கள்ளக்குறிச்சி அருகே வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் தன் மனைவி, குழந்தை மதுமிதா (3) ஆகியோருடன் நிலத்திலேயே வீடுகட்டி வசித்துவருகிறார்.
கடந்த ஒரு வாரம் முன்பு 500 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மேல் கோணிப்பையை மூடிவைத்தார். தண்ணீர் கிடைக்காததால் மேலும் தோண்டும் பணியை நிறுத்திவிட்டார். 21 அடி வரை 9 இஞ்ச் அகலம் தோண்டி, பின்பு 6 இஞ்ச் என சுருக்கியுள்ளார். இனி இந்த ஆழ்துளை கிணறு தேவையற்றது என கருதிய ராமச்சந்திரன் துளையில் பொருத்திய பிளாஸ்டிக் பைப்பை நீக்கி விட்டார்.
தோண்டப்பட்ட குழாய் மட்டுமே அப்படியே இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை மதுமிதா அருகில் உள்ள ராமச்சந்திரன் தங்கை தங்கமணி வீட்டுக்குச் சென்று தன் அத்தையுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக ஆழ்துளை கிணற்றின் மேல் மூடிவைத்திருந்த கோணிப்பை மீது காலை வைத்து விட்டார். அப்போது அப்படியே 12 இஞ்ச் அகலமுள்ள ஆழ்துளையில் விழுந்துவிட்டார். சற்று தூரம் சென்ற அஞ்சலி திரும்பிபார்த்த போது ஆழ்துளை கினற்றில் கட்டப்பட்ட கோணிப்பையுடன் மதுமிதா உள்ளே விழுந்துவிட்டது தெரியவந்தது.
அப்போது மதுமிதாவின் அழுகுரல் மட்டும் கேட்டபடி இருந்தது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து கயிறு மூலம் மீட்க முயற்சித்தனர். ஆனால் கோணிப்பையுடன் சிறுமி விழுந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து 3 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.
விழுப்புரம் டிஎஃப்ஓ கணேசன் தலைமையில் தீயணைப்புதுறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 12 மணியளவில் மதுமிதாவின் அழுகுரல் நின்று விட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சுகாதாரத் துணை இயக்குநர் கோவிந்தன் தலைமையில் மருத்துவக்குழுவினர் 10 டாக்டர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் விரைந்து வந்தனர். சுமார் 15 அடிவரை சுலபமாகத் தோண்ட முடிந்தது. அதற்கு மேல் பாறை குறுக்கிட்டதால் டிரில்லர் மூலம் பாறை அகற்றப்பட்டு மீண்டும் தோண்டும் பணி தொடங்கியது. இதற்கிடையே குழந்தைக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் கேமரா அனுப்பப்பட்டு சிறுமியின் நிலையை அறிய முயன்றனர். எனினும், சிறுமி மீது கோணிப்பை சுற்றியிருந்ததால் அது இயலவில்லை.
பிற்பகல் மதுரையிலிருந்து வந்த மணிகண்டன் தலைமையிலான மீட்பு குழுவினர் போர்வெல் ரோபோ மூலம் மீட்க முயற்சி மேற் கொண்டனர். ஆனால் ரோபோ விற்கான பேட்டரியில் சார்ஜ் இல்லாததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெசிபி இயந்திரம் மூலம் மீண்டும் தோண்டும் பணி துவங்கியது. 28 அடி கடந்தவுடன் மீண்டும் பாறை குறுக்கிட்டதால் போர்ட்டபிள் டிரில்லர் மூலம் போகஸ் லைட் வைத்து மேலும் தோண்டும் பணி நடந்தது.
இத்தகவல் அறிந்த ஊரகத் தொழிற்துறை அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அழகுவேல் பாபு, விழுப்புரம் டிஐஜி முருகன், எஸ் பி மனோகரன், டிஆர் ஓ பிருந்தா தேவி, கள்ளக்குறிச்சி ஆர்டிஓ குணசேகரன், ஆகியோர் மீட்பு பணிகளைப் பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
பின்னர், 32 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழி வழியாக தீயணைப்பு வீரர்கள் இறங்கி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.45 மணியளவில் குழந்தையை மீட்டனர். சுமார் 18 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். tamil.thehindu.com/