திங்கள், 3 ஜூன், 2013

கலைஞர் 90 வது பிறந்த நாள் செய்தி: என்னை வாழ்த்துவது போல் எல்லோரும் ஒருவரை ஒருவர் வாழ்த்த வேண்டும்


நெஞ்சு இருக்கும் வரை, நீதி நிலைக்கும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன் என்று சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம் (முதல் பதிப்பு) மற்றும் சிறுகதைப் பூங்கா ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ச.மோகன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார்.
முதல் பிரதியை பேராசிரியர் மா.நன்னன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தி.மு.க.வினர் மேடையில் தி.மு.க. தலைவர் கலைஞரிடம் பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் கலைஞர் ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

நான் ஆற்ற இருப்பது ஏற்புரை அல்ல, ஏய்ப்புரை, கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளால் நான் களைத்து போய் உள்ளேன். நீங்களும் களைத்து போய் இருப்பதால், உங்களை மேலும் களைப்படைய வைக்க விரும்பவில்லை. இந்த விழாவில் நெஞ்சுக்கு நீதி புத்தகமும், சிறுகதைப் பூங்கா ஆகிய இரண்டு புத்தகங்களும் தலா 144 வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 700 வசூலாகி உள்ளது. அச்சகத்திற்கு, விற்பனையாளர்களுக்கு போக மிச்சம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பத்திரிகை மூலம் வெளியிடப்படும். இந்த விழாவில் புத்தகத்தை எழுதிய என்னை பாராட்டி பலர் பேசி உள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தற்போது 5-ம் பாகத்தை நிறைவு செய்து வெளியிட்டுள்ளேன்.
6-ம் பாகம் எழுதப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் நீங்கள் போராட வேண்டும். 6-ம்பாகம் கண்டிப்பாக வரும். தற்போது வெளியான புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பேராசிரியர் நன்னன் தெரிவித்தார். சில கருத்துகள், எண்ணங்கள் ஆய்வு செய்து எதிர்காலத்தில் அடுத்த வெளியீட்டில் திருத்தி அமைக்கப்படும். நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் 5-பாகங்களிலும் 3,816 பக்கங்கள் எழுதப்பட்டுள்ளது. நெஞ்சு இருக்கும் வரை நீதி நிலைக்கும் வரை எழுதி கொண்டே இருப்பேன்.
என்னை வாழ்த்தியது போல், நீங்களும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதுடன், நாம் ஒற்றுமையாக இருந்து சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நன்னனை பொறுத்த வரையில் பெரியார் காலம் தொட்டு சகோதர உணர்வோடு பழகி வருபவர், அவரது மனதில் இருந்தே, மனப்புழகத்துடன் கருத்து வெளியாகி உள்ளது. அவரது காலத்திலே ஒற்றுமை உணர்வோடு இயக்கத்தை வழிநடத்துவோம் என்று உறுதி கூறுகிறேன். ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், பேராசிரியர் நன்னன் ஆகியோர் பேசினர். முன்னதாக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் வரவேற்றார். விழாவில் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சீதைப் பதிப்பகம் ராஜசேகரன் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை: