புதன், 30 அக்டோபர், 2013

கேரளா சிறுமியை 40 நாட்களில் 400 தடவைக்கும் மேலாக கற்பழித்தவர்களுக்கு ( குரியன் MP உட்பட) எந்த தண்டனையும் இல்லை ?


அந்தக் கொடூரம் நிகழ்ந்து, 17 ஆண்டுகள் ஆகி விட்டன. அவளை சீரழித்த,
40க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், வழக்கை விசாரித்த போலீசார், தீர்ப்பு வழங்கிய நீதித் துறையினர், அந்தப் பெண்ணை சுமையாக கருதும் பெற்றோர் தவிர, வேறு யாருக்கும், 'இந்தப் பெண் தான், சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்' என, தெரியாது.யாருக்குமே நிகழக் கூடாத அந்த கொடுமை, அந்தச் சிறுமிக்கு, 16 வயதில் நிகழ்ந்தது.அந்தச் சிறு வயதில் குழந்தைகள் அறிந்திராத, 'அந்த' வக்கிரம், அந்தச் சிறுமிக்கு, 40 நாட்களில், 400 தடவைக்கும் மேலாக நடந்தது. கட்டிளம் காளைகள் முதல், வயது முதிர்ந்த பெருசுகள் வரை, போலீஸ்காரர்கள் துவங்கி, போலீஸ் அதிகாரிகள் வரை, தெருவோர பிச்சைக்காரன் முதல், பெரும் கோடீஸ்வரன் வரை, அனைத்து தரப்பு அக்கிரமக்காரர்களால், அந்தப் பிஞ்சு சேதப்படுத்தப்பட்டது.
அந்தச் சிறுமி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். இயேசு கிறிஸ்துவுக்கு பயந்த, பைபிளும் கையுமாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளின் தந்தை, இடுக்கி மாவட்டம், மூணாறு நகரில், போஸ்ட்மாஸ்டராக
பணியாற்றிக் கொண்டிருந்தார்; தாய், மருத்துவமனை ஒன்றில், நர்சாக பணியாற்றி வந்தார்.சூரியநெல்லி என்ற அந்த கிராமத்திலிருந்து, நகரில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவதை, வழக்கமாக கொண்டிருந்த அந்தச் சிறுமி, தன் வீட்டு போட்டோ ஆல்பம் ஒன்றை, 'பஸ்சில் போகும் போது
பார்க்கலாம்' என எண்ணி, புத்தகப் பையில் எடுத்துச் சென்றிருந்தாள்.அதை, 'பள்ளிக்குக் கொண்டு சென்றால், ஆசிரியை திட்டுவார்' என கருதி, தன்னுடன் தினமும் பஸ்சில் பயணிக்கும், சக மாணவி ஒருவரிடம் கொடுத்து, மறைவாக வைத்திருக்கும் படி கூறினாள்.

கண்டக்டர்:

என்ன காரணத்தாலோ, அந்தச் சிறுமியால், அந்த நாளில், அந்த ஆல்பத்தை, மாணவியிடம் இருந்து பெற முடியவில்லை. அந்த மாணவியும் அதை, தினமும் பஸ்சில் பயணிக்கும் போது, பழக்கப்பட்ட கண்டக்டர் ராஜு என்பவனிடம் கொடுத்து, 'நாளை, என் தோழி பஸ்சில் வரும் போது, கொடுத்து விடுங்கள்!' என கூறியுள்ளாள்.அதைப் பெற்றுக் கொண்ட அந்த கொடூர மனம் படைத்த கண்டக்டர், அந்த ஆல்பத்தை வைத்தே, அந்தச் சிறுமியை சிதைக்க முடிவு செய்தான்.மறுநாள், பள்ளிக்குச் செல்ல பஸ்சில் ஏறிய சிறுமியை அணுகிய அந்த கண்டக்டர், 'உன் குடும்ப ஆல்பத்தைப் பார்த்தேன்; எவ்வளவு நல்ல குடும்பம்! அதில் நீ, ரொம்ப அழகாக இருக்கிறாய்! உன்னை விட, உன் அக்கா, மிகவும் அழகாக இருக்கிறாள்' என கூறியுள்ளான். இதனால் கோபம் அடைந்த அச்சிறுமி, 'அந்த ஆல்பம் உன் கையில் எப்படி கிடைத்தது?' என, கோபமாக கேட்க, 'ஆல்பம் என்னிடம் தான் இருக்கிறது; அது உனக்கு திரும்ப வேண்டுமானால், நான் சொல்லிய படி நடக்க வேண்டும். இன்று மாலை, பள்ளி முடிந்ததும், நான் சொல்லும் இடத்திற்கு வா; ஆல்பத்தைத் தருகிறேன்' என, கூறியுள்ளான்.'ஆல்பம் இல்லாமல் வீட்டுக்குச் சென்றால், பெற்றோர் கோபப்படுவரே...' என எண்ணிய அச்சிறுமி, அதைப் பெற, அந்த நயவஞ்சகன் கூறிய, அந்த இடத்திற்கு சென்றாள். சில புத்தம் புது ஆடைகளுடன், அங்கு காத்திருந்த கண்டக்டர் ராஜு, ஆடைகளைக் காண்பித்து, அந்தச் சிறுமியை ஏமாற்றி, காதலிப்பதாக கூறினான்.அதை, உண்மை என, நம்பிய அச்சிறுமி, ஆல்பத்தை மறந்து, ஆபத்தில் சிக்கினாள்.'இரவு நேரமாகி விட்டதால், வீட்டுக்கு செல்ல முடியாது; வா, என் வீட்டுக்கு!' என அந்தச் சிறுமியை, ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற அவன், அன்றே தன் பசியைத் தீர்த்தான்.அவன் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமலோ அல்லது தப்பித்தால், குடும்ப மானத்தை வாங்கி விடுவேன் என அவன் மிரட்டியதாலோ, அவன் இழுத்த இழுவைக்கெல்லாம், அந்தச் சிறுமி இணக்கமானாள்.தன் பசியைத் தீர்த்த அந்த கண்டக்டர், திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம், மூணாறு, கன்னியாகுமரி, கம்பம், தேனி என, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று, ஓட்டல்களில் தங்க வைத்து, பலருக்கும் விருந்தாக்கினான்.

போலீசில் புகார்:

ஒவ்வொரு முறை ஒவ்வொருத்தனுக்கு படையல் செய்யப்பட்ட பிறகு, கருத்தடை மாத்திரைகளை கொடுத்ததால், அந்தச் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானது.இதற்கிடையே, பள்ளிக்குச் சென்ற மகளைக் காணாமல் துடித்த பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர்.'உங்கள் மகள், கண்டக்டர் காதலன் ராஜுவுடன் ஓடிப் போய் விட்டாள்' என, போலீசார் கூறியதைக் கேட்டு அதிர்ந்தனர் அந்தப் பெற்றோர்.தங்கள் மகளுக்கு நேர்ந்த கதியை பற்றி அறியாமல், 'ஓடியவள்; அப்படியே ஓடட்டும்; நாங்கள் அவளை கைகழுவி விட்டோம்' என, கோபத்தில் கொதித்து, பாராமுகமாக, எவ்வித தேடுதல் முயற்சியும் இல்லாமல் இருந்து விட்டனர்.இப்படியே, 40 நாட்கள் ஆயிற்று.ஒருநாள் வீட்டு வாசலில் மயங்கிய நிலையில், உடலில் ரத்தம் சுண்டிப் போய், உடல் முழுவதும், காயங்களுடன், பித்து பிடித்தது போல் கிடந்த மகளைப் பார்த்ததும், அந்த பெற்றோர் அலறித் துடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான், அந்தச் சிறுமி, கும்பல்களால் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்தச் சிறுமியை வேட்டையாடியவர்களின் பெயர் பட்டியலைப் பார்த்த போலீசார், 'இந்த வழக்கு, நமக்கு சிக்கலை ஏற்படுத்தும்' எனக் கருதி, 'ஏனோ தானோ'வென விசாரிக்கத் துவங்கினர்.கொஞ்சம் கொஞ்சமாக, ஊடகங்கள் வாயிலாக வெளியே வந்த இந்த கொடுமை, கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ராஜ்யசபா துணைத் தலைவர், பி.ஜே.குரியன் உட்பட, பல அரசியல் தலைவர்கள், போலீசார், பணக்காரர்கள் என, பட்டியல் நீண்டதால், வழக்கு விசாரணையும் சூடுபிடித்தது.கடந்த, 1996ல் இந்த கொடூரம் நிகழ்ந்தது. 2000ம் ஆண்டில், சிறப்பு கோர்ட், 36 பேரை, குற்றவாளிகள் என அறிவித்தது; அதில், குரியன் பெயர் இல்லை. ஆனால், ஐந்தாண்டுகளில், சிறையில் இருந்தவர்கள் அனைவரையும், ஐகோர்ட் விடுவித்தது.அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்கு என்பதால், விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 'எனக்கும், அந்தச் சிறுமிக்கும் சம்பந்தமில்லை' என, குரியன் முதற்கொண்டு, பலர் கூறினர்.ஆனால், அந்தச் சிறுமியை, குரியனிடம் கூட்டிச் சென்ற, வழக்கறிஞர், தர்மராஜன் என்பவன், குரியனின் முகத்தை அம்பலப்படுத்தினார். இதையடுத்து, குரியன் உட்பட சிலர் மீது, கோட்டயம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.குரியனை காட்டிக் கொடுத்த தர்மராஜனை பிடித்து, போலீசார் உள்ளே தள்ளினர்.ஏராளமானோர் தொடர்புடைய இந்த வழக்கில், தர்மராஜன் மட்டும் தான், தண்டனை அனுபவித்தார். குரியன் உட்பட, மற்றவர்கள் தப்பி விட்டனர்.அதை எதிர்த்து, அந்தச் சிறுமி... இல்லை, அவர் இப்போது பெண்ணாக மாறிவிட்டார்... கேரள ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கும், தள்ளுபடி செய்யப்பட்டது.காரணம், தர்மராஜன், சாட்சியம் அளிக்கும் போது, 'அந்தச் சிறுமியை நான், குரியனிடம் கூட்டிச் செல்லவில்லை; முன்னர் கூறியது பொய் சாட்சியம்' என கூறியதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது; நியாயமும் தள்ளுபடியாகி விட்டது.எனினும், மேல் முறையீடு செய்ய, அந்தப் பெண் தயாராகிவிட்டார்.

'சுற்றுலா தலமாகி விட்டது எங்கள் வீடு!'

பெற்றோர் குமுறல்:யாருக்குமே எங்கள் கதி ஏற்படக் கூடாது. இரண்டு மகள்கள் எங்களுக்கு. இளையவளுக்கு இப்படியாகி விட்டதால், மூத்த மகள் மிகவும் கலங்கிப் போனாள். எங்களுடன் தங்கியிருந்தால், தன் எதிர்காலம் பாதிக்கப்படும் என கருதி, அவள் தனியே சென்று விட்டாள். போனில் தினமும் பேசிக் கொள்வோம். எப்போதாவது தான் சந்திப்போம்.மூணாறுக்கு சுற்றுலா வரும் பயணிகளை, ஆட்டோ டிரைவர்கள் அழைத்து வந்து, சூரியநெல்லியில் உள்ள எங்கள் வீட்டின் முன் நிறுத்தி, 'இது தான், சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடு' என, கூறும் அளவிற்கு, எங்கள் வீடு சுற்றுலா தலங்களில் ஒன்றாகி விட்டது.இதனால், வெளியே வரவே அஞ்சிய நாங்கள், எங்களின் சொந்த வீட்டை, அடிமாட்டு விலைக்கு விற்று, கோட்டயத்தில், ஒதுக்குப்புறமாக பதுங்கி வாழ்கிறோம். என் மகள், பொது இடங்களுக்குப் போக மாட்டாள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில், அவளுக்கு, அரசு வேலை கிடைத்தது.அலுவலகத்திற்கு செல்வாள்; மாலையில் தந்தையுடன், வீடு திரும்பி விடுவாள். பலருக்கும் அவள் தான், பலாத்காரத்திற்கு ஆளானவள் என தெரியாது; தெரிந்தால், இன்னமும் தொந்தரவு அதிகம் என்பதால், தினமும் பயந்து பயந்து சாகிறோம்.

தினமும் மரண தண்டனை:

கோட்டயத்தில், வருமான வரித்துறையில், அலுவலக உதவியாளராக நான் வேலை பார்க்கிறேன். அங்கு வரும் நபர்கள், என்னைப் பார்த்தால், எனக்கு வியர்த்து கொட்டும்; என்னை முன்பே அறிந்தவராக இருக்குமோ என, மனம் பதைபதைக்கும். அலுவலகம் முடிந்ததும், பஸ்சில் ஏறி, எங்கள் ஊர் பஸ் ஸ்டாப்பில் இறங்குவேன். இருசக்கர வாகனத்துடன் அப்பா காத்திருப்பார். யாருக்கும் தெரியாமல், வீடு போய் சேர்ந்து விடுவேன்.ஓட்டல் சாப்பாடு, சினிமா, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி, கேளிக்கை என, எதுவும் கிடையாது.என்னை நாசப்படுத்தியவர்களுக்கு, எந்த தண்டனையும் இல்லை; ஆனால், நான் தினமும், மரண தண்டனை அனுபவிக்கிறேன். இருந்த போதிலும், என் நிலை வேறு பெண்ணுக்கு வரக் கூடாது என்பதற்காக, நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன்.

தவிக்கிறார் தந்தை:

எந்த தந்தைக்கும் என் நிலை வரக்கூடாது. ஆசையாக வளர்த்த என் மகளை, 50க்கும் மேற்பட்டவர்கள் சிதைத்ததை விட, அந்த வழக்கு விசாரணைக்காக, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.இரவு, பகல் பாராமல், போலீசார் எங்கள் வீட்டுக் கதவை தட்டுவர்.யாரையாவது ஒருவனை இழுத்து வந்து, இவன் உண்மை கற்பழித்தானா என, எங்கள் மகளிடம் கேட்பர்.விசாரணை என்ற பெயரில், அருவருப்பான கேள்விகளைக் கேட்பர். பயங்கர குற்றவாளிகள், கொடூரர்களுடன், போலீஸ் வேனில், முகத்தை மூடிய படி நாங்கள் இருப்போம். எனக்கு நன்கு கேட்கும் வகையில், என் மகளை, மோசமாக பேசுவர், குற்றவாளிகள். அவர்களை, போலீசார் கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கு, இப்போது, 70 வயதாகி விட்டது. 17 ஆண்டுகளாக நரக வேதனை அனுபவித்து வருகிறேன். இன்னும் சில ஆண்டுகள் தான் இருப்பேன்; அதற்குப் பிறகு, என் மகளுக்கு இந்த உலகில் யார் பாதுகாப்பு?

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: