளைப் பரிகாசம் என்ற பெயரிலோ யதார்த்தம் என்ற பெயரிலோ தணிக்கைத் துறை அனுமதிக்குமா? பெண்களை இழிவுபடுத்துவதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறது?
இவற்றை ஒப்புக்கொண்டு நடிக்கும் நாயக நடிகர்களும் நகைச்சுவை நடிகர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று பெண்கள் தைரிய மாகக் கூற வேண்டும். புதிதாக நடிக்க வருபவர்களால் அல்லது தனக்கென்று ஒரு இடத்தைப் பெறப் போராடிக்கொண்டிருப்பவர்களால் எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் முன்னணி நாயகிகளாவது இவற்றை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். இப்படிப்பட்ட வசனங்களைப் பேச மாட்டேன் என்று முன்னணி நயகர்கள் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நிஜமான நாயகர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா?
“பெண்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் வெளியில் வரு கிறார்கள். அவர்களிடம் மிருகத்தனமாக நடந்துகொள்வதன் மூலம் ஏன் அவர்களை மீண்டும் வீட்டுக்குள் தள்ளுகிறீர்கள்?” என்ற பொருள்படும் வசனம் ஒன்று கஜினி திரைப்படத்தில் வரும். அந்த வசனத்தை எழுதியவர் அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அவரது தயாரிப்பில் வந்திருக்கும் படம்தான் மான் கராத்தே. அதன் கதையை எழுதியவரும் அவரே. பெண்களைப் பண்டங்களாகவும் அழகாக இருந்தால்தான் அந்தப் பண்டங்களுக்கு மதிப்பு என்றும் ஒரு பெண்ணைக் குளிக்கும்போது எட்டிப் பார்ப்பது வெறும் ரசனை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் எழுதப்படும் வசனங்களும் பெண்கள் மீதான வன்முறைதான் என்பது முருகதாஸின் ஏழாம் அறிவுக்குப் புரியாதா?
இதே முருகதாஸ் தான் இயக்கிய துப்பக்கி படத்தில், நாயகன் உயர் அதிகாரியை மிரட்டும் இடத்தில் இப்படி வசனம் எழுதியிருப்பார்: “நான் உன்னை சுட்டா உன் பிள்ளைங்க சிக்னல்ல நின்னு பிச்சை எடுப்பாங்க, உன் மனைவி தெருவோரம் நின்னு கையைக் காட்டிக் கூப்பிடுவா” என்பார். அதாவது கணவனை இழந்த பெண்ணுக்குப் பாலியல் தொழிலே கதியாம். கஜினி வில்லனைவிடவும் மோசமான விதத்தில் பெண்களுக்கு எதிராக ஏவப்படும் வன்முறை அல்லவா இது? அவன் வெறுமனே மண்டையில்தான் அடித்தான். நீங்கள் அவள் சுயமரியாதையை, ஆளுமையை, நேர்மையை, கௌரவத்தை அல்லவா அடித்து நொறுக்குகிறீர்கள்?
அசிங்கம் என்று அப்பட்டமாகச் சொல்லி ஒரு பெண்னையோ ஒரு ஆணையோ திரையில் இழிவுபடுத்தி அதை வைத்துப் பலரைச் சிரிக்கவைக்க முயல்வதும் அருவருப்பான ரசனை என்பது ஒரு புறம் இருக்க, இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மேற்படிக் காட்சிகளில் இழிவுக்கு ஆளாகும் நடிக, நடிகைகளின் உளவியலில் இது ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தைப் பற்றி யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. கறுப்புத் தோல், எடுப்பான பற்கள், குண்டான உடல், மாறுகண், குள்ளமான உருவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவர்களைக் காட்டிக் கதாநாயகனையோ கதாநாயகியையோ உயர்த்தி வைக்கும் காட்சிகளில் மேற்படி இழிவுக்கு உள்ளாகுபவர்களின் மன வேதனையை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? ஒரு சில சித்தரிப்புகள் வாழ்நாள் முழுவதும் போக்க முடியாத கறையாக ஒருவரது ஆளுமையின் மீது படிந்துவிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சினிமாவில் வாய்ப்பு வேண்டுமே என்பதற்காகச் சிலர் இத்தகைய இழிவுகளைப் பொறுத்துக்கொள்ளலாம். அது அனுதாபம் கொள்ள வேண்டிய சமரசம். ஆனால் இப்படி இழிவுபடுத்துவது மன்னிக்க முடியாத அத்துமீறல்.
பெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் உடல் குறைபாடு உள்ளவர் களுக்கும் எதிராகத் தமிழ் சினிமா பிரயோ கித்துவரும் வன்கொடுமைக்குச் சினிமாக்காரர்களே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான நாகரிகமும் தீர்க்கமான சிந்தனையும் தைரியமும் கொண்ட நபர்கள் அங்கே இருக்கிறார்களா? tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: