ஞாயிறு, 2 ஜூன், 2013

ஞானி : மாபியாகளின் கறுப்பு பண சலவைக்கு cinema துணை போகிறதா?

இந்திய சினிமா தோன்றி 100 வருடங்கள் ஆவதை இந்திய அரசு டெல்லியில்
இந்த  மே மாத ஆரம்பத்தில் ஒரு விழா நடத்திக் கொண்டாடியது. தாதா சாகிப் பால்கே 1913ல் ராஜா ஹரிச்சந்திரா என்ற பேசாத படத்தை உருவாக்கியதே முதல் படமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல் பேசாத படத்தை உருவாக்கிய நிகழ்வு 1917-18ல் நடராஜ முதலியாரால் நடத்தப்பட்டது. அவர் தன் உறவினரான நாடகாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் யோசனையைக் கேட்டு கீசக வதம் கதையைப் படமாக்கினார்.
நூறாண்டுகளுக்கு முன்னால் முதல் சினிமா இந்தியாவில் உருவானபோது இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. உலக அளவில் சிறந்த இலக்கியத்துக்கான நோபல் பரிசு கவி ரவீந்திரநாத் தாகூருக்கு அறிவிக்கப்பட்டது அந்த ஆண்டுதான். தாகூருக்கு அப்போது அளிக்கப்பட்ட பரிசுத்தொகையின் அளவு அன்றைய சுமார் இரண்டு லட்சம் ரூபாய். பால்கே தன் முதல் படத்தை அன்று தயாரிக்க ஆன செலவு 15 ஆயிரம் ரூபாய் !
இந்திய இலக்கியம் உலக உச்ச அங்கீகாரத்தை எட்டிய நேரத்தில்தான் சினிமா குழந்தை தவழ ஆரம்பித்தது. நூறு வருடங்கள் கழித்து இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1500 படங்கள் தயாரிக்கப்படுகின்றன. மிக சிறிய படத்தின் சராசரி தயாரிப்புச் செலவு ஒரு கோடி ரூபாய். இந்தியாவின் உச்சமான இலக்கிய விருதான ஞானபீட விருதில் பரிசுத் தொகையாக அளிக்கப்படுவது ஏழு லட்சம் ரூபாய். பத்து கோடி செலவில் தயாரிக்கப்படும் படத்தில் கூட கதாசிரியர் எழுத்தாளருக்கு ஏழு லட்ச ரூபாய் கிடைப்பது அரிது. இன்று நோபல் பரிசின் அளவு சராசரி தமிழ் சினிமா பட்ஜெட் அளவுதான் :ஆறு கோடி ரூபாய் !

இந்தியாவில் இலக்கியத்தின் தரம் பல மொழிகளில் உலகத் தரத்தை எட்டியும் கடந்தும் எல்லாம் போயிருந்தாலும், அதற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரமும், சன்மானமும் குறைவாகவும் குறைந்துகொண்டே போவதாகவும் உள்ளன.  ஆனால் நேர் மாறாக சினிமாவின் தரம் உலக சினிமாவின் தரத்தை எட்டவே இல்லையென்றாலும், அதற்குக் கிட்டும் சமூக வழிபாடும், பொருள் குவிப்பும் பிரும்மாண்டமாக இருக்கின்றன.
இந்த சூழலில் இந்திய சினிமா நூற்றாண்டில் நாம் எதைக் கொண்டாடுவது ? சினிமாவின் வணிக வெற்றியையா? அரசுக்கு  பெரும் தொகையை வரி கட்டுவதையா? இன்னும் பெரும் தொகையைக் கணக்கில் காட்டாத கறுப்புப் பணமாக புழங்கவிடுவதையா?ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அளிப்பதையா ? அரசியல் முதல் அதிகார வர்க்கம் வரை, வள்ளல்கள் முதல் தாதாக்கள் வரை ஊடுருவியிருக்கும்சமூக விரோத மாஃபியாக்களின் பணச் சலவைக்கு உடந்தையாக இருப்பதையா? எதைக் கொண்டாடுவது ?
எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டுப் படைப்பைக் கொண்டாடலாம்தான். ஏனென்றால் மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமா வடிவம்தான்.
சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு பல காலம் முன்பிருந்தே இசை, ஓவியம் சிற்பம், கவிதை, இலக்கியம், நடனம் எனப் பல வடிவங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு மனித மனதை மகிழ்விக்கவும் வளப்படுத்தவும் பலப்படுத்தவும் பயன்பட்டு வந்திருக்கின்றன. அறிவியலின் பல பிரிவுகளான இயற்பியல், வேதியியல், கணிதம் என்று ஒவ்வொன்றிலும் புதுப்புது கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு அவை மனித வாழ்க்கையில் அன்றாடம் பயன்படும் பொருட்களை உதவிகரமான அமைப்புகளை  ஏற்படுத்த பயன்பட்டிருக்கின்றன.
சினிமா ஒன்றுதான்  தனக்கு முன்பு வரை இருந்த அத்தனை கலைகளையும் அத்தனை அறிவியல் கோட்பாடுகளையும் இணைத்துப் பயன்படுத்தி உருவான வடிவம். காமெரா முதல் கம்ப்யீட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் ப்ரொஜெக்‌ஷன் வரை  அதில் அறிவியலின் எல்லா  பழைய புதிய, கோட்பாடுகளும் செயல்படுகின்றன. இசை முதல் இலக்கியம் வரை  கதக் முதல் களரி வரை அத்தனை கலையம்சங்களும்  பயன்படுத்தப் படுகின்றன. அதனால்தான் வேறு எந்த ஒற்றை கலை வடிவத்தையும் விட எளிதாக எல்லாரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் வலிமையும் செல்வாக்கும் சினிமா வடிவத்துக்கு இருக்கிறது. அதில் செயல்படும் ஏதோ ஒரு கலையம்சமோ அறிவியல் அம்சமோ தூக்கலாக இருந்தால் விமர்சிக்கிறோமே தவிர, அது முற்றாக இருக்கக் கூடாது என்று சொல்லவே முடியாத அளவுக்கு எல்லா அம்சங்களுக்கும் தன்னுள் தேவை இருக்கும் வடிவமாக சினிமா இருக்கிறது.
ஆரம்ப நாட்களில் சினிமா பார்க்க மக்கள் எளிதில் முன்வரவில்லை. பயந்தார்கள். அருவெறுத்தார்கள். அவர்களை ஈர்க்க பத்துப் பதினைந்து நிமிடத் துண்டுப் படங்களுக்கு முன்னும் பின்னுமாக நடன நிகழ்ச்சிகள், சர்க்கஸ் காட்சிகள், சொற்பொழிவுகள் எனப் பலவற்றைக் கதம்பமாகக் கொடுத்து வரவழைத்தார்கள். விடிய விடிய கூத்து பார்த்த மக்களுக்கு பத்து நிமிடக் குறும்படம் போதாது என்று மூன்று மணி நேரப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். இதை வைத்து பணம் திரட்ட முடியுமா என்று ஆரம்பத்தில் கவலைக்குரியதாக இருந்த வடிவம், இன்று பிரும்மாண்டமாக பணம் திரட்டும் வர்த்தகமாகிவிட்டது.
உலகம் முழுவதும் சினிமா ஒரு பிரும்மாண்டமான வணிகம்தான். ஆனால் 25 வருட வரலாறு, பொன்விழா வரலாறு, நூற்றாண்டு வரலாறு என்று கொண்டாடும்போது  அதன் வணிக வெற்றியை யாரும் கொண்டாடுவதில்லை, படைப்புரீதியான வடிவ வெற்றியில் அடைந்த மைல் கற்களையே நினைத்துப் பார்க்கிறார்கள். தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் இரு வருடங்கள் தொடர்ந்து கொட்டகையில் காட்டப்பட்டதை வரலாற்றுக் குறிப்பாக எழுதலாம். ஆனால் தமிழின் சிறந்த 100 படங்களில் கூட ஒன்றாக ஒரு போதும் அது இடம் பெறவே பெறாது.
உலகம் முழுவதும் வணிக சினிமா ஆதிக்கம் செலுத்தினாலும், சிறந்த படங்கள் என்று தரப்படுத்தும்போது பட்டியலிடும்போது படங்களின் வணிக வெற்றிக்கோ தோல்விக்கோ இடமில்லை. ஒரு படைப்பாக அதன் வடிவ மொழியில், அதன் கலையம்சங்களில், அதன் அறிவியல் உத்திகளில், அது முன்வைக்கும் மதிப்பீடுகளில் எந்த தரத்தை எட்டுகிறது, இவற்றின் வழியே ஒட்டு மொத்தமாக பார்வையாளருக்கு எத்தகைய மேன்மையான அனுபவத்தை தருகிறது என்ற அடிப்படையிலேயே படங்கள்  சிறந்த படமாகக் கருதப்படுகின்றன.
இன்று உலக அரங்கில் இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்புகளைக் கொடுத்த சினிமா மேதைகளாகப் பார்க்கப்படுவோர் யாரும் வணிக சினிமாவின்  அங்கங்களாக இருப்போர் அல்ல. வணிக சினிமாவிலிருந்தும் பலர் கொண்டாடப்படுவதற்கு உரியவர்கள்தான். கொண்டாடப்படுவார்கள். அது அவர்கள் அந்த எல்லைக்குள்ளே நின்று  அதன் அதிகபட்ச உச்சங்களை அடைந்ததற்காக மட்டும்தான்.
இப்படிப் பார்க்கும்போது இந்திய சினிமாவில் ஒட்டு மொத்த சினிமா மொழியில் சிறந்த தரத்தை எட்டியவராக சத்யஜித் ரே எப்போதும் கொண்டாடப்படுகிறார். அவரையடுத்து அதே வழிமுறையில் வந்தவர்களாகவும் தத்தம் பங்களிப்புகளை வித்யாசமாக அளித்தவர்களாகவும் மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஷ்யாம் பெனகல்,  மணி கவுல், கௌதம் கோஷ், கிரீஷ் காசரவள்ளி, புத்ததேவ் தாஸ்குப்தா, அபர்ணா சென் என்று நீண்ட பட்டியலாகப் பல படைப்பாளிகள் உள்ளனர். வணிக இந்தி சினிமாவின் சாதனையாளர்களாக, ராஜ்கபூர், சாந்தாராம், குரு தத் தொடங்கிப் பலர் இருக்கின்றனர்.
இதே போல தமிழில் பார்க்கும்போது  நம்மிடம் வணிக சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று  சாதனை செய்தவர்கள் பட்டியலை மட்டுமே போட முடிகிறது. ஏழை படும் பாடு படத்தை எடுத்த ராம்நாத் முதல், ஸ்ரீதர், பீம்சிங், பாலசந்தர், பாரதி ராஜா, ருத்ரய்யா, மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா, வசந்தபாலன், ராதாமோகன், பாலாஜி சக்திவேல் என்று நாம் நமது ரசனைத் தேர்வுப்படி என்ன பட்டியல் போட்டாலும், அவர்களெல்லாம் வணிக சினிமாவின் வடிவ மொழிச் சட்டகத்துக்குள்ளேயே இயங்கி  அந்த வடிவம் சார்ந்த வெற்றியை மட்டுமே கண்டவர்கள்தான் என்பதே அப்பட்டமான உண்மை.
சத்யஜித் ரேவும் சென்னும், பெனகலும் செய்து பார்த்த சினிமாவுக்கு நிகரானதாகச் சொல்ல தமிழில் நமக்கு எதுவும் இல்லை. அந்த திசையிலான முயற்சிகளாக நடந்த ஒரு சில உண்டு. ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், பாபு நந்தன்கோடின் தாகம், சிங்கிதத்தின் திக்கற்ற பார்வதி, ஜெயபாரதியின் குடிசை, அம்ஷன் குமாரின் ஒருத்தி எல்லாமே அந்த திசையில் மிக பலவீனமாகத் தோற்றுப் போன முயற்சிகள்தான். வணிகத்திலும் வடிவத்திலும் தோற்றவை.
மலையாளத்திலும் மராத்தியிலும் கன்னடத்திலும் அசாமியிலும், ஒடிசாவிலும், வங்காளத்திலும் ரே-சென் -பெனகல் வகையிலான முயற்சிகளை வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கும் மூத்த, இளம் இயக்குநர்கள் படைப்பாளிகள் பலர் வந்திருக்கும் சூழலில், தமிழில் மட்டும் அப்படி இன்று வரை நிகழமுடியாமற்போனதன் காரணங்கள் என்ன ?
மறைந்த நண்பரும் சினிமா விமர்சகர்-ஆய்வாளருமான அறந்தை நாராயணன் ஒருமுறை எழுதியது போல தமிழில் திறமையான நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், எடிட்டர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தில் இத்தனை திறமையாளர்களும் ஒன்று சேர்ந்து எப்படி மோசமான படைப்பை உருவாக்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை என்று அவர்  அங்கலாய்த்திருப்பார்.
உண்மைதான். இங்கே திரைப்படத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் திறமையானவர்களுக்கு பஞ்சமே இல்லை.  ஆனால் கூட்டாக ஒரு தரமான படைப்பை உருவாக்கத் தடையாக இருப்பவை என்னென்ன என்றே நாம் யோசிக்கவேண்டும்.
இன்னும் ஐந்து வருடங்களில் தமிழின் முதல் சினிமாவின் நூற்றாண்டை நாம் கொண்டாடும்வேளையில் அந்தத் தடைகளைக் கண்டறிந்து நீக்கியிருப்போமா ? இதற்கு பதில் கிடைத்திருக்குமா? ஐந்து வருடங்களில் இப்படி ஓர் ஐந்து படங்களையேனும் உருவாக்கித் தரக் கூடிய ஐந்து படைப்பாளிகளைத் தமிழகத்தால் கண்டறியமுடியாதா? கண்டறிவோம்.படைப்புக்கான சூழலை உருவாக்குவோம். அதன்பின் கொண்டாடுவோம்.

கருத்துகள் இல்லை: