வியாழன், 31 அக்டோபர், 2013

தேர்தல் ஆணையம் நடிகர்கள் கிரிகெட்டு வீரர்கள் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய கட்டுபாடு விதிக்கிறது !

புதுடில்லி : தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும், பிரபல நடிகர், நடிகைகள்,
விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியலை, முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நட்சத்திரங்களை மட்டுமே பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் கெடுபிடி விதித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல்: டில்லி, ராஜஸ்தான், மத்தி பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், இம்மாதம் நடைபெறவுள்ளன. இதில், மூன்று மாநிலங்களில் காங்கிரசும், இரு மாநிலங்களில் பா.ஜ., வும் ஆட்சி செய்கின்றன. இம்முறை எப்படியும் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ.,வும், இருக்கும் இடங்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பீதியில், காங்கிரசும், தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மத்திய அரசின் ஊழலை பட்டியலிட்டும், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முன்னிறுத்தியும், பா.ஜ., மக்களிடையே ஓட்டுகளை சேகரித்து வருகிறது.
காங்., வியூகம்: பா.ஜ., வின் தேர்தல் வியூகங்களை உடைக்கவும், மோடி அலையை சமாளிக்கவும், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த, காங்., முயற்சித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், பா.ஜ., வும் சில நட்சத்திரங்களை, தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, தீவிரம் காட்டி வருகிறது. இதை தவிர, டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஏழை மக்கள் கட்சியும், சில முக்கிய பிரபலங்களை, பிரசாரத்தில் ஈடுபடுத்த தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து, தேர்தல் ஆணையம், சமீபத்தில் சில விதிமுறைகளை வெளியிட்டது. அதில், நட்சத்திரங்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தும் செலவுத் தொகை, அரசியல் கட்சியை சேர்ந்தது என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு கட்சியினரும், ஏராளமான நட்சத்திரங்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தலாம் என்பதால், தேர்தல் ஆணையம், இதற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள்:

பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதிகபட்சமாக, 20 நட்சத்திரங்களை மட்டுமே, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ், பா.ஜ., போன்ற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அதிகபட்சமாக, 40 நட்சத்திரங்களை பிரசாரத்தில் பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப் போகும் நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் முன் கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின், கொடுக்கப்படும் பெயர் பட்டியல், நிராகரிக்கப்படும். அரசியல் கட்சிகள், அந்த நபர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாலைமுரசு.com

கருத்துகள் இல்லை: