வெள்ளி, 11 ஏப்ரல், 2014

ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் போராட்டம் ! ரூ.200, சாப்பாடு, தண்ணி எதுவும் தரல..

அன்னூர்: சாப்பாடு, தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, கோவை அருகே உள்ள காரமடையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் இருந்து பஸ்களில் பொதுமக்களை கட்சி நிர்வாகிகள் காரமடைக்கு அழைத்துச் சென்றனர். அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த எல்லப்பாளையம் சுப்ரமணிக்கவுண்டன்புதூர், வெள்ளாளபாளையம், காந்திகர் பகுதிகளைச் சேர்ந்த 650 பேர், 5 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு ரூ.200, சாப்பாடு, தண்ணீர் தருவதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தனர். இவர்கள் சென்ற பஸ், காரமடைக்கு முன்பாக உள்ள குமரன் குன்று பகுதி அருகில் சென்றது. அதற்குள் முதல்வர் ஜெயலலிதா கூட்டம் துவங்கி விட்டது.


இதனால் 5 பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. மாலை 5 மணி வரை பஸ்சுக்குள் மக்களை காக்க வைத்தனர். அதுவரை அவர்களுக்கு தண்ணீர், சாப்பாடு எதுவும் வழங்கவில்லை. பிறகு அதே பஸ்சில் அவர்களை மாலை எல்லப்பாளையம் அனுப்பி வைத்தனர். சாப்பாடு, தண்ணிதான் இல்ல..ரூ.200 பணமாவது கிடைக்கும் என மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் பணமும் வழங்கப்படாததால், பஸ்சில் இருந்து இறங்கியதும் மக்கள் ஆவேசமடைந்து 4 தனியார் பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுக்கு உறுதியளித்தபடி தண்ணீர், உணவு, பணம் வழங்காமல் அதிமுகவினர் கொடுமைப்படுத்தி விட்டீர்கள். பணம் மற்றும் இரவு உணவு கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்சி நிர்வாகிகள் அவர்களை கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். நீண்ட நேரம் போராட்டம் நடத்திய மக்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். dinakaran,com

கருத்துகள் இல்லை: