திங்கள், 7 ஏப்ரல், 2014

மாயமான விமான பயணிகள் உயிர் பிழைக்கும் அதிசயம் நடக்கலாம்: மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: தெற்கு இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்ததாக தெரியவில்லை. இருப்பினும் அதிசயங்கள் நடக்கும் என்று மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சீன மற்றும் ஆஸ்திரேலிய கப்பல்கள் கண்டறிந்தன. அதே போன்ற ஒலியை அமெரிக்க கடற்படையின் அதிநவீன கருவியும் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் கூறுகையில்,
விமானத்தில் பயணித்தவர்களில் யாராவது உயிருடன் உள்ளார்களா என்பதை அறியவே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி பயணிகள் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை.
நான் எப்பொழுதுமே சொல்வேன் அதிலும் குறிப்பாக பயணிகளின் குடும்பத்தாருக்கு சொல்ல விரும்புவது அதிசயங்கள் நடக்கும் என்பது தான். நாம் தொடர்ந்து நம்புவதுடன் உயிர் பிழைத்து யாராவது வர பிரார்த்தனை செய்வோம் என்றார்.
மலேசிய விமானத்தின் தேடல் இன்று 31வது நாளாக நடந்து வருகிறது. மொத்தம் 12 விமானங்கள் மற்றும் 14 கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை 2 லட்சத்து 34 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் தேடி வருகின்றன
விமானம் கடலில் விழுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அது கடலுக்குள் விழுந்து மூழ்கியதாக எப்படி அறிவிக்கலாம் என்று பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசை கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: