புதன், 30 அக்டோபர், 2013

சுப்ரீம் கோர்ட்டு:சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு விலக்கு ??????

புதுடெல்லி,
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில்  நேரில் ஆஜர் ஆவதில் இருந்து, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி நியமனத்துக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், அக்டோபர் 1–ந்தேதியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.பி.முடிகவுடரை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

இந்த வழக்கை விரைவில் முடிக்கும் வகையில் ஜி.பவானிசிங் அரசு வக்கீலாக தொடரலாம் என்றும், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா செப்டம்பர் 30–ந்தேதியன்று ஓய்வு பெறுவதால் அவருடைய பதவிக்காலத்தை நீட்டிப்பதை கர்நாடக அரசு பரிசீலிக்குமாறும் செப்டம்பர் 30–ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை மீறும் வகையில் அக்டோபர் 3–ந்தேதியன்று நீதிபதி முடிகவுடரை நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் நீதிபதி முடிகவுடர் அக்டோபர் 30–ந்தேதியன்று ஜெயலலிதா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தனி கோர்ட்டில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். எனவே, கோர்ட்டில் நேரில் ஆஜர்ஆவதில் இருந்து அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’’.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
விதிமுறைகள் மீறல்
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ‘‘நீதிபதி முடிகவுடர் நியமனம் குறித்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் அதிகாரபூர்வமான கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படாமலும் விதிமுறைகளை மீறியும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையிலும் இந்த நியமனத்தை செய்திருப்பதாகவும்’’ குற்றம் சாட்டினார்.
எனவே, 30–ந்தேதி (இன்று) தனி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சான்றுகள் உள்ளதா?
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘‘நீதிபதி முடிகவுடர் நியமனத்தில் கர்நாடக அரசு மற்றும் பெங்களூர் உயர்நீதிமன்றம் ஆகியவை விதிமீறல்களில் ஈடுபட்டதற்கு ஏதேனும் சான்றுகள் இருக்கின்றதா? தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அதுபோன்ற சான்றுகள் எதுவும் பெறப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
வெறும் ஊகத்தின் அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது என்றும், தேவையான ஆவணங்களை முறையாக பெற்று நாளை கோர்ட்டில் தாக்கல் செய்தால் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நிதிபதிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு விலக்கு
மேலும் இந்த வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கோர்ட்டில் இன்று ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: