திங்கள், 3 ஜூன், 2013

கிருஷ்ணகிரியில் பவித்ரா கௌரவ கொலை என சந்தேகம்


கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவரது மகள் பவித்ரா (17). ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி ப்ளஸ் 2 படித்து வந்த இவர் 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிய பவித்ரா நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, பவித்ராவை காணவில்லை.இந்நிலையில், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் உள்ள ஆலப்பட்டியை அடுத்த வெப்பாலம்பட்டியில் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., சந்தானபாண்டியன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், எஸ்.ஐ., சுரேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது, இறந்து கிடந்தது மாணவி பவித்ரா என்பது தெரியவந்து,
பிறகு பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். எஸ்.பி., செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சுமார், 200 மீட்டர் தூரம் ஓடிய நாய் பின், உடல் இருந்த இடத்துக்கே வந்து நின்றது. இறந்த மாணவியின் உடை எதுவும் களையப்படவில்லை. கால் பெருவிரல்கள் மற்றும் கழுத்தில் காயம் இருந்ததால், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம், என்று போலீஸார் தெரிவித்தனர்.
காதல் பிரச்சனையில் அவரை காதலித்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், மகளின் காதலை அறிந்த பெற்றோர்களே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: