புதன், 9 ஏப்ரல், 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்!

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புதேவன் தன் வழக்கமான குசும்புகளைக் கொண்டு கதையமைத்திருக்கும் திரைப்படம். திரையில் கதாபாத்திரங்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க தரையில் ரசிகர்கள் கலகலவென சிரித்து ரசிக்க, ‘பிளாக் காமெடி’ பாணியில் அமைகிறது படம். ரன் லோலா ரன் என்ற ஜெர்மானிய திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் கதையின் ஸ்டைலாக இருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் அசத்தியிருக்கிறார் சிம்புதேவன். இதற்கு முன்பு இதே வகையான திரைக்கதையமைப்பில் ஷாம் நடித்த 12பி வந்திருக்கிறது. பிரம்மாவை நாரதர் சந்திக்க வரும் நேரத்தில், இருவருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. விதி என்பது எழுதப்பட்டது என்பதானால். மனிதனின் வாழ்வில் நேரம் எப்படி மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதே அந்த கேள்வி. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சிவன் தன் திருவிளையாடலை நடத்திக் காட்டுகிறார்.



ஓப்பனிங்கே இப்படி புராணப்படமா இருக்கே என்று நினைக்க வேண்டாம். நம்ப முடியாத சில விஷயங்களையும் தன் காட்சிப்படுத்துதலின் மூலம் ரசிக்கவைப்பவர் சிம்புதேவன் என்பதை அவரின் முந்தய படங்கள் நீரூபித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரே கதைதான் ஆனால் அதற்கு மூன்றுவிதமான க்ளைமாக்ஸ்! தன் காதலியான அஷ்ரிதா ஷெட்டிக்கு கல்யாணம் என்று தெரிந்ததும், தன் நண்பர்களோடு சேர்ந்து காதலியை கடத்த திட்டமிடுகிறார் அருள்நிதி. இப்படி செய்தால் பணம் கொடுக்கிறேன் என்று அருள்நிதிக்கு ஆசைகாட்டுகிறார் அஷ்ரிதா ஷெட்டி தந்தையின் பிசினஸ் எதிரி.

ஒரே கல்லில் ஒரு மாங்காயும் ஒரு தேங்காயும் அடிக்க நினைக்கிறார் அருள்நிதி. அந்த மாங்காயும் தேங்காயும் கைக்குக் கிடைத்ததா என்பதை அடுத்தடுத்த கலகலப்பான காட்சிகள் சொல்கிறது. 


அருள்நிதி புறப்பட்ட நேரத்தில் சென்றிருந்தால் என்ன நடக்கும், அவர் சற்று தாமதமாக சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும், அவர் சற்று முன்னதாகவே புறப்பட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற மூன்று கதைகள் படத்தில் சொல்லப்படுகிறது.

வடிவேலு பாணியில் ‘மறுபடியும் மொத்தல்ல இருந்தா...’ என்று இரண்டு முறையும் நம் தலையில் கைவைக்க... ரசிக்கும்படியான சுவாரஸ்யமான திரைக்கதையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் இயக்குனர். நல்லவேளை நான்காவது கதை இல்லாமல் போனது. 

அருள்நிதி சொன்னதை மட்டும் செய்திருக்கிறார், தேவாலயத்தில் துப்பாக்கி இருப்பது தெரியவந்ததும், டுமீல் டுமீல் என சிறுவர் விளையாட்டு விளையாடுவது சிரிக்க வைக்கிறது. அதிக மேக்கப் இல்லாமல் பேண்ட்டு சட்டையோடு ரௌவுடியைப் போலவரும் பிந்துமாதவியைப் பார்க்க மனம் வலித்தாலும், நல்லாவே நடித்திருக்கிறார். 


நம்மை அதிகம் சிரிக்க வைப்பது பகவதி பெருமாள் எனும் பக்ஸ் தான்! திரு திருவென சீரியஸா முழிக்கிற ஆளப் பார்த்தாலே சிரிப்பு தான் வருது. சண்டை போடும் வில்லன்களிடம் தன் சாக்ஸை அவர்கள் மூக்கில் வைத்து தப்பிக்கிறாரே... சரவெடியாய் பறக்கிறது கைத்தட்டல்! படுக்கையில் உயிருக்கு போராடும் அருள்நிதியின் அம்மா உட்பட சீரியஸ் காட்சிகளில் சரமாறியாக சிரிக்கப்போவது உறுதி.

மீண்டும் ஒரு வித்தியாசமான படத்துடன் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்! 

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - 100% சிரிப்பு

கருத்துகள் இல்லை: