வியாழன், 31 அக்டோபர், 2013

லோக்சபா தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடும் ! ஐந்து முனை போட்டி ? தினமலர் செய்தி

லோக் சபா தேர்தலில், ஐந்து முனைப் போட்டி ஏற்படலாம். அ.தி.மு.க.,வை போல், தி.மு.க.,வும் தனித்துப் போட்டியிடும் நிலை வரலாம். அதை மனதில் கொண்டு, தேர்தல் பணியை துவங்குங்கள் என, கட்சியினருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கட்டளையிட்டுள்ளார். அறிவாலயத்தில், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், அவர் ஆலோசனை நடத்திய போது, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலுக்கான, கூடடணி உத்திகள் குறித்து, ஒவ்வொரு கட்சியிலும் ஆலோசனை நடந்து வருகிறது. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று முடிவு செய்து விட்டது. டில்லியில் நேற்று, மார்க்சிஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும், அ.தி.மு.க., பங்கு கொண்டு, அதை உறுதிப்படுத்தி உள்ளது.பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., வலுவான கூட்டணியை அமைக்க விரும்பியது. ஏற்கனவே, தி.மு.க., அணியில், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், காங்.,-தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இணைத்து, அணியை வலுவடையச் செய்வதற்கான, பேச்சு வார்த்தைகளை, தி.மு.க., துவங்கியது. இந்த முயற்சி நடந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரசும், தே.மு.தி.க.,வும் தனியாக பேசி, தங்களுக்கு இடையே ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தகவல், தி.மு.க., தலைமைக்கு தெரியவந்தது.
மீண்டும், தி.மு.க.,வுடன் அணி சேர விரும்பாத காங்., தலைவர் ராகுல் தரப்பில், விஜயகாந்த்துக்கு, புதிய யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரு கட்சிகளும், சம அளவில் தொகுதிகளை பிரித்து, தேர்தலை சந்திக்கலாம்' என்ற, அந்த யோசனைக்கு, விஜயகாந்த் தரப்பும், பச்சைக்கொடி காட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, டில்லி தேர்தலை பயன்படுத்திக் கொள்ள விஜயகாந்த் விரும்பினார். "10 தொகுதிகளில் போட்டி' என்று அறிவித்து விட்டு, டில்லி சென்ற விஜயகாந்த், வேட்பாளர் அறிவிப்பை வெளியிடாமல், திரும்பியதற்கு காரணம், அங்கு, காங்கிரசை ஆதரிக்க, விஜயகாந்த் முன்வந்துள்ளது தான் என்கின்றனர்.

அதிருப்தி:

இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட, இந்த திடீர் மாற்றம், தி.மு.க.,வை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்கும்படி கருணாநிதி கேட்டு, கடிதம் எழுதி, ஒரு மாதம் முடியப் போகிறது. இதுவரைககும், இந்த, இரண்டு கட்சிகளும், தங்கள் பதிலை சொல்லாமல் இழுத்தடிக்கின்றன. இதுவும், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியை அதிகமாக்கியுள்ளது.இந்நிலையில், தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகளுடன், நேற்று முன்தினம், அறிவாலயத்தில், கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது, லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றிய முக்கிய முடிவை, கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி பேசிய விவரம் குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம் என்ற எதிர்பார்ப்பில், பா.ஜ., இருந்தது. ஆனால், ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் சேர்த்துக் கொண்டுள்ளார். அதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், நம்முடன் வராது. காரணம், ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஜெயலலிதா ஏற்கனவே, எம்.பி., பதவி கொடுத்து விட்டார். இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி, அந்த எம்.பி., பதவிக்காக, அ.தி.மு.க.,வுடன் இருக்க விரும்புகிறது. விஜயகாந்த்தை நம்பி நாம் இருக்க முடியாது. அவர், உறுதியான முடிவெடுக்கக் கூடியவராக தெரியவில்லை. மேலும், காங்கிரசுடன் அவர் ரகசியமாக பேசி வருகிறார். அந்த கட்சிகள் சேர்ந்து, தனி அணி அமைக்கலாம்.ராமதாஸ், ஏற்கனவே, ஜாதி சங்கங்களை சேர்த்து, ஒரு கூட்டணியை அமைத்து விட்டார். எனவே, பா.ம.க.,வையும் நாம் எதிர்பார்க்க முடியாது. பா.ஜ.,வுடன் வைகோ சேர்வார். மோடியை நம்பி, அந்த அணி, தேர்தலை சந்திக்கும். மீதம் இருப்பது நாம் தான். நம்முடன் ஏற்கனவே சில கட்சிகள் இருக்கின்றன. அந்த கட்சிகளின் துணையுடன், இந்த தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை தான் வரக்கூடும். அதாவது, லோக்சபா தேர்தலில், ஐந்து முனைப் போட்டி என்பதை மனதில் கொண்டு, தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும். ஏறக்குறைய தனித்துப் போட்டி என்ற அளவிலேயே, தி.மு.க.,வின் தேர்தல் வியூகம் அமையலாம். எனவே, ஐந்து முனைப் போட்டிக்கு தயாராக இருக்குமாறு, நமது கட்சியினரை இப்போதே தேர்தல் பணியை துவங்கச் சொல்லுங்கள். இப்போது, நமது கட்சியில், உள்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. அதை காரணம் காட்டி, லோக்சபா தேர்தல் பணிகளை முடக்கி விட வேண்டாம். கட்சித் தேர்தல் முக்கியமல்ல.இவ்வாறு, கருணாநிதி கூறியதாக, அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: